27

குவியொளி

மகள் (@iAgarshana)

  • எனக்கு கதை சொல்லிக்கொண்டே, அப்பா தூங்கி போகிறார்!
  • அப்பாவின் விரல் பிடித்து நடக்கிறேன். சிறுவாளியால் கடலை அள்ளிவிட முடியாதா என்ன!
  • அப்பாவின் சிறுமுத்தம் ஆற்றுப்படுத்துகிறது, அழக்கூடாது எனும் நினைப்பை!
  • என் உடைகளும் என்னுடன் சேர்ந்து வளர்ந்தால் நன்றாக இருக்கும். பிடித்த உடைகள் இழக்கிறேன்.
  • இப்போதெல்லாம் எனக்கு ஊசிப்போட டாக்டர் அங்கிள்தான் பயப்படுகிறார்!
  • பள்ளியே செல்லாத எனக்கும் ஞாயிறென்றால் மகிழ்ச்சிதான், அப்பா முழுதும் வீட்டில் இருப்பார்!
  • பூச்சாண்டிக் கதைகளையும் நான் பயப்படாதபடி சொல்ல அப்பாவால் மட்டுமே முடியும்!
  • பேஸ்ட் இனிப்பாக இருக்கயில் விழுங்காமல் பல் துலக்க எப்படி முடியும்!
  • எங்க மிஸ்ஸோட பொண்ணு பாவம். அவளுக்கு வீட்டுலயும் மிஸ் இருப்பாங்க.
  • அப்பாவுடன் தங்க மீன்கள் சென்றேன். எனக்குப் பிடிக்கவில்லை, அப்பாவையே அழ வைத்துவிட்டது!
  • சுவாரஸ்யமாக கதை சொல்வதில் அப்பா மிகவும் கெட்டிக்காரர், அதனாலேயே என்னைத் தூங்க வைக்கமுடியாமல் தோற்றுவிடுகிறார்.
  • அம்மா பாரபட்சமாக நடக்கிறாள். நான் மட்டும் அதிகமாகவும், அப்பா அளவாகவும் சாப்பிட வேண்டுமாம். மாற்றிக்கொண்டால்தான் என்ன!
  • பாட்டியின் கண்ணாடியணிந்தால் நான் மிஸ் போல் இருக்கிறேனாம். எங்கள் மிஸ்கூட கண்ணாடி அணிந்தால் பாட்டி போலதான் இருக்கிறார்.
  • வளையல், தோடு, பாசி, கொலுசு என எத்தனையிருந்தும் அப்பாவின் தொளதொள வாட்சைக் கையில் தொங்கவிடும் போதுதான் மகிழ்ச்சி!
  • அம்மா என்னிடம் “சிலேட் பென்சில் தின்பதற்கில்லை, எழுத மட்டுமே” எனச் சொல்கிறாள். இதை சிலேட்டிடம் அல்லவா சொல்லவேண்டும்!
  • பெரியவர்களாய் இருந்து என்ன பயன், என்னைப் போல் வாயெல்லாம் கிரீம் அப்பிக்கொண்டு கேக் சாப்பிடத் தெரியாமலிருக்கிறார்கள்!
  • சுவர் முழுவதுமே எனக்கு ஸ்லேட்டாகத் தெரியும்போது கையடக்க ஸ்லேட்டுக்குள் முடங்கச் சொல்கிறது ப்ரீகேஜி!
  • அம்மாவைப் போல் அப்பாவுக்கு சரியாக ஊட்டிவிடத் தெரியாது. பாவம், அதனாலேயே அவரிடம் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுகிறேன்.
  • அப்பாவுடன் பைக்கில் முன்னமர்ந்து செல்லும்போது பிறர் அப்பாவிற்கு வைக்கும் வணக்கத்தில் எனக்குதான் எவ்வளவு பெருமிதம்!
  • பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு அது கிளம்பும்வரை டாட்டா காட்டிக்கொண்டே நிற்கும் அப்பாவைவிட பள்ளி என்ன கற்றுத்தரும்!
  • நிலவில் பாட்டி வடை சுடுகிறாள். காகம் வடையை திருடுகிறது. நரிக்கு எட்டவில்லை. இவை மூன்றும் வெவ்வேறு கதைகளின் வரிகளாம்!
  • எருமை மாடொன்று முதுகில் சிட்டுக்குருவி சுமந்து வாலை மிதமாக ஆட்டிக்கொண்டே புல் மேய்கிறது, ஹோம்வொர்க் கவலையில்லாமல்.
  • அப்பாவின் நண்பரான போலிஸ் அங்கிளின் துப்பாக்கியில் ரோல் கேப் வைத்து சுடமுடியாதாம். ரிப்பேர் ஆனதையா இவ்வளவு பாதுகாக்கிறார்!

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book