20

காமத்தின் பரிணாமம்

அப்பு

குஷ்வந்த் சிங். இந்தப் பெயரை முதன் முதலாய் குமுதம் அரசு பதில்களில் தான் படித்தேன். அப்பொழுது அவர் எழுதிய Company of Women பற்றி ஒரு பாராவுக்கு எழுதி இருந்தார்கள். சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் அதுவரை படித்தது எல்லாம் பிசாத்து எனத் தோன்றியது. அக்கணம், ஆங்கிலப் புத்தகங்கள் படித்து ஆங்கில அறிவை (!) அகலமாக்கிக் கொள்ளும் ஆர்வம் மனதில் மிகக் கனமாகக் குடியேறியது.

நான் புத்தகப் புழுவாய் மேய்ந்து கொண்டிருந்த நூலகத்தில் எல்லாம் தமிழ் புத்தகங்கள் தான். ஆங்கிலப் புத்தகங்கள் எல்லாம் படிப்பு சம்பந்தப்பட்டவை. அதையும் அலமாரியில் பூட்டி வைத்திருப்பார்கள்!

இண்டு இடுக்குகளில் எல்லாம் இணையம் இழையாத இருண்ட காலம். ஆன்லைனாவது அமேசானாவது! காசு கொடுத்தாலும் எங்கள் ஊரின் எந்தப் புத்தகக் கடையிலும் கிடைக்காத காரணத்தால் ஆங்கிலப் புத்தகம் படிக்கும் ஆர்வம் அப்பொழுதே அகால மரணமடைந்தது. காலம் வரும் வரை குஷ்வந்த் சிங் காத்திருக்கட்டும் என்று கண் துடைத்துக் கொண்டேன்.

கல்லூரி நுழையும் முன்னர் ஆர்ச்சர் அறிமுகமாகி இருந்தார். கல்லூரி காலங்களில் சிட்னி ஷெல்டன், மைக்கேல் க்ரிக்டன், ஸ்டீபன் கிங், ராபின் குக் என பலரும் அறிமுகமானார்கள். தொன்மையானது என்றாலும் டொங்காகி விட்டது என தமிழுக்கு டாட்டா காட்டிக் கொண்டிருக்கையில் கண்டேன், கிண்டி பிளாட்பார புத்தக் கடையில் Company of Woman!

அண்ணா, “அந்த புக் வேண்டும்” என்றேன். எது எனக் கேட்ட போது பேரை சொல்லாமல் அது அது எனக் குழந்தை போல் கை காட்டினேன். பேரம் பேசாமல் கேட்ட காசைக் கொடுத்து நடையைக் கட்டினேன்.

படித்துப் பார்த்த பின் புஸ்வாணமாய் இருக்கிறதே என்று தான் தோன்றியது! காரணமாக குஷ்வந்தைக் குற்றம் கூற முடியாது! குறை வைக்காமல் தான் எழுதி இருந்தார். கதையும், கலந்திருந்த காமமும் என்னைக் கவரவில்லை! அவ்வளவு தான்!

எல்லாம் ஹரால்ட் ராபின்ஸால் வந்த வினை! வினையை விவரமாகப் பார்ப்பதற்கு வரலாற்றில் சற்றே பின்னோக்கிப் பயணப் பட வேண்டும். ஆங்கில அறிவை வளர்க்க அணை போடப்பட்ட காலத்தில், தத்தெடுத்த தாய்மொழியாம் தமிழ் மொழியாம் தங்கமாம் என்று நூலகத்தில் நாட்களைத் தமிழ் எழுத்தாளர்களுடன் கழித்துக் கொண்டிருந்தேன்.

அப்படி ஒரு நாளில் ஜ.ரா.சுந்தரேசன் எழுதிய மனஸ் நாவலைப் படித்து Nymphomaniac என்ற வார்த்தையும், Harold Robbins என்று ஒரு நாவலாசிரியர் நன்றாக எழுதுவார் என்று ஞானம் கிடைத்தது.

எங்கள் ஊரிலும் லெண்டிங் லைப்ரரி இருக்கிறது. அங்கு அலமாரி என்ற அணை தடுக்காமல் ஆங்கில புத்தகங்கள் இருக்கும். என் நண்பன் ஒருவனின் வீட்டில் அங்கு புத்தகம் எடுப்பார்கள் என்று மேலும் ஞானம் கிடைத்தது. அவர்கள் வீட்டுக்கு போய், ஹரால்ட் ராபின்ஸ் புத்தகம் கிடைக்குமா என்று கேட்டதற்கு, Robin Williams படம் பார்க்க வேண்டிய வயதில் Harold Robbins புத்தகம் கேட்கிறதா என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள். அதோடு இப்படி கேள்வி கேட்டும் அவர்கள் அடிக்காமல் விட்ட பாவம் கழிய என்னை ஹர ஹர மஹாதவா என்று ஜபம் வேறு செய்ய சொன்னார்கள். (இப்பொழுது என்றால் மஹாதேவ்கியா என்று கேட்டு கடுப்பாக்கி இருக்கலாம்).

கன்றுக்குட்டி காளையாய் மாறிய போது, கல்லூரி நூலகத்தில் ஒரு வழியாய் ஹரால்ட் ராபின்ஸுக்கு ஹலோ சொன்னேன். யாரந்த ஹரால்ட் ராபின்ஸ்? 25 best sellerகள், 32 மொழிகள் என அவரின் புத்தகங்கள் சுமாராய் 750 மில்லியன் காப்பிகள் விற்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள். இறந்த பின்னும் அவர் பெயரில் ghost writerகள் எழுதி தள்ளிக் கொண்டிருக்கும் அளவு பிராண்ட் இன்னும் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது! விற்பனை எல்லாம் சரி. அவரும், அவரின் சரக்கும் எப்படி?

“ஹெமிங்வே சூப்பராக சிறுகதை எழுதுவார். அவ்வளவு தான். நாவல் என்றால் அது நான் தான். ஜான் பால் சார்த்தரின் (Jean-Paul Sartre) சிறப்பம்சம் என்றால் அது அவரின் மனைவி மட்டும் தான். என் கதைகளில் சொல்லப்பட்டிருக்கும் கெட்ட ஆட்டங்கள் அத்தனையும் நான் ஆடியிருக்கிறேன் அனுபவித்து எழுதி இருக்கிறேன்.” என்று அசராமல் பேட்டி அளிப்பார்.

அவரின் கதாநாயகர்கள், வாத்சாயனருக்கு வாத்தியார்களாய் இருக்குமளவு தகுதி படைத்தவர்கள்! அவரின் கதாநாயகர்களுக்கும் அவருக்கும் ஆறு வித்தியாசம் இருந்திருந்தால் ஆச்சரியம் தான். அவர் எழுதிய கதைகளை விட அவர் எழுதாத அவரின் வாழ்க்கைக் கதை வசீகரமானது என்றும் பேச்சு உண்டு!

“அவருடைய CarpetBaggers நாவல் வெளிவந்த போது எனக்கு 8 வயது. புத்தகத்தை வாங்கிய பாட்டியும் மற்ற பெரியவர்களும் போர்வைக்கு அடியில் மறைத்து மறைத்து வைத்து படித்தார்கள். படித்து முடித்த பின் வயது வந்த பிள்ளைகள் கைகளுக்கு கிடைக்க கூடாது என்று குப்பையுடன் சேர்த்து எரித்து விட்டார்கள்” என ஹரால்ட் ராபின்ஸின் மனைவி ஒரு பேட்டியில் சொன்னார். அந்த மனைவியை மணந்த போது ஹரால்ட் ராபின்ஸுக்கு வயது 76!

புத்தகத்தை எரிக்குமளவுக்கா என்றால் அந்தப் புத்தகம் தரும் பாதிப்பு அப்படி! ஒரு முறை அலுவலகத்தில் ஒரு நண்பருக்கு இதே புத்தகத்தை படிக்க கொடுத்தேன். அடுத்த நாள் திருப்பி தந்து விட்டார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் முகத்தில் தூக்கியெறிந்து விட்டார். என்ன அவ்வளவு சீக்கிரமாக ஒரே இரவில் படித்தாயிற்றா? நீங்கள் மெதுவாக அல்லவா படிப்பீர்கள் என்றேன். புத்தகமா இது. முடியவில்லை. பக்கத்தை திருப்பினால் பகீரென்று இருக்கிறது. சில பல ஆங்கில புத்தகங்களில் அப்படி இப்படி எழுதி இருப்பார்கள். இதில் அப்படி மட்டும் தான் இருக்கும் போலிருக்கிறது. அதுவும் இல்லாமல் எழுதப் பட்ட விதம், படு பயங்கரம். மனைவி வேறு ஊரில் இல்லை. வேறு வினையே வேண்டாம் என்று ஒடி விட்டார்!

ஹரால்ட் ராபின்ஸ் ஒரு நல்ல கதை சொல்லி. புத்தகத்தை படிக்க படிக்க பக்கங்கள் நகர்ந்து கொண்டே இருக்கும். அவ்வளவு சுவாரஸ்யம். காதல் காமம் எல்லாம் கதையோடு கலந்து தான் வரும். ஏனெனில் அவரின் கதை மாந்தர்கள் அப்படிபட்டவர்கள்! காதல் காமம் கழித்தாலும் கதை கனஜோராகத் தான் இருக்கும் என்பது எல்லாம் என் சொந்த அபிப்ராயம். அது ஒரு புறம் இருக்கட்டும்.

குஷ்வந்தின் Company of Women-க்கு மீண்டும் வருவோம். குமுதத்தில் அதற்கு ஏன் அவ்வளவு பில்டப்? அப்படி என்ன கதை? கதாநாயகன் அமெரிக்க கறுப்பழகியிடம் கற்பை இழப்பதில் ஆரம்பித்து பாகிஸ்தானியப் பெண், தமிழ்ப் பெண், வேலைக்காரப் பெண், பல்கலைக்கழக ஆசிரியர் என நிறம், இனம், மொழி, தேசம், அந்தஸ்து என அனைத்தையும் கடக்கும் அவனின் காதல் களியாட்டங்களை கண் முன் நிறுத்தும். அவ்வளவு தான். அதை எழுத ஆரம்பித்த போது அவருக்கு வயது 83. எழுதி முடித்த போது 85!

அதே குஷ்வந்த், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை பின்புலமாக வைத்து. மனோ மஜ்ரா என்ற ஒரு கற்பனை கிராமத்தில் நடப்பதாக Train to Pakistan என்று ஒரு நாவல் எழுதி இருக்கிறார். மனிதர்களின் மெல்லிய உணர்வுகளை வைத்து விளையாடியிருப்பார். கல்மனம் கொண்டவர்களுக்கும் கடைசி பக்கத்தின் கடைசி வரியில் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும்! அப்படி ஒரு Cult Classic!

அதை எழுதிய போது அவருக்கு வயது 41! முதலில் Train to Pakistan படித்து விட்டு Company of Women படித்தாலும் சரி, Company of Women படித்து விட்டு Train to Pakistan படித்தாலும் சரி. இந்த கை தான் அதையும் எழுதியதா? இது வேற கை, அது வேற கை என்று தான் நிச்சயம் தோன்றும்!

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று இருந்த ஹரால்ட் ராபின்ஸ் கசமுசா என்று கலந்து கட்டி எழுதியதில் ஆச்சரியமில்லை. க்ளாசிக் எழுதிய குஷ்வந்த், காலம் போன வயதில் ஏன் கன்னாபின்னா என்று எழுதினார். அதற்கும் குஷ்வந்த்தே பதில் சொல்லி இருக்கிறார்.

“As a man gets older, his sex instincts travel from his middle to his head!”

பி.கு: மனஸ் எழுதிய ஜ.ரா சுந்தரேசன் தான் அப்புசாமி, சீதாப்பாட்டி கதாபாத்திரத்தை உருவாக்கியவர்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book