7

கூள மாதாரி : கட்டாயமும் மூர்க்கமும்

கிருஷ்ண பிரபு

கொங்கு மக்களின் வாழ்வையும், வாழ்வியல் உள்மடிப்புகளையும் எழுத்தாக்கியதில் பெருமாள்முருகனின் பங்கு கணிசமானது. கவிதை, சிறுகதை எனப் புனைவு சார்ந்து பெருமாள்முருகன் ஏராளமாகப் பங்களிப்பு செய்திருந்தாலும் அவரது நாவல்கள் தாம் பரவலான கவனத்தை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளன.

‘ஏறுவெயில்’, ‘நிழல்முற்றம்’, ‘கூள மாதாரி’ என ஆரம்பகால நாவல்களைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் பொழுது பதின்ம வயதுச் சிறுவர்களின் உலகத்தையே பெருமாள்முருகன் மீண்டும் மீண்டும் நுட்பமாக எழுத்தில் வடித்தெடுத்திருக்கிறார். அதிலும் ‘நிழல்முற்றம்’ மற்றும் ‘கூள மாதாரி’ ஆகிய இரண்டு நாவல்களிலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பதின்ம வயதுச் சிறுவர்களின் யதார்த்த வாழ்வியல் சிக்கல்களும், உடல் சார்ந்த பிரச்சனைகளும் அழுத்தமாகவே சொல்லப்பட்டிருக்கின்றன‌.

முழுக்க முழுக்கப் பரந்த வெளியாகிய மேட்டுக் காட்டுக்குள்ளேயே சுழலும் நாவல் ‘கூள மாதாரி’. பண்ணயத்தில் விடப்படும் சிறுவர்களின் வரையறைக்கு உட்பட்ட வாழ்க்கையின் அவலம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் என உழைப்பின் மூலம் சமூக நிலையை மேம்படுத்திக்கொள்ள வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் கொங்கு நாட்டு மக்களின் உழைப்பு, இவற்றுக்கிடையே சமூக வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஊடுபாவும் ஜாதிய அடுக்குமானத்தின் தாக்கம் என இந்நாவல் கொங்கு நாட்டின் யதார்த்த வாழ்வை அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது. கிராமத்தை விட்டு விலகியிருக்கும் மேட்டுக்காட்டின் நிலப்பகுதியில் ஆடு மேய்க்கும் சக்கிலிச் சிறுவர்கள் கொத்தடிமைகளாக சகித்துக்கொள்ளும் துயரங்களே ஆவணப் புனைவின் தன்மையில் இந்நாவலில் பதிவாகியுள்ளன.

‘புழுதி, ‘கொழிமண்’, ‘வறள்’ என்ற மூன்று பகுதிகளாக இந்நாவல் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பகுதிகள் முறையே பகல் – இரவுகளாக முழுக்க முழுக்கச் சித்தரிக்கப்பட்டுள்ளன. பகலின் கோடையில் மேட்டுக்காட்டில் சிறுவர்கள் தொழில்முறையாக ஆடு மேய்க்கும் நுட்பத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறார். அதன் வழியே கொங்கு மண்ணின் நிலவியல் நீட்சியும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. பகலின் தகிக்கும் வெப்பம் தணிந்து இரவானது பரப்பும் குளிர்ச்சியை இரண்டாம் பகுதி முழுமையும் நகர்த்திச் செல்கிறது. இரவு நேரத்தில் கால்நடைகளைப் பாதுகாக்கும் விதங்களை இதில் சொல்கிறார். இதன் தொடர்ச்சியாக பருவ காலச் சூழலின் மாற்றத்தின் ஊடே சிறுவர்களின் வாழ்வு நகர்ந்து யதார்த்தக் கண்ணிகளில் அவர்கள் சிக்குண்டு ஆட்படுவதை மூன்றாம் பகுதி பதிவு செய்திருக்கிறது.

திருச்செங்கோடு மலையேறி சூரியன் வெப்பத்தைப் பரப்பும் முன்பாகவே கூளையன் காட்டுக்குள் சென்று விடுகிறான். சக ஆடு மேய்க்கும் சிறுவர்களான வவுறி, நெடும்பன், செவுடி, மொண்டி ஆகியோரை எதிர்பார்த்து அவர்களுக்காகத் தனியே காத்திருக்கிறான். ஒவ்வொருவராக வந்து சேரவும் அவர்களின் உலகம் நம்முன் விரிகிறது. இச்சிறுவர்களின் வாழ்வு கட்டாயத் திருப்பத்தினால் நகர்வது. கவுண்டர்களிடம் வேலைக்குச் செல்லும் கட்டாயத் திருப்பதிற்கான சூழலை குடும்பப் பொருளாதாரச் சூழல் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தாலும், கொத்தடிமை வாழ்விலிருந்து வெளிவர முடியாத இறுக்கத்தின் கடுமையை நீட்டித்துக் கொள்ளும் தன்மையும் அவர்களுக்கு இயல்பாகவே அமைந்து விடுகிறது.

நீண்ட பகல் பொழுதுக்கு நீராகாரம் மட்டுமே உணவாக இருந்தாலும் பறவையின் முட்டையைப் பொரித்துத் தின்பது, நுங்குகளை வெட்டித் தின்பது, இயற்கையில் கிடைக்கும் கனி காய்களை பறித்துப் பங்கு போட்டுத் தின்பது, பரந்த வெளியில் ஓடிப் பிடித்து விளையாடுவது, கிணற்றில் குதித்து நீந்தி விளையாடுவது என பண்ணையாட்களாகக் கட்டுண்டு கிடக்கிறோம் என்பதையே மறந்து சிறுவர்களுக்குரிய திமிர்ப்புடன் சுதந்திரமாக அவர்கள் மேட்டுக்காட்டைச் சுற்றித் திரிகிறார்கள்.

பதின்மச் சிறுவர்களின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் விளையாட்டை மீறிய மனக் கிளச்சிக்கு அவர்களைத் தள்ளுகிறது. கூளையனுக்கு வவுறியின் மீது இருக்கும் நேசமும், நெடும்பனுக்கு செவுடியின் மீது இருக்கும் கிளர்ச்சியும் அப்படிப்பட்டது தான். கூளையன் வவுறியை சதா நேரமும் சண்டை பிடிக்கிறான். ஓடிப்பிடித்து அவளுடன் நட்பாக விளையாடுகிறான். மாறாக நெடும்பன் செவுடியுடன் உடலளவில் நெருங்கவே பிரியப்படுகிறான். உடல் இச்சை தான் செவுடியின் மீதான ஈர்ப்பை அவனுக்குக் கூட்டுகிறது. அதனைப் புரிந்துகொள்ளும் செவுடி இயல்பாகவே நெடும்பனை விட்டு விலகிச் செல்கிறாள்.

இறுக்கத்தின் கடுமையில் வாழ்ந்தாலுமே ‘உயிர்களின் வாழ்க்கை பாலியல் கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது’ என்கிறார் ஃபிராய்ட். நெடும்பனின் கிளர்ச்சியும் அவ்வகையில் சேர்ந்ததுதான். கவுண்டர் வீட்டுப் பிள்ளைகளான செல்வனும் மணியும் கூட பள்ளிக்கூடம் முடிந்ததும், சக்கிலிச் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி மகிழ்கிறார்கள். இங்கும் செவிடியைச் சேரும் ஆசை இயல்பாகவே மணிக்குப் பிறக்கிறது.

மொண்டியும் செவுடியும் தனிமையில் பேசுவதை நெடும்பனும் கூளையனும் பலவாறாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். இரவு நேரத்தில் பட்டியில் கட்டிவைத்த ஆட்டின் பின்புறத்தில் மொண்டி ஏறி முறையற்ற உறவு கொண்ட போது கவுண்டனிடம் வசமாக மாட்டிக் கொண்டான் என்று பேசி இருவரும் சிரிக்கிறார்கள். கொச்சையான வார்த்தைகளில் இருவரும் உடலுறவு சார்ந்த ரகசியங்கள் பலதையும் பேசிப் பகிர்ந்து கொள்கிறார்கள். கிணற்றில் குதித்து விளையாடிய போது ஈரத்துணி ஒட்டிக் கொண்ட செவுடியின் உடலையும், மொட்டாக அரும்பத் தொடங்கிய முலையையும் பார்த்து அவளுடன் மேலும் நெருங்க ஆசைப்படுகிறார்கள். நெடும்பன் விளையாட்டுப் போக்கில் மூர்க்கமாகவே செவுடியிடம் நடந்துகொள்கிறான்.

“உள்ளுணர்ச்சிகள் அனைத்திற்கும் மூர்க்கமே பொதுவாக இருப்பதால், மூர்க்கத்தோடு தொடர்புடைய கட்டாயத்தன்மை (Compulsion) உள்ளுணர்ச்சிகளின் பொதுப் பண்பாக அமைந்துவிடுகிறது” என்கிறார் ஃபிராய்ட். கிணற்றில் நீச்சலடித்து விளையாடும் பொழுது, செவுடி கிணற்றில் குதித்தவுடன் அவள் பின்னாலேயே குதித்து நெடும்பன் அவளை உரசிச் சிலிர்க்கிறான். செவுடிக்கு அவனது செயல் பிடிக்கவில்லை. முகம் சுளித்து நெடும்பனைத் தவிர்த்துச் செல்கிறாள். “மொண்டி கூடன்னாக் குதிப்பியா. எங்கூடக் குதிக்க மாட்டயா.” என்று நெடும்பன் கேட்பதும் ஒரு மூர்க்க எண்ணத்தால் தான்.

இனக் கவர்ச்சியினால் ஏற்படும் கிளர்ச்சியை மீறி அவர்களுக்கிடையில் நட்பு இயல்பானதாகவே வளர்கிறது. ஆடுகள் தொலைந்து போகும் பொழுதும், செவுடியிடம் வளரும் பால்குடி மறக்காத கவுண்டச்சியின் கைக்குழந்தை வீரிட்டு அழும் பொழுதும் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் ஒருவருக்கொருவர் உதவியுடன் இருக்கிறார்கள். மொண்டியே எல்லோரின் மீதும் அதிகாரம் செலுத்தும் இயல்பானவனாய் இருக்கிறான். வெயிலைப் பொழுது நேரடியாக அனுப்பும் நிலப்பகுதியில் ஆடுகள் அதுபாட்டுக்கு மேய்ந்து கொண்டிருக்க, மேற்பார்வை பார்த்துக்கொண்டே சிறுவர்கள் ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடுகிறார்கள். ஒவ்வொருநாளும் இப்படித்தான் சிறுவர்களின் பகல் நேரப்பொழுது கழிகிறது.

கவுண்டர் வீட்டுப் பையன் செல்வனும், கூளையனும் தனித்திருக்கும் இரவு நேரப் பொழுதுகள் கொங்கு மண்ணின் இன்னொரு பரிமாணத்தை முன்வைக்கிறது. ஆடுகளைத் திருடர்களிடமிருந்தும், விஷ ஜந்துக்களிடமிருந்தும் காப்பது கூளையனின் இரவுப் பணி. அவனுக்குத் துணையாக செல்வமும் பட்டிக் குடுசில் தங்குகிறான். காற்றடித்துத் தூறல் போடும் காலமானதால் இயற்கையில் எழும் சப்தங்களைக் கண்டு செல்வம் அச்சப்படுகிறான். கூளையனுக்கு இதெல்லாம் பழக்கம் தான். எனினும் பேய், முனி போன்றவற்றை கூளையனும் நம்பக் கூடியவனாகத்தான் இருக்கிறான். இயற்கையில் ஏழும் மெல்லிய சப்தங்களைக் கூட இரவுக் குறியாகப் பயன்படுத்தி நாவலை நகர்த்திச் செல்கிறார் பெருமாள்முருகன். பருவத்திற்கு ஏற்றார் போல – நடுநிசி நேரத்தில் பனைமரம் ஏறி பனங்கள் திருடிக் குடிப்பது, பனம்பழம் சேகரித்து அவற்றைக் கிழங்காக்க விவசாய நிலத்தின் மூலையில் பயிரிடுவது என நிலவொளி வீசும் மெல்லிய இருள் கவிழ்ந்த மேட்டுக்காட்டை இருவரும் சுற்றித் திரிகிறார்கள்.

தலைத்துண்டை அவிழ்த்துக் கால் கயிறாகக் கட்டிக்கொண்டு கூளையன் பனையேற, அது அறுந்து விட கோமணத்துண்டைக் கால்கயிறாகக் கட்டிக்கொண்டு நிர்வாணமாகப் பனையேறும் படிச் சொல்கிறான் செல்வன். பனையேறி தூக்குப்போசியில் சேகரித்து வந்திருந்த கள்ளினைத் துள்ளலுடன் பருக வருகையில் “அது நான் வாய் வெச்சுக் குடிக்க தூக்குப்போசிய்யா” என்று செல்வனிடம் கூறுகிறான் கூளையன். “மூடுடா” என்று சொல்லிவிட்டுப் போசியில் இருந்த கள்ளினைக் குடிக்கிறான் செல்வன்.

காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டும் நட்பு பாராட்டும் செல்வன் சண்டை போட்டுக் கொள்ளும்பொழுது “கண்டாரொலி, தாயோளி, சக்கிலி நாயே” போன்ற கூளையனைத் திட்டுகிறான். அவனுடைய சுபாவம் தெரிந்தே கூளையனும் சூழலுக்கு ஏற்றார் போல ஒத்துப் போகிறான். முள் காட்டில் பனம்பழம் பொறுக்கச் செல்கையில் செல்வன் தன் செருப்பைக் கூளையனுக்குக் கொடுத்து, “இந்தச் செருப்பத் தொட்டுக்குட்டுப் போடா…” என்று சொல்கிறான். செருப்பைத் தொட்டுக் கொள்ள ஆசையிருந்தும் மறுக்கிறான் கூளையன். “இந்தாடா…” என்று செல்வன் அழுத்தமாகச் சொல்லவும் செருப்பை அவன் போட்டுக் கொண்டு நடக்கிறான்.

அந்த நேரத்தில் கூளையன் அடையும் ஆனந்தம் – உச்சிப் பனை மரத்தின் குறுத்தைப் பிடித்துக்கொண்டு நின்ற நிர்வாணத்திற்கு ஈடானது. செல்வனுடன் கழிக்கும் இரவு நேரத் தனிமையில் இது போன்று சந்தோஷங்களும் கூளையனுக்குக் கிடைக்கிறது. பெருங்காற்று அடிக்கும் பொழுதும், குளிரானது வாட்டும் பொழுதும் செல்வனுக்கு மனித அருகாமை தேவைப்படுகிறது. அந்நேரங்களில் கூளையனை மிக நெருக்கமாக அவன் வைத்துக் கொள்கிறான். குளிர் வாட்டும் இரவில் பட்டிக்குடுசின் சிறிய கட்டிலில் இருவரும் இடைவெளியற்று ஒன்றாகப் படுத்து உறங்குகிறார்கள். குடுசைப் பெருங்காற்று தூக்கிக் கொண்டு செல்வது போல விசையுடன் வீச, பயத்தில் கூளையனின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொள்கிறான் செல்வன். பயத்திலும் குளிரிலும் நடுங்கும் அவனை மேலும் இறுக அணைத்துக் கொள்கிறான் கூளையன். கூளையனும் செல்வனும் ஒருபால் உறவில் திளைத்திருக்கக் கூடுமோ என்பதை அழுத்தமாகச் சொல்லாமல் யூகத்தின் அடிப்படையில் வாசக தளத்திற்கே விட்டு விடுகிறார். அப்படி இல்லாமல் சகஜமாகவே எடுத்துக்கொள்ளும் தன்மையிலும் அப்பகுதிகள் அமைந்திருக்கின்றன‌.

“நுட்பமாகப் பார்த்தால் இன்பக் கொள்கைக்கும் (Pleasure principle), இருப்புக் கொள்கைக்கும் (Relality principle) இடையில் தான் மனித உணர்வுகள் ஊசலாடுகிறது” என்ற ஃபிராய்டின் உளவியல் கருத்துப்படி இன்பக் கொள்கைக்கு செல்வனும், இருப்புக் கொள்கைக்கு கூளையனும் கச்சிதமாக பொருந்தி வருகிறார்கள். இரண்டு கொள்கைகளுக்கும் இடையிலான உணர்வுகளைத் தான் இரண்டாம் பகுதி சித்தரிக்கிறது.

பட்டியிலுள்ள ஆடுகளைத் தனியே விட்டு விட்டு இரவு நேர எம்.ஜி.ஆர் சினிமாவுக்குக் கூளையனை வற்புறுத்தி அழைத்துச் செல்கிறான் செல்வன். அதுவே கூளையனுக்குப் பாதகமாக அமைகிறது. பட்டியிலிருந்து ஒரு வெள்ளாடு காணாமல் போகிறது. சினிமாவுக்குச் சென்றதும், குட்டி ஆடு களவு போனதும் கவுண்டனுக்குத் தெரிந்தால் தன் நிலை என்னாகுமோ என்று கூளையன் உறைந்து போவதுடன் இரண்டாம் பகுதி முடிகிறது. இன்பக் கொள்கையும், இருப்புக் கொள்கையும் உயிர்களின் உளப் பண்புகளில் ஆதிக்கம் செலுத்தினாலும் – இவற்றின் தாய் வேராகச் செயல்படுவது “கட்டாயமும் மூர்க்கமும்” என்னும் பிராய்ட் ‘கட்டாயத் திருப்பத்தை’ இன்பியலுக்கும் (Hedonisam) மேலான உளப்பண்பாகப் பார்க்கிறார்.

நாவலாசிரியர் மூன்றாம் பகுதியில் ஆடு மேய்க்கும் சிறுவர்களின் யதார்த்த நெருக்கடிகளைப் பதிவு செய்கிறார். கவனக் குறைவால் விஷச் செடிகளைச் சாப்பிட்டு நெடும்பன் கண்காணிப்பில் இருந்த சில ஆடுகள் இறந்து விடுகின்றன. கூளையன் சினிமாவுக்குச் சென்று ஒரு வெள்ளாட்டைக் களவுக்குக் கொடுக்கிறான். நெடும்பன் திருச்செங்கோடு மலையடிவாரக் கோவிலுக்கு ஓடி விடுகிறான். கூளையன் பெற்றோரிடம் ஓடி விடுகிறான். நெடும்பனைக் கண்டுபிடித்துச் சாட்டையால் அடித்து மீண்டும் கூலியாக வேலைக்குச் சேர்க்கிறார்கள். தொலைந்த ஆட்டிற்கும் சேர்த்து கூளையனே கடனை அடைப்பான் என்று அவனுடைய பெற்றோரே கவுண்டனிடம் சமாதானம் பேசிப் பட்டிக்காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். சிறுவர்களின் வாழ்வு மீண்டும் மேட்டுக்காட்டை நோக்கியே திசை திரும்புகிறது.

இடைப்பட்ட காலத்தில் செவுடி பூப்பெய்த, பட்டிக்காவலிலிருந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். செவுடிக்குப் பதிலாக பத்து வயதைத் தொடாத அவளது தங்கை ஆட்டு மந்தையை ஓட்டிக்கொண்டு மேட்டுக்காட்டிற்கு வருகிறாள். ஒருவர் செல்ல இன்னொருவர் அந்த இடத்தை நிரப்புகிறார்கள்.

நாவலின் இறுதிப் பகுதியாகச் சிறுவர்கள் கிணற்றில் குதித்து மகிழும் இடம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு ஆடுகளாகக் கிணற்றில் தூக்கிப் போட்டு கூளையனும் நெடும்பனும் ஆடுகளைக் குளிப்பாட்டச் செய்கிறார்கள். செல்வன் மூர்க்கத்துடன் இடையில் புகுந்து அவர்களைத் தொந்தரவு செய்து விளையாடுகிறான். ஆடுகள், வவுறி, கூளையன் என எல்லோரையும் நீரில் அமிழ்த்தி மூச்சு முட்டச் செய்து குதூகளிக்கிறான் செல்வன். பொறுக்கமாட்டாத கூளையன் தண்ணீரில் தாவி – இரண்டு கால்களையும் செல்வனின் தோள்களின் மீது பொருத்தி பலம் கொண்ட மட்டும் அழுத்தி – சிறுது நேரம் மூச்சு முட்டித் தவித்து மேலே வரட்டும் என அடியாழத்துக்குத் தள்ளுகிறான். நேரம் கடந்தும் கிணற்றின் உள்ளே சென்ற செல்வன் மேலே வராமல் போகவும் செய்வதறியாமல் அவனைத் தேடிக்கொண்டு கூளையன் தண்ணீரின் ஆழத்திற்குச் செல்கிறான். அடர் கருமை நிறைந்த முடிவற்ற ஆழத்திற்கு செல்வனைத் தேடி கூளையன் செல்கிறான் என்பதாக நாவல் முற்றுப் பெறுகிறது.

ஆதிக்க மனப்பான்மையின் குறியீடாக, ஆதிக்க சாதியின் குறியீடாகவே இந்தக் கிணற்றினை இங்கு வைத்துக் கொள்ளலாம். காலந்தோறும் மனிதர்களை முழுங்கி இக்கிணறுகள் ஏப்பம் விடுகின்றன. நீந்தத் தத்தளிக்கும் மனிதர்களை மூர்க்கம் கொண்டு இரும்புக் கரங்கள் தாக்குகின்றன. ஒரு சட்டகத்துக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டோரின் இருப்பு இப்படித்தான் ஆகின்றன. பலமற்றவர்களின் தற்காப்பும் கூட பலனற்றுப் போகின்றன. ஒருவேளை கூளையனுக்குப் போக்குக் காட்டிவிட்டு செல்வன் மேலேறி இருக்கலாம். ஆனால் ‘கூள மாதாரி’ போன்ற கொத்தடிமைச் சிறுவர்கள்? அடர் கருமை நிறைந்த முடிவற்ற ஆழத்தின் இருண்மையை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றனர். இவர்களின் கதைக்கு ஒரு முடிவே இல்லை. அது இன்னுமொரு ‘புழுதி, ‘கொழிமண்’, ‘வறள்’ என்று நீளும். அந்த வகையில் முடிவில்லாத கதையைத்தான் பெருமாள்முருகன் இந்நாவலில் ஆவணப்படுத்தியிருக்கிறார்.

இரண்டாயிரம் ஆண்டில் முதற்பதிப்பு கண்ட இந்நாவல் வெளிவந்த சமயத்தில் போதுமான கவனிப்பை பெற்றிருந்ததாகத் தெரியவில்லை. 2004-ஆம் ஆண்டுக்கான அமுதன் அடிகள் இலக்கிய விருதை இந்நாவல் பெற்றுள்ளது ஆறுதலான விஷயம். ஆய்வாளர் வ. கீதாவால் ஆங்கிலத்தில் “Seasons of the palm” என்று மொழியாக்கம் செய்யப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளதும் நினைவு கூறத்தக்கது. இந்நாவலின் ஆங்கில மொழியாக்கம் – பசிபிக் கடலோர நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகள் ஆகியவற்றில் வாழும் மக்களுக்கிடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் வழங்கப்படும் ‘கிரியாமா’ விருதுப் போட்டியில் 2004-ல் பங்கேற்ற ஏறத்தாழ 200 நாவல்களிலிருந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகிய 5 நாவல்களில் ஒன்று.

| கூள மாதாரி | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிச‌ம்பர் 2007 | ரூ.200 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book