34

கடவுள் அமைத்து வைத்த மேடை

ஜிரா

காற்றைக் காந்தமாக்கி நம் உணர்வுகளை ஈர்த்த மெல்லிசை மன்னர் இனிமேல் இசை வடிவில் மட்டும் நம்மோடு என்றென்றும் இருக்கப் போகிறார். மனிதர்கள் அமைத்து வைத்த மேடையில் இசை பாடிக் கொண்டிருந்தவர் கடவுள் அமைத்து வைத்த மேடையில் பாடச் சென்றுவிட்டார்.

தமிழ்த் திரையிசையில் வேராக இருந்து பல கிளைகளையும் மலர்களையும் உருவாக்கிய பெருமை அவருடையது. ஒரு மூத்த பிதாமகனாக அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதை மற்ற இசை வல்லுனர்கள் அவரைப் போற்றுவதிலேயே புரிந்து கொள்ளலாம்.

இவரைப் பற்றி என்னதான் நான் பெருமையாகச் சொல்வது? கரை கண்டிருந்தால் கொஞ்சம் தெளிவாகப் பேசலாம். கடற்கரையில் மணல் எண்ணும் நண்டைப் போல் எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்.

கருப்பு வெள்ளைக் கட்டைகளிலிருந்து காவியப் பாடல்களைக் கண்டெடுத்த கலைஞர் மெல்லிசை மன்னர். ஒருநாள் தவறுதலாக வீட்டுக்கு ஆட்டோவில் அனுப்பப்பட்ட அவரது ஆர்மோனியம் தொலைந்து விட, பொம்மையைத் தொலைத்த குழந்தை போல் விடாமல் அழுதாராம். அவரைச் சமாதானப்படுத்த அந்த ஆர்மோனியமே வந்தால் தான் முடியும் என்பதால், உடனிருந்தவர்கள் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை வானொலியில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆர்மோனியம் திரும்பக் கிடைத்திருக்கிறது. மீண்டும் அழுகை. ஆனந்தக் கண்ணீர் மட்டுமல்ல, “உயிருக்குயிரான உன்னைத் தொலைத்துவிட்டேனே” என்று மன்னிப்புக் கேட்கும் கண்ணீரும் அதிலுண்டு.

தமிழ் மொழிக்குக் கொஞ்சமும் வலிக்காமல் இசையமைத்த ஒரு இசையமைப்பாளர் இவர். இந்த வகையில் இவரைப் போல் இன்னொருவர் இல்லை. ஒரேயொரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். அடுத்து நீங்கள் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் உன்னித்துக் கேளுங்கள். நான் சொல்வது புரியும்.

குறில், நெடில் என்றால் என்னவென்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். குறிலெழுத்துகள் குறுகி ஒலிக்கும். நெடிலெழுத்துகள் நீண்டு ஒலிக்கும். மெல்லிசை மன்னரின் பாடல்களில் குறில் தவறிக் கூட நீண்டொலிக்காது. அதே போல் நெடில் மட்டுமே சந்தங்களில் கூட நீண்டொலிக்கும்.

சரி. இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன். “எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலால் ஓடி வா” என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். இந்தப் பாடலை அடுத்த முறை கேட்கும் போது அடைப்புக்குறிக்குள் இருக்கும் நெடிலெழுத்துகளை உற்றுக் கேளுங்கள். அப்போது நான் சொல்வது புரியும். எங்[கே] அவள் என்[றே] மனம் [தே]டு[தே] [ஆ]வ[லா]ல் [ஓ]டி [வா]!

இது போல மெல்லிசை மன்னரின் மற்ற பாடல்களையும் கேட்டுப் பாருங்கள். நாம் இதுவரை கொஞ்சமும் உணர்ந்திராத மாபெரும் தமிழ்ப் பணி நமக்குப் புரியும். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களிலும் இதைத் தொடர்ந்து கவனியுங்கள். நான் சொல்வது இன்னும் தெளிவாகப் புரியும்.

தமிழ் தெரியாதவர்கள் தமிழ்ப் படங்களில் பாடத் தேவையில்லை என்பதில் கடைசி வரை உறுதியாக இருந்தவர். அத்தான் என் அத்தான் பாடலைக் கேட்டு லதா மங்கேஷ்கர் தமிழில் இப்படியான பாடல்களைப் பாட விரும்புவதாகச் சொன்ன போது, “அவங்களுக்குத் தமிழ் தெரியாது. வேண்டாம்” என்று ஒரே அடியாக மறுத்து விட்டார். “உலமே மாயம் வாழ்வே மாயம்னு எழுதியிருக்கேன். பாடுறவன் உல்கே மாயம் வால்வே மாயம்னு பாடுறானே” என்று உடுமலை நாராயண கவி மெல்லிசை மன்னரிடம் ஆத்திரப்பட்ட போது தமிழ்த் திரையிசையில் கண்டசாலா காணாமற் போனார்.

இன்று மாபெரும் பாடகராக இருக்கும் பாடும் நிலா பாலு அவர்கள் வாய்ப்புக் கேட்ட போதும் தமிழ் படித்து விட்டு வரச்சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். அவர் தமிழ் படித்து வந்த போது சொன்ன சொல் மாறாமல் “இயற்கை என்னும் இளைய கன்னி” பாட வைத்தவரும் மெல்லிசை மன்னரே.

திரைப்படங்கள் வசனங்களால் நிரம்பிய காலகட்டமது. அந்தச் சூழ்நிலையிலும் எங்கெங்கு வாய்ப்பிருக்கிறதோ அங்கங்கு பின்னணி இசை இப்படியெல்லாம் இருக்கலாம் என்று விதை போட்டவர் எம்.எஸ்.விசுவநாதன். அவர் இசையமைப்பதைப் பார்ப்பதற்காக சலீல்தா என்று அழைக்கப்படும் சலீல் சௌத்திரி நேரில் வந்து ஒரு நாள் முழுவதும் இருந்து பார்த்துத் தெரிந்து பாராட்டியிருக்கிறார்.

இசை ஞானி இளையராஜா திரைப்படங்களில் இசையமைக்கத் தொடங்கி பிரபலமாகியிருந்த நேரம். அவரைப் பற்றி மெல்லிசை மன்னரிடம் கோள் சொல்லலாம் என்று சிலர் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கோள் சொல்லிகள் அத்தோடு மெல்லிசை மன்னருக்கு வேண்டாதவர்களாகிப் போனார்கள். “அந்தப் பையனப் பத்தி எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்” எனக்கடிந்து அனுப்பியிருக்கிறார்.

ஒய்.ஜி.மகேந்திரனின் தொலைக்காட்சித் தொடர்களுக்கு டைட்டில் இசை அமைத்தவர் மெல்லிசை மன்னர். அந்தத் தொடர்களில் ஒன்றிலும் நடித்திருக்கிறார் அவர். அதில் பெண் வேடக் காட்சி வேறு. பெண் வேடம் புனைந்ததும் அழத் தொடங்கியிருக்கிறார். ஏனென்றால் அந்த வேடத்தில் அவரது அன்னையை அவர் கண்டது தான். தாய்ப்பாசம் மிகுந்தவர். நான்கு வயதில் தந்தையை இழந்ததாலோ என்னவோ தாயிற் சிறந்த கோயிலுமில்லை என்று வாழ்ந்திருக்கிறார்.

தாயின் கட்டளைக்கு இணங்க தேவரின் படங்களுக்குக் கடைசி வரையில் இசையமைக்கவில்லை. இத்தனைக்கும் சாண்டோ சின்னப்பா தேவர் மெல்லிசை மன்னரின் நண்பர். தன்னுடைய இரண்டாவது படத்தில் மெல்லிசை மன்னரை இசையமைக்க வைக்க விரும்பிச் சென்ற போது எம்.எஸ்.வி மறுத்திருக்கிறார். ஏனென்றால் அவர் தாயார் சொல்லிக் கொடுத்த நன்றி. மெல்லிசை மன்னர் எடுபிடி வேலைகளைச் செய்த காலத்தில் அதே ஆடியோ கம்பெனியில் மாதச் சம்பளத்திலிருந்த கே.வி.மகாதேவன் பண்டிகைக்கு வேட்டியும் இரண்டு ரூபாய் பணமும் கொடுத்திருக்கிறார். அந்த கே.வி.மகாதேவன் தான் தேவரின் முதல் படத்துக்கு இசை. தேவர் வழங்கிய வாய்ப்பை ஏற்றுக் கொண்டால் கே.வி.மகாதேவனுக்கு நன்றி கொன்றதாக ஆகிவிடும் என்பதால் மெல்லிசை மன்னர் மறுத்திருக்கிறார்.

இவருடைய இசையில் கவிஞர் தேசிய விருது வாங்கியிருக்கிறார். பாடகர்கள் தேசிய விருது வாங்கியிருக்கிறார். நடிகர் தேசிய விருது வாங்கியிருக்கிறார். அவர் இசையமைத்த திரைப்படங்கள் விருது வாங்கியிருக்கின்றன. ஆனால் அவர் வாங்கவில்லை. அந்த அரசியல் நமக்குத் தேவையில்லை. விருதுகளைக் கடந்த சிறந்த கலைஞர் அவர்.

முதன் முதலில் தமிழில் ஸ்டிரியோ ஆல்பம் வெளியிட்ட பெருமை அவருக்கே உண்டு. திரில்லிங் திமேட்டிக் டியூன்ஸ் (Thrilling Thematic Tunes) என்ற அந்த இன்ஸ்டிருமெண்டல் ஆல்பம் ஒரு அரிய முன்னோடி. இந்த ஆல்பம் சமீபத்தில் சரிகமா நிறுவனத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டது. பத்து விதமான தீம்களுக்கு இசையமைத்த அற்புதம். கேட்க வேண்டிய இசையமுதம். தென்னிந்திய அளவில் இதுதான் முதல் ஸ்டிரியோ முயற்சி என்றும் முதல் இன்ஸ்டிருமெண்டல் ஆல்பம் என்றும் அறிகிறேன்.

கர்நாடக இசையும் மெல்லிசையும் கைகோர்த்தால் எப்படியிருக்கும்? சுத்தமான கர்நாடக சங்கதிகளோடு மகாராஜபுரம் சந்தானம் பாடுவார். அதற்கு மெல்லிசைக் கருவிகளிலிருந்து பின்னணி இசையமைக்க வேண்டியது மெல்லிசை மன்னர். இது மேடையில் நேரடிக் கச்சேரியாகவே நடந்தது. பாடிக் கொண்டிருக்கும் போதே மகாராஜபுரம் சந்தானம் உணர்ச்சிவசப்பட்டு “சபாஷ் எம்.எஸ்.வி சார்” என்று பாராட்டியதை இன்றும் ஆடியோவில் கேட்கலாம்.

இப்படியொரு கூட்டணி இன்றும் புதுமையான முயற்சி. இன்னும் நிறைய புதுமைகள் செய்ய மகாராஜபுரம் சந்தானமும் எம்.எஸ்.விசுவநாதனும் திட்டமிட்டிருந்தார்கள். காலம் கணிக்கும் காலன் ஒரு விபத்தில் மகாராஜபுரம் சந்தானத்தைக் கொண்டு போன பிறகு இந்த முயற்சி முடங்கிப் போனது.

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு இசையமைத்த பெருமையும் மெல்லிசை மன்னருக்கே உரியது. தமிழர்களால் அது பாடப்படும் வரையில் மெல்லிசை மன்னரின் புகழ் வாழும். அதே போல இலங்கைக் கவிஞர் எழுதிய உலகத் தமிழர்களுக்கான தேசியப் பண்ணுக்கும் இசையமைத்த பெருமை மெல்லிசை மன்னருக்கு உண்டு.

வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?

அது நமது எம்.எஸ்.வி என்று உறுதிபடக் கூறி பெருமைப்பட்டுக் கொள்கிறேன்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book