26

கன்னி நிலம்

மீனம்மா கயல்

“27 வயசு ஆகுது, இன்னும் எட்டு மணி வரைக்கும் தூங்கிட்டு இருந்தா வீடு எப்படி உருப்படும்? கொஞ்சமாச்சும் பொறுப்பு வேணும், பெரியவங்கள மதிக்கறது கிடையாது, கடவுள பழிச்சு பேசறது, விளக்கு பொருத்தச் சொன்னா அதுல ஆயிரம் நொரனாட்டியம், போற இடத்துல இவளையா சொல்வாங்க. என்ன பிள்ள வளத்துருக்கா பாருன்னு என்னைய தான் சொல்வாங்க.”

காலையிலேயே அம்மா அர்ச்சனையை ஆரம்பித்துவிட்டாள், விடுமுறை நாட்களின் அவஸ்தைகள் இது.

“ஏன்தான் லீவெல்லாம் விடறாங்களோ, வீட்ல இருந்தாலே எதுனா பிரச்சினை வந்துட்டே இருக்குது” என்று புலம்பிக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்தாள் மதுவந்தி.

இந்தப் புகார்கள் அனைத்தும் அப்பாவிடம் வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. எதை பற்றியும் கண்டு கொள்ளாமல் போர்வைகளை மடித்து வைத்தாள்.

“இந்த ரெண்டு நாள் தான லீவ் அவளை எதுக்கு கரிச்சு கொட்டற?”

“காலேஜ்க்கு போயிட்டா மட்டும் பெரிய பொறுப்பு வந்திடுமாக்கும் உங்க மகளுக்கு? சம்பாதிக்கிறேன்ற திமிர். போற வீட்ல இப்படி இருந்தா நல்லா மெச்சுவாங்க.”

பெட்ரூமிலிருந்து மது கத்தினாள்.

“சம்பாதித்து என்ன நானா வச்சு செலவழிக்கறேன்? உங்க கைலதான கொடுக்கறேன். எல்லாத்துக்கும் போற வீடு போற வீடுன்னு சொன்னா என்ன அர்த்தம்? ச்சை” என்று அங்கலாய்த்து பெட் மீதே அமர்ந்து கொண்டு, “எல்லாத்துக்கும் காரணம் நீதான்” என‌ அருகில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தங்கை மீது கரடி பொம்மையை விசிறியடிக்கவும் அம்மா உள்ளே வரவும் சரியாக இருந்தது.

“அவ கூட ஏன்டி சண்டைக்கு போற? உனக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு ஆனாதானே அவளுக்கு காலகாலத்துல நல்லது நடக்கும்.”

இளையவளுக்கும் 23 வயது நெருங்குவது அம்மாவுக்கு இன்னுமொரு அச்சத்தை கொடுத்திருந்தது. மதுவுக்கு கல்யாணம் முடித்த கையோடு இளையவளுக்கும் ஆறு மாதத்தில் வரன் பார்க்க வேண்டும், மதுவை போல இவளுக்கு திருமணம் தள்ளி செல்ல வாய்ப்பே இல்லை. யாராக இருந்தாலும் நீங்க பார்த்து செஞ்சா போதும் என்று சொல்லிவிட்டாள். அம்மாவுக்கு அதிலொரு நிம்மதி.

“உங்கூட பிறந்தவ தான இவளும், நீ மட்டும் ஏன்டி இப்படி திமிர் பிடிச்சு திரியற?”

“ஆமா உங்களுக்கு நான் என்ன செஞ்சாலும் தப்பு. நான் வேணா ஹாஸ்டல்ல போயி தங்கிக்கறேன். உங்களுக்கு ஒரு பொண்ணு தான்னு சொல்லி அவளுக்கு முதல்ல கல்யாணத்த செய்ங்க. என்னமோ எல்லா தப்பும் என் மேலதான்ற மாதிரியே பேசறிங்க? வாறவன் பூரா நகைக்கு தான் ஆசைப்படறான். எவன் பொண்ணு நல்லா இருக்கா இல்லியான்னு பார்க்கறான்? மனசு பார்த்து இங்க ஒரு கல்யாணமும் நடக்கறது இல்ல. எனக்கு இப்படி பண்ற கல்யாணம் வேண்டாம். என்னைய விட்ருங்க.”

இதற்கு மேல் அம்மாவோடு விவாதம் செய்ய அவள் தயாராக இல்லை. ஹெட்செட் போட்டுக்கொண்டு பாடல் கேட்கலானாள். இப்படி தான் தன் அதிகபட்ச எதிர்ப்பைக் காட்டுவாள். நீ என்னமும் பேசிக் கொள், அதை நான் கேட்பதாக இல்லை என்றவாறு.

“ஏங்க, இதெல்லாம் நீங்க என்னன்னு கேட்க மாட்டிங்களா?”

அப்பாவுக்கு அதற்கு மேல் அங்கிருந்து இவர்கள் இருவருக்கும் பஞ்சாயத்து செய்ய முடியாது என தன் வேலையைப் பார்க்க கிளம்பிவிட்டார். பாத்திரக்கடை வைத்திருக்கிறார். வீட்டில் ஓரளவு வசதி தான். மிடில் கிளாசில் இருந்து சற்றே உயர்ந்த குடும்பம் அது.

ஆரம்பத்தில் அம்மாவின் கோபங்கள் எல்லாமே நியாமாகவும் தன் மீது அக்கறையாகவும் உணர்ந்த மதுமதிக்கு தற்போதெல்லாம் அப்படியல்லாமல் தான் ஒரு சுமையாக இந்த வீட்டில் இருக்கிறோமோ என உணரத் தொடங்கி விட்டிருந்தாள். அவளின் படிப்பிலும் குறைவில்லை M.Sc Physics. அது தொடர்பாக லெக்சரர் வேலை. சம்பளமும் மாதம் 24,000 வருகிறது. 23 வயதில் மாப்பிள்ளை பார்க்கத் துவங்கி இன்னும் சரியான வரன் எதுவுமே அமையாத விரக்தி அவள் பெற்றோருக்கு.

ஒரு வேளை அவள் ஆரம்பத்தில் வைத்த டிமாண்ட்கள் காரணமாக இருக்குமோ என யோசித்தால் அப்படி ஒன்றும் அவை பிரமாதமானவை அல்ல. “என்னை விட மூன்று வயது மூத்திருக்கணும், கலர் பிரச்சினை அல்ல, பார்க்க கெத்தா இருக்கணும். அவ்வளோதான்.”

40 ஜாதகம் வந்து, அதில் 8 பொருந்தி, 5 நகை பிரச்சினைகளில் கழன்று கொள்ள, மற்ற மூவரை இவள் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டாள். இந்த மூவரும் மதுவுக்கு 23 வயது இருக்கும் போது வந்த வரன்கள். இதுதான் அம்மாவின் கோபத்திற்கு முதல் காரணம்.

மதுவுக்கோ அம்மாவின் மீது வெறுப்பு வரத்துவங்கியது இந்த நகை பிரச்சினைகளில் தான். அவளின் டிமான்ட்களுக்கு ஏற்பில்லாதவன் என்றால் கூட சரி என்று சம்மதித்தாள். சரி எப்படியும் எவனையாவது கட்டிக்கத் தானே செய்ய வேண்டும். இனி நமக்கு பிடித்தவன் எங்கே வரப்போகிறான். கொஞ்சமாவது matured-ஆக நடந்து கொள்வோம், வாழ்க்கையை எதிர்கொள்வோம் என்ற முடிவில் தான் சம்மதித்தாள்.

ரொம்ப நல்ல குடும்பம். பையனும் பார்க்கக் லட்சணமா இருக்கான். இத்யாதி இத்யாதி என்று பையன் வீட்டு பெருமைகளை பற்றி பேசி, நகை பிரச்சினையில் தட்டிக் கழியும் போது அந்த குடும்பத்தின் குறைகளை சொல்ல ஆரம்பிப்பாள் அம்மா. இப்போது தான் மதுவிற்கு கோபம் வரும்.

“அப்போ அந்த குடும்பம்ல இவ்வளோ குறை இருக்குது. ஆனா என்னை அது ஒரு நல்ல குடும்பம்ன்னு ஏமாற்றித் தள்ளி விடத்தானே பாக்க‌றீங்க‌?” மதுவிற்கு தெரிந்தே இருக்கிறது யாரும் 100% perfect இல்லை என்று இருந்தாலும் அந்த இடத்தில் இப்படிக் கத்துவது ஒரு சமாதானமாக இருந்தது.

மது எப்போதும் தோழிகளோடு சொல்லிக்கொண்டே இருப்பாள்.

”ஒருத்தன் வருவான். எந்த காரண காரியமும் இன்றி அவனை எனக்கு பிடிக்கும். உயிரில் நிறைவான். அப்படி ஒருவனை கல்யாணம் செய்யணும்.”

ஒரு வேளை அப்படி ஒருவனை இவள் இன்னும் பார்க்கவில்லையோ?

வெளியில் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாலும் உள்ளுக்குள் உடைந்துதான் போயிருந்தாள். எனக்கு கல்யாணம் ஆகவில்லை என்று கவலையாக இருக்கிறதென எந்தப் பெண் தான் வெளிப்படையாகச் சொல்வாள்? கூடப்படித்த பெண்கள் அனைவரையும் குழந்தை சகிதம் பார்க்க நேர்கையில் அவர்களை சந்திப்பதைத் தவிர்ப்பதைத் தவிர வேறு வழியும் இல்லை.

உறவுக்காரர்களின் அறிவுரைகளுக்குப் பதில் சொல்லி மாளவில்லை. அந்தக் கோவிலுக்கு போ, விளக்கு போடு, பிரதோஷ விரதம் இரு என தனக்கு ஒத்து வராதவைகளைக் கேட்டு கேட்டுச் சலித்து போயிருந்தாள். அம்மாவுக்கோ இவள் கடவுள் மேல் பெரிய நாட்டம் இல்லாதது தான் திருமணத் தடை என்று தீவிரமாக நம்புகிறாள். அவள் நம்புவதற்கு ஏதேனும் ஒரு சாக்கு வேண்டும். கூடவே அடுத்து இருக்கும் தங்கையின் வாழ்கையும் துணை சேர அர்ச்சனைக்குக் குறைவே இல்லை.

மதுவை பொறுத்தவரை தான் எடுத்த முடிவுகள் தவறோ? என்ற மனநிலையில் எந்த சரியான முடிவும் தன்னால் எடுக்க முடியாதென்று நம்ப தொடங்கி இருந்தாள். எனக்கான என் வாழ்க்கை துணையை நான் தீர்மானிப்பதில் தவறென்ன இருக்கிறது? வரதட்சணை நகை நட்டு சமாச்சாரங்களில் துளி அளவும் விருப்பமில்லை. இருந்தும் அதற்குச் சம்மதித்தேன். என் ஆசைப்படி ஒருவன் வரப்போவதே இல்லை எவனையோ கட்டிக் கொள்ளலாம் என்ற முடிவும் இப்போது எடுத்தாயிற்று. ஒன்று அம்மாஞ்சியாக வருகிறான், இல்லையென்றால் முரடனாக வருகிறான்.

அம்மா எப்போதும் சம்பளத்தையும் குடும்ப பின்னணியும் தான் பார்க்கிறாள். எனக்கு ஏற்றவனா என்று பார்ப்பதே இல்லை, எல்லாம் கூடி வருமென ஒரு குடும்பத்தைப் புகழ்கிறாள் இல்லையென்று ஆனதும் இகழ்கிறாள். உண்மையில் அவள் எனக்காகத் தான் இதெல்லாம் செய்கிறாள். நான் காயப்பட்டு விடக்கூடாதே என்றுதான் செய்கிறாள். ச்சே, இப்படி ஒரு நல்ல குடும்பத்தில் நம்ம பொண்ணுக்கு வாழ கொடுத்து வைக்கவில்லையே என்று சொன்னால் நான் வருத்தப்படத்தானே செய்வேன். இது புரிகிறது ஆனால் இது எனக்கு புரியாமல் இருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். எனக்கு மட்டும் ஏன் இப்படி?

எனக்கு வரும் கணவன் முதலிரவில் என்னை தூங்க வைத்து அழகு பார்க்க வேண்டுமென ஆசைப் படுகிறேன். ச்சீ, அதெப்படி முதல் நாளே செக்ஸ் வைத்துக்கொள்ள முடியும்? அதுவெல்லாம் ஒரு மழை நாளில் தானாய் நிகழ வேண்டும். கல்யாண ஆசை என்றால் செக்ஸ் வைத்துக்கொள்வது தானே! ஆனால் அப்படி எந்த ஆசையும் எனக்கு வரவில்லையே! உண்மையில் எனக்கு கல்யாண ஆசை இல்லையா?

அல்லது அந்த வயதை தாண்டிவிட்டேனா? கூட படித்த பெண்கள் எல்லாம் அவனவன் கூட ஊர் சுத்தி அங்க தொட்டான் இங்கு தொட்டான் என்ற கதைகள் கேட்டிருக்கிறேன். சிலர் படுக்கை பகிர்ந்த செய்தி வரை சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நல்ல மாப்பிள்ளையாக அமைகிறார்கள். எனக்கு மட்டும் ஏன்? இவ்வளவு ஓழுக்கமாக இருந்தது யாருக்காக? ஒரு வேளை நானும் அவர்கள் போல நிறைய ஆண்களோடு சுற்றி இருந்தால் எனக்கு கல்யாணம் என்பது பெரிய விசயமாகவே இருந்திருக்காது தானே?

இப்போது யாரையாவது காதலித்தால் என்ன? 27 வயசுல எப்படி காதல் வரும்? கேள்விகள் கேள்விகள் கேள்விகள். எதற்கும் பதிலில்லை அவளிடம்.

கல்லூரிக் காலத்தில் வந்த ப்ரப்போசல்கள், தன் பின்னால் சுற்றிய ஆண்கள். தோழன் ஒருவன் விரும்புகிறான் என்று தெரிந்தும் அவனுக்கு அதைச் சொல்ல வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது. எல்லாம் நினைவில் ஆடியது, தன அழகிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவே நினைத்துக் கொண்டாள்.

பழைய நண்பர்களோடு தற்போது வாட்சப்பில் பேசினால் எல்லாரும் தவறாமல் சொல்லும் வாக்கியமாக ”நான் கூட உன்னை விரும்பினேன்” என்பது இருக்கிறது. எனக்கு மட்டும் கல்யாணம் ஆகியிருந்தால் இவர்கள் இப்படிச் சொல்வார்களா? ஆழம்தானே பார்க்கிறார்கள்? சரி, பழைய நண்பர்கள் தானே என்ற உரிமையில் சாட் செய்து கொண்டிருந்தாள். தோழிகளோடு அதிகம் பேசுவதில்லை. அவர்கள் அக்கறை என்ற பெயரில் ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள் பழைய நண்பர்கள் பழைய நண்பர்களே.

அவர்களால் தற்போது பழையபடி இருக்க முடியாது என்று தெரிந்தே வைத்திருந்தாள். எனில் ஆண் நண்பர்களோடு மட்டும் ஏன்? அவன் தான் அடிக்கடி ”நீ அழகு” என்று சொல்கிறானே! கெத்தான பெண் என்கிறான், தேவதை போல் இருக்கிறாய் என்கிறான். உடலை வர்ணிக்கிறான், வரம்பு மீறினாலும் நாம் என்ன பதின்பருவ பெண்ணா இதற்கெல்லாம் கோபப்பட என்று திடீரென mature ஆகிறாள், இதெல்லாம் கேட்பதற்குச் சந்தோசமாக இருக்கிறதே! சுயநலம் தான். ஆனால் இவள் ஏதோ தான்தான் பெருந்தன்மையாக அவர்களிடம் பேசிக்கொண்டு இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தாள்.

“சமையலுக்கு கூட ஒத்தாசை செய்யாமல் செல்போனையே கட்டிக்கிட்டு அழு” என்ற அர்ச்சனையோடு குழம்பு தாளிக்கும் வாசனை.

மதியம் சாப்பிட வந்த அப்பா ஒரு கவரை இவளிடம் நீட்டி, “பையன் பெயர் ஆகாஷ் பெங்களூரில் வேலை. மாதம் 60,000 சம்பளம். வயசு 29. உன் போட்டோ எல்லாம் பார்த்து ஒக்கே சொல்ட்டாங்க, நகை பேசியாச்சு, ஜாதகம் ஏக பொருத்தம் இருக்குது. நீ பாரு. உனக்கு சரின்னா அவனை வரச் சொல்வோம். இனி உன் பேச்சு கேட்காமல் எந்த வரனும் நம் வீட்டிற்கு வர மாட்டாங்கடா.”

அப்பாவின் பேச்சு அவளுக்குச் சற்றே ஆறுதலாக இருந்தது. கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்ததால் இவளுக்கெல்லாம் என்ன கவலை இருந்துவிட போகிறது எதற்கும் அசரமாட்டாள் என்று தன்னை பற்றிய ஒரு பிம்பம் படிந்துவிட்டதோ என யோசித்தாள். நல்லவேளை அப்படியாகவில்லை.

பார்வையிலிருந்து அப்பா மறைந்ததும் கவரைப் பிரித்து பார்த்தாள். முழுக்கை சட்டையை மடித்து விட்டுக்கொண்டே தலை தாழ்த்தி, பார்வை உயர்த்தி, லேசாக சிரித்தபடி போஸ். ப்ளைன் ஒயிட் சர்ட், தொப்பை இல்லை, முடியும் அடர்த்தியாக இருந்தது, கலர் மாநிறம் தான். பெரிய அழகெல்லாம் இல்லை. ஆனால் ஆண்மை நிரம்பி இருந்தது அவனிடம். பார்த்த மாத்திரத்தில் அந்த கெத்து பிடித்துப்போனது.

ஏக மனதாக முடிவெடுத்துச் சொன்னாள், “சரி வர சொல்லுங்கப்பா”.

அப்பா சிரித்துக்கொண்டே “சரி நாளைக்கு சாயந்திரம் வெள்ளனவே வீட்டுக்கு வந்திடு. அவங்க வர்றாங்க.”

ஜாதகம், நகை எல்லாமும் சாதகமாகவே இருக்கிறது. புகைப்படம் பார்த்து என்னைப் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டான். இவனை நாளை வரச் சொல்வது கூட ஒரு சம்பிரதாயம் தான். இவனையே கட்டிக் கொள்ளலாம். என் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைத்து விட்டது.

உனக்காகதானடா இத்தனை நாள் காத்திருந்தேன். நாளைக்கே பூவைத்து உறுதி செய்தால் நன்றாக இருக்கும். இவன் கெத்துதான். ஆனால் நான் கிடைப்பதற்கு இவன் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.

அது சரி, அப்பாவுக்கு எப்படித் தெரியும் இவனை எனக்கு பிடிக்குமென? ஏற்கனவே வரச் சொல்லிவிட்டுத் தான் என்னிடம் அனுமதி கேட்டாரா? இந்தக் கேள்விகள் எல்லாம் இப்போது அனாவசியமாகத் தோன்றியது. உடனே FB ஒப்பன் செஞ்சு அவன் பெயர் வேலை செய்யும் கம்பெனி படித்த கல்லூரி என ஒவ்வொன்றாக டைப் செய்து அவன் அக்கவுன்ட் தேடி எடுத்துவிட்டாள். அதில் அவன் ஒரு சுற்றுலாப் பிரியன், ராஜா ரசிகன் என்பதும் அடிக்கடி FB உபயோகிக்க மாட்டான் என்பதும் தெரிந்தது. அவனின் போட்டோக்களில் ஏதேனும் பெண் பெயரில் கமென்ட் இருக்கிறதா எனத் தேடினாள் ஒரே ஒருத்தி மட்டும். அதுவும் ”கலக்கல் அண்ணா” என்ற கமென்ட். அதனால்தான் அவளை மன்னித்தாள்.

அம்மாவின் திட்டு இல்லாமல் எந்த மனக்குழப்பங்களும் இல்லாமல் ஒரு நல்ல இரவு அவளுக்கு. கல்யாணம் பற்றிய அத்தனை கேள்விகளுக்கும் அவனைப் பதிலாக்கிவிட்டு நிம்மதியாக தூங்கினாள்.

மறுநாள் காலை அவனுக்காகவே குளிப்பது போல உணர்ந்தாள். இந்த உடலை அவன் தான் ஆளப் போகிறானா? ச்சே என்ன இது ஒரு பெண் பார்க்கும் படலத்திற்கே இப்படி எல்லாம் தோன்றுகிறதே. இல்லை இல்லை, இது பெண் பார்க்கும் படலம் இல்லை. கல்யாணம் முன் பெண்ணும் மாப்பிளையும் சந்தித்து பேச ஒரு வாய்ப்பு. அப்படிதான் நான் நம்புகிறேன். அப்பா தான் சொல்லிவிட்டாரே, எல்லாமும் ஒக்கே என்று. சும்மாவா நல்ல நேரம் பார்த்து பெண் பார்க்கவே வரச் சொல்லுவார்கள்! ஏதோ இருக்கிறது!

எனக்கு கூட உள்ளுணர்வு சொல்கிறது, அவன் தான் கணவன் என. யுகம் யுகங்களாய் எனக்காகவே காத்திருந்த ஒருவன். அப்பறம் என்ன. யோசிக்கலாம் தப்பில்லை. எப்படி அவன் முன் முழு நிர்வாணமாய் நிற்பேன்? பீரியட்ஸ் டைமில் நாமே போய்த்தான் நாப்கின் வாங்க வேண்டும். குளித்து முடிப்பதற்குள் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டிருந்தாள். கழுத்தோர பல் தடம், உதட்டில் காயம். எல்லாம் அவனால்தான். அதை எப்படி மறைப்பதென்று சேலை கட்டும் போது யோசித்து முந்தானையைக் கழுத்தை சுற்றிப் போட்டு பார்த்தாள். ஹ்ம்ம், இப்ப ஒக்கே யாருக்கும் காயம் தெரியாது. இடுப்புக் கொசுவத்தை தொப்புளுக்கு மேலே ஏற்றிவிட்டாள், ஜாக்கெட்டோடு சேர்த்துச் சேலையைப் பின் செய்து கொண்டாள்.

இனி அவனுக்கு மட்டும்தான் எல்லாமே.., அவன் மட்டும்தான் பார்க்கணும்.

கல்லூரியில் எல்லா கண்களும் தன் அழகை ரசிப்பதாகவே எண்ணிக்கொண்டாள். எல்லா ஆண்களையும் பொறுக்கி போல பார்த்துக் கொண்டு. உங்களுக்கு இந்த அழகு கிடைக்காது. அதற்கு ஒருவன் வரப் போகிறான். ஒரு சந்தோஷக் குதூகலம் அதில் மறைந்திருந்தது. ஒரு விடுதலை உணர்வு இருந்தது.

மாலை 3 மணிக்கெல்லாம் காலேஜில் இருந்து கிளம்பி வீட்டுக்கு வந்து விட்டாள்.

அம்மா ஆச்சரியமாகப் பார்த்து, “ஏன்டி, உன்னைய எங்கயும் திரியாம 5 மணிக்குத் தான வரச்சொன்னேன்?”

“அட, போம்மா இன்னிக்கு எக்ஸாம் டியூட்டி இருந்துச்சி. அதான் சீக்கிரம் முடிஞ்சுட்டு.” என வாயில் வந்த பொய்யைச் சொல்லி மீண்டுமொருமுறை குளித்து, அவனுக்காகவே பிரத்யேகமாகத் தயாரானாள்.

பீரோ முழுக்க சேலை இருந்தாலும், பெண்களுக்கு, பிடித்த சேலை என்று ஒன்றிரண்டு தான் இருக்கும். அப்படியான ஒன்று – அதுவும் மயில் கழுத்து வண்ணப்பட்டு – எடுத்து உடுத்திக்கொண்டாள், ஒரே ஒரு டிசைனர் நெக்லஸ். புதுக்கண்ணாடி வளையல். ஐம்பொன் கொலுசென ஆர்வமாய்த் தயாராகிக் கொண்டிருந்தவளை அம்மா பார்த்துச் சிரித்துவிட்டுக் கடந்தாள்.

ஆறு மணிக்கு வந்தார்கள்.

வாசலில் அப்பாவின் ”வாங்க எல்லாரும் வாங்க” சொல் கேட்டதுமே அடி வயிற்றில் ராட்டினம் சுற்ற ஆரம்பித்துவிட்டது. இதயம் படபடத்தது, எழுந்து நின்று கொண்டு வரவேற்கத் தயாரானாள். முதலில் அவன் பெற்றோர், பின் ஒரு பெண் – அனேகமாக சித்தியாக இருக்கலாம். மரியாதை நிமித்தமாய்ப் புன்னகைத்தாள்.

இவர்களை எல்லாம் இப்போது யார் கேட்டது? எங்கே ஆகாஷ்? எங்கே என் ஆகாஷ்? அவனுக்கு வணக்கம் சொல்லவென பயிற்சி எடுத்து இருந்தாள். கைகள் அரூபமாய் அடிக்கடி வணக்கம் சொல்லிப்பார்த்தது.

மின்னலென வந்தான். ஜீன்ஸ் பேன்ட், வெள்ளைக்கலர் கார்கோ சட்டை, முகம் முழுக்கப் புன்னகை. ஷேவ் செய்யாமல் ட்ரிம் செய்து இருந்தான். கார் பார்க் செஞ்சுட்டு வந்தேன் என்ற காரணத்தை அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் கண் பார்த்து மார்புக்கூடெங்கும் பட்டாம்பூச்சி. வணக்கம் சொல்ல மறந்தவளாய் தலையசைத்துப் பார்வையால் வரவேற்றாள்.

இப்படி ஏன் என்னைத் தலைகுனிந்து உட்கார வைத்து இருக்கிறார்கள். இதற்கு முன் இப்படிப்பட்ட அனுபவம் உண்டு என்றாலும் அவர்கள் எல்லாரும் அம்மாஞ்சி மாப்பிள்ளை. இல்லன்னா முரட்டு ஆசாமி. அதனால் தான் எதுவுமே தோன்றியதில்லை. ஆனால் இவன் அப்படி அல்லவே. கணவனாகப் போகிறவன் அல்லவா! அதனால்தான். இப்போது இவனை எப்படிப் பார்ப்பது? அவன் கவனத்தைத் தன் பக்கம் எப்படி ஈர்ப்பது என்ற யோசனையில் இரண்டு முறை இருமினாள். கண்ணாடி வளையல் சலக் சப்தம், பட்டுப் புடவைச் சரிகை என ஒவ்வொன்றாய் அவனை இவள் பக்கம் திருப்பின.

அவன் பெற்றோர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதாய்த் தான் அவனை ஏறெடுக்க வேண்டி இருந்தது. எதேச்சையான பார்வை தான் கண்களில் நிலைகொண்டது, பார்வையாலே வருடினான். நீ ரொம்ப அழகு என்று கொஞ்சினான். பதட்டப்படாதே என ஆற்றுப்படுதினான். என்ன இது எனப் பட்டென கண்களை விலக்கி, இனி அவன் பார்க்காத போதுதான் பார்க்க வேண்டும் என முடிவு செய்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வேறெங்கோ பார்த்தபடி நடித்துக்கொண்டிருந்தனர்.

கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அவனை அணுஅணுவாய் ரசித்தாள். அவன் செய்கை, உட்காரும் விதம், யாருக்கும் தெரியாமல் புருவம் உயர்த்தி பிடிச்சிருக்கா என கேட்டது, ஒவ்வொன்றாய் அவனை உள்வாங்கி விட்டாள். இவளுக்கு அந்த இடத்தில் இருப்புக் கொள்ளவில்லை.

ஐயோ, என்ன இவன், என்னை இப்படிப் பார்கிறான். தின்று விடுவான் போல. அவ்வளவு பிடித்திருக்கிறதாடா என்னை? இத்தனை வருடப் பெண்மை உனக்காகத்தான். அப்படி பார்க்காதே, என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. கால்களை உள்ளிழுத்து சேலையால் மறைத்துக்கொண்டாள். கைகளும், கழுத்தும், முகமும், நிர்வாணமாக இருப்பது போல உணர்ந்தாள். உன் முன் ஐந்து ஆடை தரித்தாலும் எல்லாம் வீண்தான் போல.

சிரிக்க வேண்டும் போல இருந்தது. அடக்கிய சிரிப்பு கன்னத்தில் வெட்கமாக வெளிப்பட்டதை அவளே உணர்ந்தாள். ஓ இப்படிதான் வெட்கம் இருக்குமா! நன்றாகத் தான் இருக்கிறது.

நோக்காக்கால் தனை நோக்கி மெல்ல நகும் கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒரு மணி நேரம் லயித்திருந்தாள்.

கிளம்பும் போது வாசல் வரை வழியனுப்ப வந்து, அவன் பட்டெனத் திரும்பி மூச்சு சுடும் நெருக்கத்தில் போய்ட்டு வருகிறேன் என்று சொல்லும் போது, ஒரு கணம் அதிர்ந்து பார்வையால் விடை கொடுத்தாள்.

செருப்பு போடுவதில் துவங்கி கார் அருகில் செல்லும் வரை திரும்பி திரும்பி பார்த்தான். கண்களால் ஏதோ சொன்னான். சீக்கிரம் வருகிறேன் என்பதாக மதுவுக்குப்பட்டது.

இவன்தான் இவன்தான் நான் எதிர்பார்த்தவன் இவன்தான். இவனோடுதான் என் மிச்சகாலம். என் எல்லா அறிவையும் மழுங்கடித்து விட்டான். வேறெதுவும் யோசிக்கவிடாமல் செய்துவிட்டான்.

தங்கை வேறு காதை கடித்தாள். ”ஏய் எரும, அவன் உன்னை எப்படிப் பார்த்தான் தெரியுமா?”

“ஆமாம் போ.” தனக்கு இது ஒரு பெரிய விசயமில்லை என்பதாகக் காட்டிக்கொண்டாள்.

மறுநாள் காலையில் அப்பா போனில் பேசிக்கொண்டு இருந்தார். அவர் சம்மந்தி சம்மந்தி என்று பேசுவதை கேட்பதற்கே அவளுக்கு ஆனந்தமாக இருந்தது.

“இல்ல சம்மந்தி. அது இப்ப எடுத்த போட்டோ தான்.”

“கோவிலுக்கு கூப்டு வந்தப்ப நீங்க பார்த்திங்கல்ல, அப்பறம் என்ன?”

“பொண்ணோட வயசு ஏற்கனவே உங்களுக்குத் தெரிந்தது தானே?”

“மாப்ள என்ன சொல்றார்?”

“வீடு பார்க்க வந்தப்பவே நீங்க சொல்லி இருக்கலாம்”

“சரிங்க, பரவால்ல ஜாதகத்த ப்ரோக்கர்ட்ட கொடுத்து விட்ருங்க.”

அப்பாவின் குரல் தள்ளாடியது. அம்மாவிடம் தன் ஆற்றாமையை காட்டிக்கொண்டிருந்தார்.

“இவன் போனா போறான். பெரிய மாப்ள. அவனும் அவன் மொகரையும் பொறுக்கி மாதிரி இருக்கான். பொண்ணு போட்டோல ஒருமாதிரி இருக்காம் நேர்ல ஒரு மாதிரி இருக்காம். அவன் அப்பன்தான் கோவில்ல வச்சு பார்த்தான்ல. அப்ப தெரியலயாமா? என் பொண்ணு ராசகுமாரிடி.”

மதுவிற்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என யூகிக்க முடிந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லை. இதற்கும் காரணம் நான்தான் என்று திட்டினால் நான் அழுதுவிடுவேன்.

இல்லை, நான் அழ மாட்டேன். தைரியமாக இருக்க வேண்டும். அவனுக்கு என்னை எப்படி பிடிக்காமல் போகும் கண்ணால் பேசினானே? இல்லையெனில் அது ஒப்பீடா? அப்பா சொல்வது போல பொறுக்கியாக இருப்பானோ? இருந்தால் தான் என்ன? கண்ணாடியைப் பார்த்தாள். நான் அழகாகத்தானே இருக்கிறேன்?

இப்போது யாராவது என்னை அழகென்று வர்ணித்தால் நன்றாக இருக்கும். பைத்தியம் பிடித்து விடும் போல இருக்கிறது. அறையைப் பூட்டிக்கொண்டு அழலாம். இல்லை, எவனோ ஒருவன் பெண் பார்க்கும் சாக்கில் சைட் அடிச்சுட்டுத் தான போயிருக்கான் இதற்கெல்லாம் எதற்கு அழனும்? நான் அழக்கூடாது.

எதற்கும் கவலை இல்லாதவள் என்ற பிம்பம் தான் இந்தக் குடும்பத்தை கொஞ்சமேனும் நிம்மதியாக வைக்கும். நான் ஒரு லெக்சரர். எனக்கு maturity அதிகம். இதற்கெல்லாம் அழுவதற்கு நான் என்ன சின்ன பிள்ளையா? என்று தன்னை தானே சமாதானப்படுத்திக்கொண்டு இருக்கும்போது,

அப்பா உள்ளே வந்து சொன்னார்.

“மது…”

“என்னப்பா?”

“அழாதம்மா.”

வெடித்து அழத் தொடங்கினாள்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book