31

கனவுகளின் நாயகன்

எஸ்.கே.பி. கருணா

அன்று மதியம் வகுப்பு இருக்கிறது அவருக்கு. அண்ணா பல்கலைக்கழகத்தின் விருந்தினர் அறை ஒன்றினில் அமர்ந்து அதற்கான குறிப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார் பேராசிரியர் அப்துல் கலாம்.

புதிதாகப் பொறுப்பேற்ற சில காலமாக அந்த ஒற்றை அறைதான் அவரது தங்குமிடம். அப்போது துணைவேந்தர் அவரை அழைப்பதாக அலுவலகப் பணியாள் வந்து கூறுகிறார்.

துணைவேந்தரின் அறைக்குள் ‘மே ஐ கம் இன்’ எனக் கேட்டபடி கலாம் நுழைய, துணைவேந்தர் அவரை வரவேற்று தன் முன் அமரச் செய்கிறார்.

‘புரொஃப்ஸர்! பி.எம். ஆஃபீஸில் இருந்த உங்களைக் கேட்டாங்க. உங்களிடம் பேசணுமாம்! இன்னும் கொஞ்சம் நேரத்தில் இங்கே கூப்பிடுறதாச் சொன்னாங்க’

‘அப்படியா? எனக்கு இப்போது வகுப்பு இருக்கிறதே சார்’

‘இருக்கட்டும். கொஞ்சம் லேட்டாப் போகலாமே!’

‘நோ! நோ! ஸ்டூடண்ட்ஸ் தாமதமா வரலாம். டீச்சர்ஸ் தாமதமா போகவே கூடாது’

‘நான் உங்கள் வகுப்புக்கு மாற்று ஆசிரியரை அனுப்பி வைக்கிறேன். பி.எம் ஆஃபீஸிலிருந்து மறுபடியும் கூப்பிடும்போது, நீங்கள் இல்லைன்னா நான் என்ன சொல்றது? ப்ளீஸ் வெயிட்’

இருவரும் டீ அருந்தும் வேளையில், துணைவேந்தர் கலாமிடம் கேட்கிறார்.

‘அப்புறம் ப்ரஃபஸர்! எப்படி இருக்கிறது உங்க டீச்சிங் ஜாப்?’

‘புதுசா இருக்கு! நிறைய கத்துக்குறேன்! பெங்களூர் ஐஐஎஸ்சியில் இருந்து கூட கூப்பிடுறாங்க. யோசிச்சுட்டு இருக்கேன்’

‘நோ! நோ! நீங்க எங்கேயும் போகக்கூடாது. எங்களோட மதிப்புமிக்க ஆசிரியர் நீங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ சொல்லுங்கள். நாங்கள் இங்கேயே ஏற்பாடு செய்து தருகிறோம்’

அந்த நேரத்தில் தொலைபேசி மணி அடிக்கிறது.

துணைவேந்தர் எடுத்துப்பேசி விட்டு, கலாமிடம் தருகிறார். கலாம் அதை வாங்கி, எதிர் முனையில் இருப்பவரிடம் சில நிமிடங்கள் பேசுகிறார். இறுதியில், ‘சரி சார்! எனது நண்பர்களிடம் கலந்து பேசி எனது முடிவைக் கூறுகிறேன்’ என்று சொல்லியபடி வைக்கிறார்.

துணைவேந்தர் அப்துல் கலாம் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, கலாம் எதிரில் இருந்த டீ கோப்பையை எடுத்து, மீதமுள்ள டீயை அருந்திக் கொண்டே சொல்கிறார்.

‘பிரதமர் வாஜ்பாய் பேசினார். இந்த ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரா என்னை நிறுத்த நினைக்கிறாராம். அதுக்கு என்னோட சம்மதத்தைக் கேட்கிறார். நான் என்னோட நண்பர்களைக் கேட்டு சொல்கிறேன்னு சொன்னேன். நான் என்ன சார் பதில் சொல்லட்டும்?’

அதுவரையில் வெகு இயல்பாக அமர்ந்திருந்த துணை வேந்தர் மெல்ல எழுந்து நிற்கிறார்.

பல்வேறு அரசுப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டு, இறுதியாக ஒரு பல்கலைகழகத்தில் கவுரவப் பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்த கலாம், இந்தியாவின் முப்படைகளுக்கும் கமாண்டர் இன் சீஃப் ஆக, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகனாக மாறிய அந்தக் கணம் தற்செயல் என்றால், கடவுள் நிச்சம் கலாமைத் தற்செயலாகத்தான் கண்டறிந்தார்.

தனி மெஜாரிட்டி இல்லாமல், கூட்டணி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த பாஜகவுக்கு அந்த ஜனாதிபதித் தேர்தல் ஒரு சோதனைக் கட்டம். ஆளும் கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் தோற்றுப் போனால், ஆட்சியே போக வேண்டி வரும். எனவே, பாஜகவிற்குத் தேவை அனைவரும் ஏற்கும் ஒரு பொது வேட்பாளர்.

பிரதமர் வாஜ்பாய் அப்துல் கலாம் பெயரை அறிவித்தார்.

அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான ஒரு பொது மனிதரை அறிவித்த திருப்தி பாஜகவுக்கு. பாஜக ஆட்சியில் ஒரு இஸ்லாமியரை ஜனாதிபதியாக்கும் சூழலுக்கு அவர்களைத் தள்ளிய திருப்தி காங்கிரஸூக்கு. எந்தக் கட்சியையும் சாராத ஒரு விஞ்ஞானியை ஆதரிக்கிறோம் என்ற திருப்தி பிற கட்சிகளுக்கு. ஆக, இந்தியாவின் ஏவுகணை மனிதர், நேர்மையாளர், இஸ்லாமியர் ஜனாதிபதியாகிறார் என்று அரசியல் கட்சிகளும், இந்திய மக்களும் எண்ணிக் கொண்டிருக்க, ஒரு பேராசிரியர் ஜனாதிபதியாகிறார் என்ற நிஜத்தை அப்துல் கலாமின் மனம் மட்டுமே அறிந்திருந்தது.

நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்றிருந்தாலும், இந்தியாவை ஏவுகணைத் தொழில் நுட்பத்தில் மிக உயரத்தில் ஏற்றி வைத்திருந்தாலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு ஆதார உந்து சக்தியாக இருந்து எத்தனையோ சாதனைகளைப் படைத்திருந்தாலும், மொத்த இந்திய மக்களின் ஆதர்ச நாயகனாக அவர் மாறத் தொடங்கிய அந்தப் புள்ளி ஜனாதிபதி மாளிகையில் இருந்துதான் துவங்கியது.

ராஷ்டிரபதி பவன் இவருக்கு முன்னர் பத்து ஜனாதிபதிகளையும், பற்பல வைஸ்ராய்களையும் கண்டிருந்தது. குடும்ப உறுப்பினர்களுடன் ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழையும் வழக்கமான காட்சிகளில் இருந்து வேறுபட்டு, இரண்டு பெட்டிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தன்னந்தனியாக இந்த மனிதர் வந்ததை ராஷ்டிரபதி பவன் நிச்சயம் அதன் சரித்திரத்தில் பதித்து வைத்திருக்கும். முந்நூற்று நாற்பது அறைகள் கொண்ட அந்த மாபெரும் மாளிகையின் நாயகன் ஒரு தன்னந்தனியான பிரம்மச்சாரி.

அதிலிருந்து அவர் குறித்து நமது நாடு கேள்விப்பட்ட ஒவ்வொரு செய்திகளும், அதிகாரிகளை ஆச்சரியப்படுத்தின! அரசியல்வாதிகளை குற்ற உணர்வுக்குள்ளாக்கின! மக்களைப் பிரமிப்படையச் செய்தன!

நாட்டின் முதல் குடிமகன், தனது மாளிகையின் பிரம்மாண்டமான உணவு அறைக்குச் செல்ல மறுத்து, தனது அறையிலேயே எளிமையான உணவை வரவழைத்து உண்டார். அங்கிருந்த நூலகத்தை விரிவு செய்தார். ராஷ்டிரபதி பவனத்தின் முக்கியப் பெருமையான மொகல் கார்டன் ரோஜாத் தோட்டத்துக்கு அருகில் இந்தியப் பாரம்பரிய மூலிகைகளைக் கொண்ட மூலிகை வனத்தை உருவாக்கினார்.

தனது வரவேற்பறையை ஒலி, ஒளி வசதிகள் கொண்ட கான்ஃப்ரன்ஸ் ஹாலாக மாற்றிக் கொண்டார். அங்கு வரும் விருந்தினர்களுக்கு, மது விருந்துகளுக்கு முன்னதாக இந்திய நாட்டின் முன்னேற்றம் குறித்த அவரது எதிரகாலத் திட்டங்களை பிரசெண்டேஷனாக விளக்கிச் சொன்னார். அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் புஷ்ஷாகவே இருந்தாலும் இதே நடைமுறைதான் அங்கு! வெளிநாட்டுத் தலைவர்கள் அவரைச் சந்திப்பதற்கு முன் அதிபர்களாக, பிரதமர்களாக, அமைச்சர்களாக வந்து சந்திப்பு முடிந்தப் பின் அத்தனைப் பேரும் பேராசிரியர் அப்துல் கலாமின் மாணவர்களாகத் திரும்பிச் சென்ற அதிசயம் அங்கே நடந்தது.

நம் நாட்டுத் தலைவர்கள் குறித்து வெளிநாட்டினருக்குப் பெரிய மதிப்பையும், மரியாதையும் வரவழைக்க வேண்டி பல நூறு கோடி ரூபாய்களை பப்ளிக் ரிலேஷனுக்கு அதுவரையில் செலவிட்டு வந்த அரசாங்கம், முதன் முறையாக, ஒற்றை ரூபாய் செலவின்றி மொத்த இந்திய அரசின் மதிப்பையும், மரியாதையையும் உலக அரங்கில் தனது ஜனாதிபதியின் தனிப்பட்ட கரிஸ்மா மூலம் உயர்த்திக் கொண்டது.

பாலைவனத்தில் மழை போல, இந்திய ஜனாதிபதி எப்போதோ ஒரு முறையே வெளியே வரும் வழக்கம் இருந்தது. அதுவும் பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணத்துக்காகவே இருக்கும். ஆனால், கலாம் வெளியே வந்தது நாட்டின் இளம் தலைமுறையினரைச் சந்திக்க! அவர் சென்றது கல்விக் கூடங்களுக்கு!

அவரளவிற்கு உலகில் வேறு எந்தத் தலைவரும் தனது பதவிக்காலத்தில் இத்தனை தூரம் சுற்றுப் பயணம் செய்திருக்க மாட்டார்கள். இத்தனை லட்சம் மாணவர்களைச் சந்தித்து இருக்க மாட்டார்கள். கலாமின் ‘மாணவர் சந்திப்பு’ என்பது வெறுமனே சம்பிரதாயப் பேச்சுடன் முடிவதல்ல. அவர் ஒவ்வொரு சந்திப்புக்கும் தனித்தனியாக பிரசெண்டேஷன் தயாரித்துக் கொண்டு சென்றார். விளக்கமாகவும், பொறுமையாகவும் தனது எதிர்காலத்திட்டத்தை மாணவர்களுக்கு விளக்கிச் சொன்னார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒவ்வொரு சந்திப்பிலும், மாணவர்களுடன் கேள்வி – பதில் நிகழ்ச்சியினை அமைத்துக் கொண்டார். மாணவர்கள் கேட்டக் கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் உலகப் பிரசித்திப் பெற்றன‌.

அவரது ஒவ்வொரு மாணவர்கள் சந்திப்பும், இளம் தலைமுறையினருக்கு கனவுகளை விதைத்த அற்புத சுவிசேஷக் கூட்டங்களாகின. அந்த மாணவர்கள் மூலமாகவே அப்துல் கலாம் அவர்களது பெற்றோர்களைச் சென்றடைந்தார். ஒவ்வொரு மாணவருக்கும் அந்த கூட்டங்கள் முடிந்த பிறகு வீடுகளுக்குத் திரும்பிய பின் பெற்றோர்களிடம் அப்துல் கலாம் குறித்துக் கண்கள் விரியச் சொல்ல ஏகப்பட்டக் கதைகள் இருந்தன.

அதுவரையில் நடிகர், நடிகை படங்களும், கிரக்கெட் வீரர்களின் படங்களுமே தங்களின் பிள்ளைகளின் அறையை நிரப்பியிருந்த காட்சி மாறி, பெரிய சைஸ் அப்துல் கலாம் படம் இடம் பெற்றதை பெற்றோர்கள் பெருமிதத்துடன் கண்டனர். தங்களைப் போலவே தமது குழந்தைகள் பேரில் அன்பு, அக்கறை கொண்டு அவர்களின் கண்களில் எதிர்காலக் கனவை விதைத்த அப்துல் கலாம் அவர்களின் கடவுளாகிப் போனார்.

நாட்டில் இதுவரையிலான அரசியல் தலைவர்கள் எவரும் மக்களின் மனதிலே தொட முடியாத ஒரு இடத்தை அப்துல் கலாம் தொட்டார். அந்த இடம் மகாத்மா காந்திக்கானது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் போது, இந்த முறையேனும் ஒரு தன்னலமற்ற தலைவர் இந்தத் தேசத்துக்கு கிடைக்க மாட்டாரா என ஏங்கி, ஏமாந்துப் புண்பட்டிருந்த இடம் அது. எளிமையை வாழ்வியல் முறையாகவே கொண்டிருந்த அந்த மேதையின் கரங்கள் பட்ட மாத்திரத்தில் இந்திய மக்கள் அவர் மீது மயக்கமுறத் தொடங்கினர். சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக அரசியல் பொறுப்பில் இருக்கும் ஒரு தலைவர் அனைவருக்கும் பொதுவான மனிதராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

தனக்கு கீழேப் பணிபுரியும் செயலர்கள், பணியாட்கள், பாதுகாவலர்களை அவர் நடத்திய விதம் உயர்பதவியில் இருப்பவர்களுக்கு ஒரு பெஞ்ச் மார்க்காக அமைந்தது. உண்மையான உள்ளத்து அன்போடு அவர்களிடம் பழகியதால், அவர்களும் கலாமின் வேகத்துக்கு முழு ஒத்துழைப்பு தந்து பணியாற்றினர்.

ஒருமுறை தனது சொந்தங்களை ராமேஸ்வரத்தில் இருந்து தில்லிக்கு வரச் செய்து ஜனாதிபதி மாளிகை முதல் தாஜ்மகால் வரையில் சுற்றிப் பார்க்கச் செய்து அவர்களை திருப்திப்படுத்தி அனுப்பி வைத்தார். அவர்கள் புறப்பட்ட அடுத்தக் கணம், தனது செயலரை அழைத்து அவர்களின் வருகைக்கான அத்தனை செலவையும் தனது சொந்தக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு காசோலையைக் கொடுத்து உத்தரவிட்ட செயல் நாடு அதுவரையில் காணாதது.

நடிகர்களின் படங்களும், சாதிக் கட்சித் தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டு, தங்களை அடையாளம் காட்டிக் கொண்டிருந்த ஆட்டோ ஸ்டாண்டுகளில் அப்துல் கலாமின் படம் வைக்கப்பட்டது. அவரது முகம், அந்த இடத்துக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது. அவரது முகம், அங்கிருக்கும் ஓட்டுநர்கள் நல்ல மனசுக் காரர்கள் என்ற தோற்றத்தைத் தந்தது. மெல்ல அவரது முகம் புகைப்படங்களாக, பதாகைகளாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் முதல் ரெயில்வே ஊழியர்கள் நலச் சங்கம் வரையிலும் இடம் பெறத் தொடங்கியது. கலாம் பெயரும், படமும் உள்ளது என்றால் அங்குப் பொறுப்பும், நம்பிக்கையும் இருக்கும் என்று மக்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது உலகில் எந்தக் கடவுள்களுக்கும்கூடக் கிடைக்காதப் பேறு.

இதை அவர் திட்டமிட்டுச் செய்யவில்லை. அவரது இயல்பால் அது தன்னாலே நடந்தேறியது. அவரது பண்பு, எளிமை, கனவு எல்லாம் நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களிடம் சென்று சேர்ந்ததற்கு அவர் ஜனாதிபதியானது முக்கியமான காரணம். அப்பதவிக்கான அதிகாரங்களை நாட்டு மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுக்க, இளைஞர் சமுதாயத்துக்கு வழிகாட்ட, அறிவியல் கண்டுப்பிடிப்புகள் பொது மக்களை, மாற்றுத் திறனாளிகளைச் சென்றடைய பயன்படுத்திக் கொண்டார்.

இரண்டாம் முறையும் அவர் ஜனாதிபதியாகும் சூழலை நாட்டில் என்றுமில்லாத வழக்குமாக பொது மக்களே முன்னின்று உருவாக்கித் தந்தனர். அப்போது ஆளுங்கட்சியாக மாற்றம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் வேறு வழியின்றி கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்க ஆலோசிக்க வேண்டி வந்தது. ஆனால் வலுக்கட்டாயமாக யாருடைய ஆதரவையும் பெற்று அதன் மூலம் ஜனாதிபதி பதவியை அரசியலுக்கு உள்ளாக்க மாட்டேன் என்று பெருந்தன்மையாக அவராகவே போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அரசியல் கட்சிகளின் ஜனாதிபதியாக உள்ளே வந்தவர், மக்களின் ஜனாதிபதியாக வெளியேறினார்.

கலாமின் மரணம் மக்கள் எதிர்பாராதது அல்ல! சில காலமாகவே அவரது உடல் நிலைக் குறித்துப் பல்வேறு செய்திகள் வந்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், அவரது இயல்புக்கு மாறாக ஒரு மருத்துவமனைப் படுக்கையில் அவரது உயிர் பிரியாமல், அவருக்குப் பிடித்தமான மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது இறந்தது நாட்டு மக்களை மிகவும் நெகிழச் செய்தது.

இந்திய தேசம் இதற்கு முன் எப்போதும் காணாத ஒரு சோகத்தைக் கண்டது. வேறெந்த இந்தியத் தலைவருக்கும் இதற்கு முன்னர் கிடைத்திராத அளவுக்கு மக்களின் கண்ணீர் அனைத்து ஊடகங்களையும் நிரப்பிக் கொண்டு ஓடியது. யாரும் அழைக்காமலேயே கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் ஆதர்ச நாயகனை இழந்த அதிர்ச்சியில் கதறி அழுதனர். மூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களையும் பேதங்களைக் கடந்து மீண்டும் ஒன்றிணைத்தது அவரது மரணம்.

மறைந்த அப்துல் கலாம் மீது சில அறிவு ஜீவிகள் பரப்பி வரும் அவதூறுகள் குறித்து எழுதுவதை இங்கு கவனமாகத் தவிர்த்திருக்கிறேன். அவர் ஏன் இதைச் செய்யவில்லை? அவர் ஏன் அதைப் பேசவில்லை? என்ற கேள்விகள் எல்லாம் வெகு விரைவில் காற்றில் கரைந்து போகும். மக்கள் அவரிடம் எதிர்பார்த்தது இந்த தேசத்தின் எதிர்காலம் குறித்த கேள்விக்கான பதிலை! த‌ம் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைக் குறித்த நம்பிக்கையை! அதை அவர் தம் வாழ்நாளெல்லாம் விதைத்துக் கொண்டே சென்றார்.

அந்த நம்பிக்கை ஒவ்வொரு இந்திய இளைஞனின் வெற்றிகளின் மூலமாகவும் துளிர் விட்டு விருட்சமாகி நிழல் பரப்பும் என்பது நிதர்சனம். அந்த விருட்சத்தின் கனிகள் ஒவ்வொன்றிலும் கலாம் இனிப்பார்!

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book