28

எண்ணியாங்கு என்கொலல்

வெ. இராதாகிருஷ்ணன்

புதிய ஊர் ஒன்றில் புதிய வேலை முடிவாகி இருந்தது. தற்போது செய்து கொண்டு இருக்கும் வேலையை விடவும் சிறப்பானதாக, பிடித்தமானதாக இருந்தது உடனே வேலை மாற்றலுக்கு ஒப்புக் கொள்ள ஒரு காரணமாகி இருந்தது. இந்த வேலையில் சேர்ந்து சில மாதங்கள் பின்னர் மணமுடிப்பது என முடிவு பண்ணப்பட்டு இருந்தது. புதிய ஊர் எப்படி இருக்கிறது எனப் பார்க்க முதல் முறையாக புதிய ஊருக்குச் சென்ற போது வழியில் ஒரு தனி மரத்தின் காட்சி மனதில் ஒரு பிரியத்தை உண்டு பண்ணியது.

சாலையில் இருந்து வண்டிப் பாதை ஒன்று அந்த மரம் இருந்த நிலம் ஒட்டி செல்கிறது. எதற்கு இந்த மரம் இங்கு இருக்கிறது, எவர் நட்டு வைத்தது என்கிற வரலாறு எவரும் எழுதவில்லை. அந்த மரத்திற்கு சற்று தொலைவில் தெற்கு திசையில் ஒரு வீடு தெரிந்தது. அவ்வீட்டில் இருந்துதான் ஊரே ஆரம்பிக்கிறது. அந்த ஊரைத் தாண்டிச் சென்றால் தான் மாற்றலாகிச் செல்லும் ஊர் ஐந்து கிமீ தொலைவில் வரும்.

நிலம் குறித்து ஊரில் சென்று விசாரித்ததில் குப்புசாமி நிலம் என்றும் அந்த மரத்தைச் சுற்றி அரை கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் அவரது நிலப்பரப்பினை எவரும் பராமரித்து வருவதில்லை என்றும் சொன்னார்கள். யார் அந்த குப்புசாமி என்று கேட்டால் ஒரு வீடற்ற வீடு ஒன்றைக் காட்டி, பட்டணத்திற்குச் சென்று இருப்பதாக சொன்னார்களேயன்றி எந்த ஊர் என்று சொல்லவில்லை. இதற்கு முன்னர் எப்போது ஊருக்குள் வந்தார் என்று கேட்டபோது மூன்று வருடங்கள் இருக்கும் என்றே தோராயமாகச் சொன்னவர்கள், எவரிடமும் அவர் பேசவில்லை என்று சொன்னார்கள். எப்போது ஊரைவிட்டுப் போனார் என்றபோது பத்து வருடங்கள் இருக்கும் என கணக்கிட்டார்கள். குப்புசாமியின் உறவினர்கள், பிள்ளைகள், மனைவி எவரேனும் உள்ளனரா என ஊரில் விசாரிக்கையில் யாரும் இல்லை என கைவிரித்தார்கள்.

வீடற்ற வீடு. சுவர்கள் இடிந்து விழுந்து கிடந்தன, அங்கிருந்த கற்களை எவரேனும் எடுத்துச் சென்று இருக்கலாம். வீடற்ற வீட்டின் நான்கு திசைகளிலும் மூன்று அடிகள் இடம் விடப்பட்டு இருந்தது. வீடற்ற வீட்டினைச் சுற்றிச் சுற்றி வரத் தோன்றியது. சூரியனின் ஒளி நேரடியாக எல்லா பரப்பிலும் அந்த வீடற்ற வீட்டில் விழுந்து கொண்டு இருந்தது. 400 சதுர அடியில் சதுர வடிவமாக அவ்வீடு அமைந்திருக்கலாம். அங்கே முட்செடிகள் வளர்ந்து இருந்தன. ஆடுகள் சில அதைத் தமது இருப்பிடமாகக் கொண்டிருந்தன‌.

மீண்டும் அதே தனி மரம். மரத்தின் இலைகள் கீழே விழுந்து கொண்டு இருந்தன. அந்த இலைகளுக்கு மரத்தின் கிளைகள் மீது பிடிமானமோ அல்லது மரத்தின் கிளைகளுக்கு இலைகள் மீது பிடிமானமோ இல்லாது இருக்கலாம். அன்றைய தினத்தில் மிகவும் கடுமையான வெயில் அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் நிழல் தாண்டி கீழே விழுந்த இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்கனவே இருந்த சருகுகளுடன் சருகுகளாக மாறிக் கொண்டிருந்தன‌. காற்று வீசுகிறதா இல்லையா என்று மரத்தின் இலைகள் பார்த்தோ சருகுகள் பார்த்தோ சொல்ல இயலவில்லை. அத்தனை நிசப்தமாக எல்லாம் நடந்து கொண்டிருந்தன.

புதிய ஊர் சென்று பார்த்து விட்டு அதே வழியில் திரும்புகையில் சற்று மெதுவாக காற்று வெப்பத்தைத் தூக்கிக் கொண்டு வீச ஆரம்பித்தது. நேரம் ஆக ஆக காற்றின் வீச்சு அதிகரிக்கவே சருகுகள் காற்றில் எந்த திசையில் பறக்கிறோம் என்கிற எண்ணம் ஏதும் இன்றிப் பறக்கத் தொடங்கின. இனி அந்தச் சருகுகளுக்கும் மரத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

இலைகள் உதிர்த்துவிட்ட மரமோ எவ்விதப் பிரக்ஞையும் இன்றி பல வருடங்களாக இப்படியே நின்று கொண்டு இருப்பதாகவும், எவரும் இதனுடைய பூக்கள், காய்கள், கனிகள் பறித்ததே இல்லை எனவும் வருடம் தோறும் தவறாமல் மூன்று முறை இலைகள் உதிர்த்தும், பூக்கள் உதிர்த்தும் கனிகள் உதிர்த்தும் தனது காலத்தைத் தள்ளிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார்கள். உதிர்ந்த கனிகளை எவரும் எடுத்துச் சென்றதாகத் தெரியவில்லை எனவும், இந்த மரத்தில் எந்த ஒரு பறவையும் வந்து உட்கார்ந்து சென்றதாக எவரும் சொல்லவில்லை. பெரும்பாலான கனிகள் அங்கேயே அழுகி மட்கிப் போனது உண்டு எனச் சொன்னார்கள். மரமற்ற மரம்.

குப்புசாமி குறித்து பல்வேறு இடங்களில் விசாரிக்கத் தொடங்கியாகிற்று. சில வாரங்களின் தேடலுக்குப் பின்னர் முதியோர் இல்லம் நடத்தி வரும் கோவிந்தன் மூலம் குப்புசாமி இருந்த இடம் கண்டுபிடித்தாகி விட்டது. தளர்ச்சி அடைந்த உடல். கண்ணாடி அணியாத கண்கள். தலையில் அடர்த்தி தளர்ந்தாலும் சடை வளர்த்த முடி. முகச்சவரம் செய்யாமல் நீண்ட தாடி வளர்த்து இருந்தார். பற்கள் சற்று உறுதியாகத்தான் இருந்தன. பார்ப்பதற்கு எப்படியும் எழுபது வயது இருக்கும் என கணிக்க முடிந்தது. அவரிடம் சென்று வீடற்ற வீடு, மரமற்ற மரம் குறித்து விசாரித்த போது நினைவுகள் இருக்கத்தான் செய்தது.

வீடும் நிலமும் வேணுமா என்றபோது பதில் சொல்ல முடியவில்லை. குரல் தளர்ந்து இருந்தது. உள்ளே சென்று பத்திரப்படுத்தப்பட்ட பத்திரம் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து காட்டி இந்த பத்திரம்தானே வேணும், என்னையவா எடுத்துக் கொள்ளப் போகிறாய் என்பது போல பார்வை. சற்று மனம் கனத்தது. கண்களில் ஈரம் நிறைந்து கொண்டது. ஒரு நிமிடம் என்று சொல்லியபடி அந்த முதியோர் இல்லத்தைச் சுற்றி வந்து கால்கள் அவரிடமே நின்றன‌‌‌. கோவிந்தனின் அனுமதி பெற்று குப்புசாமியை உடன் அழைத்துச் சென்று வீடற்ற வீடும், மரமற்ற மரம் கொண்ட நிலமும் கணிசமான தொகை கொடுத்து பெயர் மாற்றம் செய்தாகிவிட்டது. முதியோர் இல்லம்தனில் மீண்டும் சென்று சேர்ந்து கொண்டவர் அத்தனை பணத்தையும் கோவிந்தனிடம் கொடுத்தார். குப்புசாமி தான் இறப்பதற்கு முன்னர் இதைச் செய்ய வேண்டும் என்றே பேசிக் கொண்டு இருந்ததாகச் சொன்னார் கோவிந்தன்.

மரமற்ற மரம். நிலத்தினை அளந்து முடித்தாகிவிட்டது. ஒரு சில தினங்களில் சுற்றி கற்கள் நட்டு வேலி ஒன்று போடப்பட்டது. அந்த நிலத்தினை ஒட்டிச் செல்லும் வண்டிப் பாதையில் இருந்து நிலத்திற்குச் செல்லும் பாதை ஒன்று அமைத்தாகி விட்டது. மரத்தில் இருந்த காய் ஒன்றை பறித்துக் கடித்த போது கசப்பாக இருந்தது. நெல்லிக்காய் போல கடித்து விட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும் என்ற எண்ணத்தில் தண்ணீர் குடித்தாலும் கசப்பு போகவில்லை. மற்றொரு கிளையில் கனி இருந்தது. பறித்து கடித்த போது அதை விடக் கசப்பாக இருந்தது. ஊரில் சென்று கேட்டபோது சுற்று வட்டாரத்தில் இப்படி ஒரு மரம் இல்லை எனவும் இம்மரத்தை கசப்பு மரம் என அழைப்பதாகவும் சொன்னார்கள். பட்டுப் போன நிலத்தை வாங்கினால் வாழ்க்கைப் பட்டுப் போகும் – குப்புசாமி போல என ஊர் முழுக்க பேசத் தொடங்கினார்கள்.

வீடற்ற வீடு. முட்செடிகளை வெட்டியாகி விட்டது. ஆடுகள் ஓடி மறைந்தன. ஒரு சமையல் அறை, சின்ன வரவேற்பறை, சின்னப் பூஜை அறை, சின்ன கழிப்பறை எனக் கீழேயும், மாடியில் கழிப்பறைகள் கூடிய இரண்டு படுக்கை அறைகள். மேலே ஓடு மேய்ந்து கட்ட எத்தனை நாட்கள் ஆகும் என விசாரித்தபோது மூன்றே மாதங்களில் கட்டித் தருவதாக ஒரு கொத்தனார் சொன்னார். இது நடக்கக்கூடியக் காரியமாகத் தென்படவில்லை என அங்கிருந்தவர்கள் பேசினார்கள். கொத்தனாரிடம் உறுதி கொடுத்தாகி விட்டது.

கசப்பு மரம். இந்த மரத்தின் காய், கனி ஏன் இத்தனை கசக்கிறது என இலைகள் மென்று பார்த்தபோது வாயில் வைக்க இயலவில்லை, அனிச்சைச் செயலாக அப்படியே துப்பிவிட வேண்டும் போலிருந்தது.

இந்த மரத்தினைச் சோதித்துவிட வேண்டும் என எண்ணம் கொண்டு இலைகள், காய், கனி என பறித்து ஆராய்ச்சி செய்து பார்த்த போது பைட்டோஸ்டீரால் (Phytosterol) எனும் வகை சார்ந்த β-சைட்டோஸ்டீரால் (β-Sitosterol) மற்றும் கேம்பஸ்டீரால் (Campesterol) பெருமளவில் இந்த இலைகள், கனி, காய்களில் இருப்பதாக ஆய்வின் முடிவு வந்தது. 100 கிராம் எடுத்துக்கொண்டால் தவிட்டு அரிசியில் 1 கிராம், கருதுதனில் 900 மில்லிகிராம், கோதுமையில் 500 மில்லிகிராம், கடலைப்பருப்பில் 200 மில்லிகிராம், பெரும்பாலான காய்கறிகளில், பழங்களில் அதிகபட்சம் 25 மில்லிகிராம் இவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கசப்பு மரத்தின் இலைகள், கனிகள், காய்கள் என எடுத்துக் கொண்டால் 100 கிராமிற்கு இலையில் 1 கிராம், கனியில் 5 கிராம், காய்தனில் 5 கிராம் என இருந்தது. இது மிக அதிகம்.

β-சைட்டோஸ்டீரால் கொலஸ்டீரால்

இந்த பைட்டோஸ்டீராலுக்கும் நமது உடலில் உள்ள கொலஸ்டீராலுக்கும் (Cholesterol) மூலக்கூறின் வடிவமைப்பில் ஒற்றுமை இருக்கிறது. இதன் காரணமாக இந்த பைட்டோஸ்டீரால் நமது உடல் செல்கள் கொலஸ்டீராலை உறிஞ்சுவதைத் தடுத்து, இரத்தத்தில் உள்ள கொலஸ்டீரால் அளவுதனை குறைக்கும் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு கிராம் இந்த பைட்டோஸ்டீரால் உட்கொண்டால் நமக்கு இருத நோய் வராமல் பாதுகாக்கும் எனவும் எல்டிஎல் (LDL – Low Density Lipoprotein) எனப்படும் புரதக் கொழுப்பின் அளவு குறையும் எனக் கண்டறியப்பட்டது. நமது உடலில் கொலஸ்டீரால் நமது செல்களின் உறைக்கு மிகவும் முக்கியமாகும். மேலும் ரத்தநாளங்களின் உறை, பாலின ஹார்மோன்களின் உற்பத்தி ஆகிவற்றுக்கும் அவசியமானதாகும். எப்படி இந்தக் கொலஸ்டீரால் நமது உடலுக்குப் பயன்படுகிறதோ அதைப்போல தாவரங்களின் செல்களின் உறை உருவாக்கத்திற்கு இந்த பைட்டோஸ்டீரால் உதவுகிறது.

இந்த கொலஸ்டீரால் கல்லீரலில் உற்பத்தி செய்யப்பட்டு தானாக இந்த ரத்த நாளங்கள் செல்ல இயலாத காரணத்தினால் எல்டிஎல் (LDL) போன்ற புரதக் கொழுப்பு எடுத்துச் செல்கிறது. அங்கே அளவுக்கு அதிகமான கொலஸ்டீரால் இருந்தால் அதை எச்டிஎல் (HDL – High Density Lipoprotein) எனும் புரதகொழுப்பு மீண்டும் கல்லீரலுக்குக் கொண்டுவந்து கொலஸ்டீராலை சிதைவுமாற்றம் செய்கிறது.

LDL (Orlova EL et.al., 1998 PNAS vol 96 no 15 p8420-8425)

மிக அதிகப்படியான கொலஸ்டீரால் மற்றும் டிரைகிளிசிரைடு இருந்தால் அவை ரத்தநாளத்தில் படிந்து, நாளத்தினை மூடி இருதய வலி ஏற்படுத்தி மரணம் உண்டு பண்ணும் அளவு சென்று விடும். எனவே தான் நமது உடலில் கொலஸ்டீராலின் டிரைகிளிசிரைடு அளவு எப்போதும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான எல்டிஎல் கெட்டது எனவும் அதிகமான எச்டிஎல் நல்லது எனச் சொன்னாலும் இரண்டும் போதிய அளவு தேவை, அதே வேளையில் கொலஸ்டீரால் உற்பத்தி அளவோடு இருக்க வேண்டும். கொலஸ்டீரால் அளவுதனைக் குறைக்க ஸ்டாடின் எனும் மருந்து உபயோகத்தில் உள்ளது. இவை கொலஸ்டீரால் உற்பத்திக்கு உதவும் வினையூக்கிகளை தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்டது.

சிம்வசாடின்

பைட்டோஸ்டீரால் இந்த ஸ்டாடின் போலச் செயல்படுவதில்லை. டிரைகிளிசிரைடு (Triglyceride <1.7mmmol/L) எனப்படுவது நமது உடலில் சேரும் கொழுப்பு. இது நமது உடலுக்கு சக்தியை வழங்கக்கூடியது. இது அளவுக்கு அதிகமாக அதிகமாக இருதய சம்பந்தமான பிரச்சினைகள் உண்டு பண்ணக் கூடியவை ஆகும். அதிக கொலஸ்டீரால் மற்றும் அதிக டிரைகிளிசிரைடு உடலில் இருந்தால் அதிக பாதிப்பு உண்டாகும்.

டிரைகிளிசிரைடு

இத்தகைய தன்மை கொண்ட இந்த மரத்தின் விதைகளை எங்குமே பரப்பி இருக்கவில்லை எனத் தெரிகிறது. அதே நிலத்தில் வேறு மரங்கள் உருவாகவும் இல்லை என்ற போது சற்று ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலத்தில் எங்கேனும் தண்ணீர் இருக்கிறதா என ஆராய்ந்தபோது நீர் ஓட்டம் எங்கும் இல்லை என சொன்னார்கள். இப்படி மரமற்ற மரத்தின் நிலத்தில் எல்லாவித ஆய்வும் நடந்து கொண்டு இருக்கையில் ஊரில் நிலைமட்டம் வரை வீடு கட்டப்பட்டுவிட்டது.

மூன்று மாதத்தில் எப்படி வீடு கட்டுவார்கள் என சவால் விட்டவர்கள் கொத்தனாரிடம் வீடு மழைக்கு, காத்துக்கு விழப்போகுது என கேலி பேசிச் சென்றார்கள். வீடு பலமில்லாமல் கட்டப்படவில்லை என கொத்தனார் உறுதி கொடுத்துக்கொண்டு இருந்தார். புதிய தொழில்நுட்ப முறையில் கம்பிகள் கொண்டு கட்டப்படுவதால் பல ஆண்டுகள் வீடு உறுதியாக நிற்கும் என அவர் சொன்னபோது அந்த வழியாகச் சென்ற ஒருவர் “அந்த கசப்பு மரத்தை வெட்டிப் போடு, வெங்காயம்” என சொல்லிச் சென்றார். அதற்கு கொத்தனார் எக்காரணத்தைக் கொண்டும் அந்த மரத்தை வெட்டிப்போட வேணாம் என அச்சத்தில் சொன்னார். மரம் உறுதியாக வெட்டப்படமாட்டாது எனக் கொத்தனாரிடம் உறுதி அளிக்கப்பட்டது.

இப்படி நடந்து கொண்டிருந்த சமயத்தில் தனிமரத்தினைப் பார்த்த 55வது நாளில் புதிய வேலைக்கு சேர்ந்தாகிவிட்டது. அவ்விடந்திலிருந்து வேலை செல்ல மூன்று மணி நேரம் கணக்கானது, ஆதலினால் ஓரளவுக்கு முழுமையாக கட்டப்பட்ட வீட்டில் பால் காய்ச்சி தேவையான பொருட்களுடன் தங்கியாகிவிட்டது. பூச்சு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. இன்னும் பத்து பதினைந்து நாட்களில் வண்ணம் தீட்டிவிடலாம் என கொத்தனார் தன்னிடம் ஆள் இருப்பதாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். கசப்பு மரத்திற்கு வேறு ஒரு பெயர் தேடி பைட்டோ மரம் என ஊரில் பரப்பிவிடப்பட்டது. சிறுவர்களிடம் சொல்ல அதை அவர்கள் பைட்டோ பைட்டோ என எப்போதும் சொல்ல ஆரம்பித்து இருந்தார்கள்.

உடல் கொழுப்புதனை குறைக்கும் வல்லமை கொண்ட மரம் இது என மெதுவாக பரப்பிவிடப்பட்டது. இந்த பைட்டோஸ்டீரால் எந்த அளவுக்கு உடலுக்கு நல்லது என முழு விபரம் தெரியாத காரணத்தினால் பழங்களை அளவோடு உட்கொள்வது நல்லது என சொன்னாலும் கசப்பு என்பதால் எவரும் எடுத்துக் கொள்ள முன் வரவில்லை. ஊரில் ஒருவர் கொழுப்புச் சத்து தனக்கு அதிகம் இருப்பதாகவும் எந்த மருந்தும் கட்டுப்படுத்தவில்லை எனவும் சொன்னதால் பழத்தினை பொடிப் பொடியாக்கி கொஞ்சம் தர கண்களை மூடி உட்கொண்டவர் தினம் கொஞ்சம் கொஞ்சம் தரவேண்டிக் கேட்டுக்கொண்டார். இப்படியாக ஊரில் இருந்த சிலர் பைட்டோமரத்தின் கனிகள் உட்கொள்ள ஆரம்பித்தார்கள்.

வீடு சரியாக எண்பதாம் நாளில் முடிவுக்கு வந்து பிரமாதமாக காட்சி அளித்தது.

பாறைகளில் இருந்துதான் இந்தக் கனிமங்கள் சிதறி அவை நிலத்தில் மூழ்கி பின்னர் தாவரங்கள் உருவாக காரணமாக இருந்தது என ஒரு தரிசு நிலம் பண்பட்ட நிலம் ஆன வரலாறு குறிப்பிடுகிறது. அதுபோலவே பண்பட்ட நிலம் சரிவரப் பராமரிக்கப்படாமல் போனால் அது தரிசு நிலம் ஆகும் தன்மை கொண்டது என இந்த பைட்டோமரத்தின் நிலம் வரலாறு எழுதிக்கொண்டு இருந்தது.

எந்த நிலத்தில் நீர் ஓட்டம் இல்லை என சொன்னார்களோ அதே நிலத்தில் ஈரப்பதம் அற்ற நிலம் எனில் இந்த மரம் எப்படி இத்தனை நாட்கள் நிற்கும் என வேறு ஒருவர் சொல்லிக்கொண்டே நீர் ஓட்டம் இருப்பதாக காட்டப்பட்ட இடத்தில் தோண்டப்பட ஐம்பது அடிகளில் தண்ணீர் வரத்து உண்டானது. கல்லுதரை எனச் சொல்லி இத்தனை வருடங்கள் மறுக்கப்பட்ட நிலமானது சிலர் மூலம் உழுது போட முடிந்தது. அந்நிலத்தில் பைட்டோமரத்தின் விதைகளை வரிசைப்படி எல்லாம் நட்டு வைத்தாகிவிட்டது. இனி இந்த விதைகள் வளரும் என்றோ வளராது என்றோ ஆருடம் சொல்ல இயலாது. போதிய கனிமங்கள் இருக்கும் எனில் பைட்டோமரம் அங்கே ஒரு தோப்பாகும். பட்ட நிலம் இனி பைட்டோ நிலம் ஆகும்.

ஊரில் இருந்தவர்கள் நெருங்கி வந்து பேசத் தொடங்கினார்கள். “ராசி இல்லாத வீடு, ராசி இல்லாத நிலம்னு பேசிட்டுத் திரிஞ்சோம்” என அங்கலாய்த்தார்கள். பைட்டோ கனிகள் உட்கொண்ட சிலர் கொழுப்புச் சத்து கணிசமான அளவு குறைந்துவிட்டதாக சொன்னார்கள். இருப்பினும் இந்த பைட்டோஸ்டீரால் குறித்த முழு ஆய்வு வெளியாகும்வரை கவனமாக உடற்பயிற்சி, உணவு எடுத்துக்கொள்ளும் அளவு போன்றவைகளில் கவனம் செலுத்துவது நல்லது எனச் சொல்லப்பட்டது.

பூமி ஒரு காலகட்டத்தில் ஏதுமற்ற நிலப்பரப்பாக இருந்ததுதான். கரியமிலவாயுவை உட்கொள்ளும் முன்னர் வைரஸ் எனும் புரத அமைப்பு கொண்ட நுண்ணுயிர் தோன்றி அதற்குப் பின்னர் பாக்டீரியாக்கள் தோன்றி இந்த கனிமங்கள் தாவரங்கள் உருவாக்கி தாவரங்கள் விலங்குகள் உருவாக்கி மனிதர்கள் உருவாக்கி மனிதர்கள் தொழில்நுட்ப அறிவு வளர்த்து எத்தனயோ சாதனைகள் என இந்தப் பூமியில் நிகழ்த்தி இந்த பிரபஞ்சத்தின் ரகசியம் கண்டறிந்து கொண்டதாய் அறிவியல் எழுதிக்கொண்டு இருக்கிறது.

எவரின் எண்ணப்படி இவை எல்லாம் நடந்து கொண்டு இருந்தது, இருக்கிறது! அந்தக் கசப்பு மரம் பைட்டோமரம் ஆனது, வீடற்ற வீடு ஒரு பிரமாதமான வீடாக அதுவும் குறிப்பிட்ட தினங்களில் உருவானது எவரது எண்ணப்படி? ஒரு மனிதர் தனது வாழ்நாளில் அற்புதமான எண்ணங்கள் கொண்டு அந்த எண்ணப்படி வாழ்ந்திட எவருக்கு நன்றியுடன் இருத்தல் அவசியம்? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து கொண்டு இருந்தது. சில வாரங்களில் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் ஆனது.

விதைகள் ஒன்றுகூட சோடை போகாமல் முளைவிடத் தொடங்கின. கசப்புத்தன்மை கொண்டிருப்பதால் எந்த ஒரு விலங்கோ, பறவையோ பைட்டோமரத்தின் அருகில் செல்லாமல் இருந்துதுள்ளன‌. ஆனாலும் நோய் தீர்க்கும் அபூர்வ குணம் கொண்டு இருந்தது பைட்டோமரம். இந்த மரத்திற்கு இந்த எண்ணம் எவர் கொடுத்தது எனத் தெரியாது, எவருக்கு இந்த மரம் நன்றி நவில வேண்டும் என மரத்திற்கும் புரியாது.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book