21

உயிர் தப்பிய கவிதை

ஷக்தி

அருகம்புல் கோலேச்சும் நிலம் போலானதல்ல
இக்கவிதை
பூக்களையோ பனிதுளிகளையோ விரும்பியதில்லை
இக்கவிதை
கடவுளர்கள் கோலேச்சும் நரகத்திலிருந்தோ
சாந்தரூப கடவுளின் நந்தவனத்திலிருந்தோ
அது வந்திருக்கலாம்
காற்றின் வேகத்தில் கண்கள் காறியுமிழும் கண்ணீருக்கும்
குரூரம் ஊறிய ஆதிக்க உமிழ்வுக்கும் பேதமறியவில்லையது
ஊமையின் சொல்ல முடியாத வார்த்தையாய்
எந்தப் பயனுமற்று வந்திருக்கலாம் அது
தர்மம் தொலைய சூது கவ்விய சமூகத்தின்
அபயக் குரலில் மொழிப்பயின்று
அக்கினி மழையில் நனைந்து உருக்குலைந்து
மீண்டும் காணாதிருக்க விழி பிடுங்கியெறிந்த
போர்க்களத்தில் குற்றுயிராய் உயிர் தப்பிய கவிதையிது
சவத்திற்கும் மயானத்துக்கும் இடையே சிக்கிய
நாளைக்கான வார்த்தைக்கு பதுங்குகிறது
மயானத்தின் தாழ்வாரத்தில் எரிகிறது அது சவமாய்
அதன் அதிகபட்ச தேடலென்பது
ஓர் அரவணைப்பும் ஓர் ஆறுதல் வார்த்தையும்
செல்லவோ சொல்லவோ ஏதுமில்லை
உங்களில் யாராவது அரவணைக்க இயலுமா?
என் கவிதைகளை.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book