10

ஏறுவெயில் : வெயிற்காயும் கண்ணீர்த் துளிகள்

கவின் மலர்

வீடு என்றாலே துயரங்களைக் கோருவது. குடும்பம் என்பதே காவு கேட்பதுதான். ஒரு மனிதருக்கான துயரங்கள் எங்கிருந்து துவங்குகின்றன, அதன் ஆதாரம் எது என்று ஆழமாகச் சென்று வேர்களைத் தேடிப் பார்த்தால் அது குடும்பம் அல்லது குடும்பம் சார்ந்த மனிதர்கள் குறித்ததாகவே பெரும்பாலும் இருக்கும்.

பெருமாள்முருகனின் ‘ஏறுவெயில்’ நாயகன் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில் துவங்குவது கல்லூரியில் பயில்கையில் முடிகிறது. இடைப்பட்ட சில ஆண்டுகளில் நிகழும் சம்பவங்களின் தொகுப்பே ’ஏறுவெயில்’

வளரிளம் பருவத்திலிருக்கும், சிறுவனுமல்லாத வளர்ந்தவனுமல்லாத ஒரு முதுசிறுவனின் பார்வையில் நாவல் துவங்குகிறது. கொங்குப் பகுதியின் சுமாரான வசதியுள்ள கவுண்டர் குடும்பம் ஒன்றை அச்சு அசலாகக் கண் முன் நிறுத்துகிறார். அந்த சாதிக் குழுவுக்கே உரித்தான சொல்லாடல்களால் நிரம்பி யிருக்கும் இந்நாவலுக்குள் உள்ளே நுழைவது வட்டாரம் சார்ந்த, சாதி சார்ந்த சொற்கள் பலவற்றின் பயன்பாட்டால் முதலில் சற்று சிரமமாகவே இருக்கிறது. அந்த மொழிக்கும் அந்த உரையாடலுக்கும் வாசிப்பவர் தன்னைப் பழக்க வேண்டி இருக்கிறது. முதல் சில பக்கங்களில்தான் இந்தச் சிரமம்.

‘இவன்’ என்று பெரும்பாலும் கதைசொல்லியால் விளிக்கப்படும் பொன்னையாவின் தாத்தாவும் பாட்டியும் ஏரியில் வெள்ளம் வந்து மகன் வீட்டிற்குக் குளிரில் வெடவெடத்து இரவு நேரத்தில் உயிர் தப்பி வரும் இடத்தில் நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்டது. அதன்பின் எந்த இடத்திலும் தொய்வு இல்லை.

பெருமாள்முருகனின் புனைவு பிரதிக்குள் நம்மை கைபிடித்து அழைத்துச் சென்று பொன்னையாவோடு சேர்த்து உலவ வைக்கிறது. இவன் தாத்தாவோடு வெள்ளத்தில் மிஞ்சியவற்றைத் தேடிச் செல்கையில் நாமும் கூடவே செல்கிறோம். இவன் கல்லூரிக்குச் செல்கையில் நாமும் இவன் தங்கியிருக்கும் கல்லூரி விடுதியில் ஒரு நபராக வசிக்கிறோம். இவன் நாடகம் போட்டால் நாமும் அதில் கதாபாத்திரமாகிறோம். இவனுக்குக் கண்ணீர் வந்தால் நமக்குக் கனக்கிறது. இவனுக்குச் சந்தோஷம் வந்தால் அது நம்மையும் தொற்றுகிறது. இவன் குற்றவுணர்வு கொண்டால் அத்தவறை நாமே செய்ததுபோல துடித்துப் போகிறோம்.

இந்த நாவலின் முக்கியமான இடம் ஒன்று உண்டு. தன்னைத் தூக்கி வளர்த்த ராமாயியிடம் இவன் தன் உடல் தேவையை தணித்துக் கொள்ளச் செல்லுமிடம். பெருமாள்முருகன் இந்த இடத்தில் நம்மை மனதை வாள் கொண்டு அறுக்கிறார். அதிலிருந்து தெறிக்கும் ரத்தத்தின் வாடை நம்மைத் தூங்கவிடவில்லை. இருளில் தட்டுத் தடுமாறி நடந்து தண்ணீரைக் கை வலிக்கும் மட்டும் அடித்து, எது செய்தும் குற்றவுணர்வு போகாமல் உழலும் இவன் உள்ளத்தின் குமைச்சலும் உளைச்சலும் வெகுகாலம் மனதைவிட்டு அகலாது.

எல்லாம் சாதியாகிப் போன இந்தச் சமூகத்தில் ஊரில் வாழும் பறையர்கள், சக்கிலியர்கள் (என்று அழைக்கப்படும் அருந்ததியர்கள்), கவுண்டர்கள், முதலியார்கள் என்று பல சாதிக்காரர்கள் இப்பிரதிக்குள் பாத்திரங்களாகிறார்கள். நாம் உண்ணும் உணவில், பேசும் பேச்சில், பார்க்கும் பார்வையில், தொடுகையில், தொடாமையில் என எல்லாவற்றிலும் சாதி இருக்கிறது. இப்பிரதியில் நுட்பமாகச் சில விஷயங்களைச் சொல்கிறார் பெருமாள் முருகன். சொந்த சாதியின் பீற்றல்களையும் அவர்தம் பிரஸ்தாபங்களையும் சொல்லும் பிரதியாக இல்லாமல் தவறுக‌ளுக்கு எதிரான‌ பதிவாகவே இப்பிரதி இருப்பது ஆறுதலானது.

சில இடங்களில் கவுண்டர்களின் சாதி வெறியை வாசகர்கள் உணர்ந்துவிட முடிவது நாவலின் பெரிய பலம். கதைமாந்தர்களான கவுண்டர்களின் வழியாக அவ்வபோது சக்கிலியர்கள், பறையர்கள் என்று வசைச்சொற்கள் வரும்பொழுது மனம் துணுக்குறவே செய்கிறதுதான். எனினும் அதுவே யதார்த்தமாக இருக்கையில், அவை கவுண்டர்களின் சாதி வெறியை தோலுரித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.

விரும்பியவனோடு சென்ற அக்காவைத் துரத்தி இரவோடிரவாகக் கொண்டுவந்து, தற்கொலைக்கு வாய்ப்பு அளிக்காமல் இரண்டாம் தாரமாக மணம் செய்துகொடுக்கும் குடும்பம் பொன்னையாவினுடையது. புதிதாக வந்த காலனியில் பறையர் ஒருவரின் பிணத்தை ஊர் சுடுகாட்டிற்குக் கொண்டு வரக்கூடாது என்று பிணத்தை எட்டி உதைக்கும் பொன்னையாவின் தாத்தாவுக்குள் இருக்கும் சாதி வெறியும், அண்ணனுக்கு இருக்கும் சாதி வெறியும் இன்னும் பல பாத்திரங்களுக்கு இருப்பதை உணரமுடிகிறது. இந்த சாதி வெறி நீறுபூத்த நெருப்பாக இருக்கையில் அதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு ஊர் பையன்கள் நாடகம் போடுகையில் ஒரு கலை வடிவத்தில் மட்டுமே ஓரளவேனும் சாதி ஆதிக்கங்களைத் தகர்க்க முடிகிறது என்று நாம் சந்தோஷப்படுகையில் கதைசொல்லி நம் மகிழ்ச்சியை நீடிக்க விடுவதில்லை. நாடகத்தில் கூட சக்கிலியன் எப்படி ‘டா’ போட்டு கவுண்டனைப் பேசலாம் எனத் தகராறு வருகிறது.

பெற்றோருக்கு இடையேயான வாய்ச்சண்டைகள் வன்முறையில் முடியும் நொடிகளில் பிள்ளைகளின் பதற்றத்தை வார்த்தைகளில் ஒருபோதும் விவரிக்க இயலாது. அது அனுபவித்த குழந்தைகள் மட்டுமே அறிந்த ஒன்று. ஒரு கொலையோ தற்கொலையோ நிகழக்கூடிய சாத்தியத்துடனான சம்பவங்கள் கண் முன் நடந்தவாறிருக்க, இவற்றுக்கு நடுவில் பள்ளிக்கூடப் பாடங்களைப் படிக்கவேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கும் எத்தனையோ மகன்களும் மகள்களும் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களின் பால்யத்தை இத்தகைய பெற்றோர் இல்லாமல் ஆக்குகிறார்கள்.

கசப்புகள், பதட்டங்கள், கவலைகள் எல்லாம் கலந்த கலவையாகத்தான் இத்தகைய பிள்ளைகளுக்கு பால்யமும், வீடு என்கிற இடமும் அமைந்து விடுகின்றன. இத்தகு பிள்ளைதான் பொன்னையா. இவன் தாய் வாயைத் திறந்தால் எதிராளியை வார்த்தைகளால் துண்டாக்குபவள். இவ்வார்த்தைகளால் கோபமுறும் அப்பனுக்கு உடனடியாகத் தெரிந்தது அவளை அடித்துத் துவைப்பதுதான். இத்தகு கருத்தியல் வன்முறையும், உடல்ரீதியான வன்முறையும் கொண்ட குடும்பத்தின் பிள்ளைகள் வளர்ந்து பின்னாளில் மனச்சிக்கலுக்கு ஆளாகும் அபாயமுண்டு. இந்த அபாயத்துடனே வாழும் பொன்னையாவுக்கு ஒரு கட்டத்தில் வீடு பிடிக்காமல் போகிறது. வீட்டை விட்டு வெளியேறுவது லட்சியமாகிறது. அதற்கான நாளைப் பார்த்து இருக்கையில் கல்லூரியின் விடுதியில் இடம் கிடைக்க சந்தோஷமாகச் செல்லும் இவனை பாலியல்ரீதியாக துன்புறுத்தும் மூத்த மாணவர்களால் வெறுப்புற்று வீடே மேல் என மீண்டும் வீட்டிற்கே வருகிறான். மீண்டும் வீடு குறித்த கவலை, பெற்றோர் குறித்த கவலை, தாத்தா – பாட்டி குறித்த கவலை என சின்ன வயதில் பொன்னையாவுக்கு நிகழும் அனுபவங்களும், துயரங்களும் மிக அதிகம்.

எண்பதுகளின் துவக்கத்தில் ஃபைனான்ஸ் நிறுவனங்கள் எல்லா ஊர்களிலும் முளைத்துப் புற்றீசல் போல பரவின. என் பால்யத்தில் இக்கம்பெனிகள் குறித்துப் பல கதைகளைக் கேட்டதுண்டு. இப்பிரதியில் இந்த நிறுவனங்கள் இயங்கும் முறை, பணம் போட்டவர்களின் நிலைமை என விவரமாகப் பதிவாகியிருக்கிறது.

அக்காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த சமூக நாடகங்கள் குறித்த பதிவும் இப்பிரதியில் உண்டு. அதை வாசிக்கையில் ஒரத்தநாடு வீதிகளில் நாடகக் குழு நடத்திக் கொண்டிருந்த சிலரை, மீண்டும் என் பால்யத்திற்குச் சென்று பார்த்த உணர்வு ஏற்பட்டது என்பதை சொல்லித்தான் ஆகவேண்டும். இந்த சமூக நாடகங்கள் என்பன இப்போது முழுக்கவே வழக்கொழிந்து போய்விட்டன. சபா நாடகங்கள், நவீன நாடகங்கள் போன்றவை மட்டுமே இப்போது நமக்கு காணக் கிடைக்கும் நாடகங்கள்.

சமூக நாடகங்களுக்கு அன்றைய சமூகத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. ஊர்கூடித் திருவிழா போல இந்நாடகத்தைக் காண கூட்டங்கள் வந்ததுண்டு. அப்போது பிரபலமாக இருக்கும் சினிமா பாடல்களின் மெட்டில் புதிதாக பாடல்களை இயற்றிப் பாடி இரண்டரை மணி நேர சினிமாவைப் போலவே அவை உருவாக்கப்படும். இந்த நாடகங்களில் திரைப்படம் போலவே இடைவேளை உண்டு. இவை பெரும்பாலும் திரைப்படத்திற்கான தங்கள் ஏக்கத்தைத் தணித்துக் கொள்வதற்கான முயற்சியாகவே இருக்கும் என்பதை சக்திவேல் பாத்திரம் மூலம் நமக்குக் கச்சிதமாக உணர்த்திவிடுகிறார் பெருமாள்முருகன்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் காலை இழந்த ராமு என்கிற பாத்திரமும் சுப்பிரமணி என்கிற ஓர் அடாவடி பாத்திரமும் ஒரு வகையில் இந்நாவலின் முக்கிய மாந்தர்கள். தமிழுக்காக உயிரைக் கொடுக்கத் துணிந்த எத்தனையோ மாணவர்களில் ஒருவனாக லட்சிய வேகத்தில் இருந்த ராமு, ஒவ்வொரு முறை குன்றூர் போகும்போது அண்ணா சிலையின் அடியில் உறைந்து கிடக்கும் ரத்தத் துளிகளைத் தேடி அலையும் கண்கள் கொண்ட ராமு, பின்னாளில் ஊர்க்காரர்களிடம் காரியம் செய்து தருகிறேன் என்று சொல்லி பணம் பார்ப்பவனாக மாறுகிறான். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்றெல்லாம் நாவல் சொல்லவில்லை எனினும் இந்த மாற்றத்தைப் பதிவு செய்வதன் மூலமாக கதைசொல்லி ஒரு முக்கியமான விமர்சனத்தை வைக்கிறார். அது போலவே சுப்பிரமணி என்கிற ஒரு பாத்திரம் படிப்படியாக பிறரை ஏமாற்றி, அதிலும் சொந்தச் சாதி மக்களை ஏமாற்றி நாட்டாமை செய்யும் அளவுக்கு பலம் வாய்ந்ததாக மாறுவதை நாவலின் போக்கில் மெதுமெதுவாகச் சொல்கிறார் பெருமாள்முருகன்.

நாயகன் பொன்னையாவுக்கு இளகிய மனது. அத்தோடு கூடவே வலிமையும் வாய்த்திருக்கிறது. அம்மனது காமம் தேடவும் செய்யும். நாடிச்சென்றவள் தன்னை வளர்த்தவள் என்று அறியும்போது பின்வாங்கி வந்து தன் உடல் குறித்தும் காம்ம் குறித்தும் அசூயையும் கொள்ளும். தான் தூக்கி வளர்த்த மணி என்கிற நாய் இறந்து இரண்டு நாட்களானபின்னும் புழுபுழுத்து நாறியபின்னும் அதைச் சுமந்து சென்று புதைக்கும் மனது.

ஆனால் பறையர் சாதியைச் சேர்ந்த ஒருவரின் இறப்புக்காக சுடுகாடு தராமல் பிணத்தை எட்டி உதைத்த தன் தாத்தாவுக்காகவும் கண்ணீர் விடும் மனது. இப்படித்தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். பொன்னையா முற்றிலும் தன் சாதிக்கு துரோகம் செய்தவனல்ல. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்கிற கேள்விகள் இருந்தாலும் முற்றிலுமாக குடும்பத்தின் மீதான பிடிப்பை விட்டுவிட முடியாத அன்பின்வழி பின்னப்பட்டவனாதலால் அவனால் சாதிப்பெருமை பேசும் அம்மா, அப்பா, அண்ணன், தாத்தா, பாட்டி என எல்லோரிடமும் அன்பு காட்டி அடங்கிப் போக முடிகிறதென்பதுதான் யதார்த்த நிலைமை.

திருநர் என்று நாம் அழைக்கும் திருநங்கைகள், திருநம்பிகள் உள்ளிட்டோரை இன்றைய சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதை அறிவோம். 1991ல் வெளிவந்திருக்கும் இந்நாவலில் திருநங்கையை ‘ஒம்போது’ என்றும் ‘அலி’ என்றும் ஒரு பாத்திரம் அழைக்கிறது. ஏறத்தாழ 15 ஆண்டுகளுக்கு முந்தைய நாவல் இது என்கிற புரிதலுடன் வாசிக்கும்போதும், சற்று நெருடவே செய்கிறது. எல்லாவற்றையும் தாண்டியும், துயரங்களை மட்டுமே அதிகமாகச் சொல்லும் இந்த நாவல் தரும் வாசிப்பு இன்பம் அலாதியானது.

ஒரு சிறந்த நாவலுக்கான இலக்கணம் எது? அது தனிப்பட்டவர்களின் மன ஓட்டத்தைச் சார்ந்தது என்றே முடிவுக்கு வரலாம். வாசித்து நெடுங்காலம் ஆன பின்னும் நினைவை விட்டு அகலாத பாத்திரப் படைப்புகள், நேற்று தான் வாசித்தது போல அப்படியே புத்தம் புதியதாய் நினைவாக தங்கி விடும் சம்பவங்கள், பெருமாள்முருகன் சம்பவங்களை விவரிக்கையில் ஒரு திரைப்படம்போல நம் கண் முன் காட்சிகள் விரிவது என்று பலவிதங்களில் ‘ஏறுவெயில்’ நம்மைக் கவர்ந்து விடுகிறது.

பொதுவாக, நம் நிலப்பரப்பிற்கு ஏதுவானதில்லை ஏறுவெயில். அது நம்மை எரிச்சல்படுத்துகிறது. வெக்கையையும் புழுக்கத்தையும் தருகிறது. ஒருபோதும் அதை நம்மால் ரசிக்க முடியாது. பெருமாள்முருகனின் இந்த ஏறுவெயிலும் கதைமாந்தர்களின் வெக்கை மனதையும் மனப் புழுக்கத்தையும் நம்மிடம் கடத்துகிறது. அதனாலேயே இந்த ஏறுவெயில் நமக்குப் பிடித்துவிடுகிறது.

| ஏறுவெயில் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | நவம்பர் 2008 | ரூ.160 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book