29

ஜெர்மானிய இளைஞனின் கதை

(Adventure of the German Student)

மூலம்: வாஷிங்டன் இர்விங் | தமிழில்: நவீனன் அநார்க்கீயன்

பிரஞ்சுப் புரட்சியின் காலம். புயல் வீசிக் கொண்டிருந்த ஒரு நள்ளிரவில் ஜெர்மானிய இளைஞன் ஒருவன் பாரிஸ் நகரத்தின் பழைய பகுதியைக் கடந்து தனது வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தான். மின்னலொளி வீசியது; பேரிடியின் ஓசை தெருக்களை அதிர வைத்தது. உங்களிடம் இந்த ஜெர்மானிய இளைஞனைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும்.

காட்ஃபிரிட் வுல்ஃப்காங் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன். கட்டிங்கனில் சில காலம் படித்தான். தொலைநோக்கும், சுறுசுறுப்பும் கொண்டவனாதலால் ஜெர்மானிய மாணவர்களைக் குழப்பத்திலாழ்த்தும் சில தத்துவக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டான். அவனது தனியான வாழ்க்கை, ஆழமான சிந்தனை, எப்பொழுதும் படிப்பென்றே இருப்பது போன்ற விஷயங்கள் அவனது மனதையும் உடலையும் பாதித்தன. உடல்நலம் கெட்டுப் போக, மனநலமும் குன்றியது.

ஆன்மீக சாரத்தைப் பற்றிய கற்பனாவாதத்தில் தன் மனத்தினைச் செலுத்தி ஸ்வீடென்போர்கைப் போல தனக்கென ஒரு நிறைவான உலகத்தைத் தன்னைச் சுற்றி உருவாக்கியிருந்தான். தீய சக்தியொன்று தன்னை வலையிலகப்படுத்தி நரகத்துக்கு நேராகக் கொண்டு செல்லும் நோக்குடன் எப்பொழுதும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக நினைத்தான். இந்த நினைப்பு அவனுக்கு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. உடல் மெலிந்து மனம் நலிவுற்றது. அவனது நண்பர்கள் இந்த மனப்போக்கை அறிந்து இடம் மாறுதலே இதற்கான மருந்து எனக் கருதி மகிழ்ச்சியின் நகராகிய பாரிசுக்கு அனுப்பி வைத்தார்கள்.

புரட்சியின் தொடக்கத்தில் வுல்ஃப்காங் பாரிசுக்கு வந்தான். ஆரம்பத்தில் அவனுக்குப் புரட்சியில் ஈடுபாடு ஏற்பட்டது. அக்காலத்தில் உலவிய அரசியல், தத்துவக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டவனானான். ஆனால் புரட்சியைத் தொடர்ந்த இரத்தப்பெருக்கு தொட்டாற்சிணுங்கி குணங்கொண்ட அவனை அதிர்ச்சி அடையச் செய்தது; சமூகத்தையும் உலகத்தையும் அருவருப்போடு நோக்க வைத்தது. மேலும் தனித்தவன் ஆகி பேஸ் லத்தீனில் இருக்கும் மாணவர் குடியிருப்பிலுள்ள தனது அறைக்குள்ளே நாட்களைக் கழித்தான்.

ஸோர்போன் மடாலயத்திலிருந்து அதிக தூரமில்லாத இருள் நிறைந்த தெருவில் தனக்குப் பிடித்தமான தத்துவ ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தான். பாரிஸின் பெருநூலகங்களில் பல மணிநேரங்களைக் கழித்து, இறந்துபோன ஆசிரியர்களின் தூசிபடிந்து கண்டுகொள்ளப்படாமலிருக்கும் நூற்களின் மூலமாகத் தனது பசியைத் தீர்த்துக் கொண்டிருந்தான். இவ்வகையில் ஒரு இலக்கியப் பிணந்தின்னியாகவே இருந்தான்.

தனியனாக இருந்தாலும் வுல்ஃப்காங் உணர்ச்சிகளால் நிறைந்தவன்; ஆனால் அவன் கற்பனைகளுக்குள்ளே இயங்கினான். அறியாமையாலும், வெட்கத்தாலும் அவன் பெண்களை நோக்கி ஓரடி கூட எடுத்து வைக்க வில்லை. ஆனால் அவன் பெண்ணழகின் ரசிகன். தனது தனியறையில் அன்று கண்ட பெண்களின் உடலுருவையும், முகவடிவையும் எண்ணி உருகுவான். கற்பனை இயல்பில் காணாத அழகின் பிம்பங்களை அவனுக்காக உருவாக்கியது.

அவன் மனம் இப்படி ஒரு நிலையில் இருக்கும் போது ஒரு கனவு அசாதாரணமான விளைவினை ஏற்படுத்தியது. அக்கனவில் அவன் மனித அழகைக் கடந்த ஓர் அழகிய பெண்ணின் முகத்தைக் கண்டான். அக்கனவை அவன் மீண்டும் மீண்டும் கண்டான். பகலில் அவனுடைய சிந்தனைகளையும், இரவில் அவனுடைய கனவுகளையும் அம்முகமே ஆக்கிரமித்துக் கொண்டது; அக்கனவின் மீது இனம் புரியாத ஒரு பேரீர்ப்புக் கொண்டான். இது வெகுகாலம் நீடித்து, சோகம் நிறைந்த மனிதர்களை ஆக்கிரமித்திருக்கும் ஒரு சிந்தனை போன்றும், பைத்தியக்காரத்தனம் போன்றும் மாறியது.

இது தான் காட்ஃபிரிட் வுல்ஃப்காங். இது தான் அவன் வாழ்க்கை. புயல் வீசும் இரவில் அவன் வெகு தாமதமாக பழைய பாரிஸின் பகுதியான மராயின் தெருக்களில் நடந்து போய்க் கொண்டிருந்தான். இடிமுழக்கம் அக்குறுகிய தெருவிலிருந்த பெரிய வீடுகளை அதிரச் செய்தது. அவன் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சதுக்கமான பிளேஸ் டி கிரீவுக்கு வந்து சேர்ந்தான்.

ஹோட்டல் டி வில்லின் உச்சிக்கூம்பில் பட்டு நடுங்கிய மின்னலின் விரல்கள் அவன் முன்னிருந்த வெட்ட வெளியில் விழுந்தன. கில்லட்டினுக்கு அருகே வந்த அவன் பயந்து நடுங்கினான். பயத்தின் ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் அது. கில்லட்டின் எப்போதும் தயாராக நின்று கொண்டிருந்தது. நல்லவர்கள், தைரிய சாலிகளின் இரத்தம் அதிலிருந்து நாள்தோறும் ஓடிக்கொண்டிருந்தது. அன்றைக்கும் தனது அழிவுப்பணியை முடித்து விட்டு தூங்கும் நகரத்தின் நடுவே தனது அடுத்த பலியாடுகளுக்காக அக்கருவி காத்து நின்றது.

வுல்ஃப்காங்கின் இதயம் அவனுக்குள்ளே மிகத் தளர்ந்தது. நடுங்கிக் கொண்டே அக்கருவியை விட்டு தன் முகத்தைத் திருப்பினான். தண்டனை மேடைக்குச் செல்லும் படிகளில் உட்கார்ந்திருந்த நிழலுருவம் அவன் கண்ணில் பட்டது. தொடர்ச்சியாக வந்த மின்னல்கள் அவ்வுருவத்தின் குணாதிசயங்களைப் புலப்படுத்தின.

அவள் கறுப்புடை அணிந்த பெண். கொலை மேடையின் கீழ் படிகளில் உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவளது முகம் மடியில் மறைந்திருந்தது; கலைந்த கூந்தலில் மழைநீர் விழுந்து வழிந்து கொண்டிருந்தது. வுல்ஃப்காங் அப்படியே நின்றான். அவள் மேற்குடிப் பெண்ணைப் போலிருந்தாள். இறகுத் தலையணையின் மீது தலை வைத்துப் படுத்திருந்த பல தலைகள் இந்தக் கேடு காலத்தில் தலை சாய்க்க இடமில்லாமல் அலைவதை அவன் அறிவான். இவள் அக்கொலைக் கருவியால் துயரத்துக்குள்ளாக்கப்பட்டு இதயம் உடைந்துபோயிருக்கும் ஒரு பெண் என்று நினைத்தான்.

அவளை நெருங்கி இரக்கம் ததும்பும் குரலில் அவளிடம் பேசத் தொடங்கினான். அவள் தலை நிமிர்ந்து அவனைக் கோபத்துடன் நோக்கினாள். மின்னலின் பிரகாசமான ஒளியில் அவன் அம்முகத்தைக் கண்டான். அவன் கனவுகளில் வந்த அதே முகம். வெளிறிப்போய் சோகத்துடன், ஆனால் அழகாக இருந்தது.

முரண்படும் உணர்ச்சிகளுடன் நடுங்கியவனாய் வுல்ஃப்காங் மீண்டும் அவளிடம் பேசத் தொடங்கினான். நள்ளிரவு நேரத்தில், கடும்புயலின் நடுவே அவளிருப்பதைச் சொல்லி, தான் அவளுடைய நண்பர்களிடம் அவளைக் கொண்டு சேர்ப்பதாகச் சொன்னான். அவள் கில்லட்டினைச் சுட்டிக் காட்டினாள்.

“எனக்கு இப்பூமியில் நண்பர்களே இல்லை”, என்றாள்.

“ஆனால் உனக்கு ஒரு வீடு இருக்கிறது” என்றான் வுல்ஃப்காங்.

“ஆம், கல்லறையில்”.

இவ்வார்த்தைகளைக் கேட்ட அம்மாணவன் மனமுருகினான்.

“என்னை அந்நியன் என்று தவறாக நினையாதிருந்தால் எனது எளிய இருப்பிடத்தைத் தங்குமிடமாகவும், என்னையே நண்பனாகவும் ஏற்றுக்கொள். எனக்குப் பாரிஸில் நண்பர்கள் இல்லை. நான் இங்கே அந்நியன் தான். எனது உயிரால் ஏதேனும் பயனுண்டானால் அதுவும் உன்னுடைய உத்தரவுக்குக் காத்திருக்கிறது. உனக்குத் தீங்கோ அவமானமோ ஏற்படாமல் என்னுயிர் கொடுத்துக் காப்பேன்” என்றான்.

அவனுடைய நடத்தையிலிருந்த நேர்மை, அந்நிய உச்சரிப்பு, பேச்சுத் திறன் எல்லாமே அந்தப் பெண்ணிடம் தாக்கத்தை ஏற்படுத்தின. அவள் அவனுடைய பாதுகாப்பில் தன்னை ஒப்படைத்தாள்.

தள்ளாடி நடந்த அவளை அவன் போன்ட் நியுஃப் பாலத்தில் தாங்கி நடந்தான். நான்காம் ஹென்றியின் சிலை ஜனத்திரளால் பிடுங்கியெறியப்பட்ட இடத்தைக் கடந்தான். புயல் மெதுவாக அடங்கியது. இடி தூரத்தில் முழங்கிக் கொண்டிருந்தது. பாரிஸ் முழுக்க அமைதியாக இருந்தது. மனித உணர்ச்சிகளின் எரிமலை அடுத்த நாளின் பெருவெடிப்புக்காகத் தெம்பேற்றிக் கொள்வதற்காய் தூங்கிக் கொண்டிருந்தது.

பேஸ் லத்தீனின் பழந்தெருக்களையும், மங்கலான ஸோர்போனின் சுவர்களையும் கடந்து தானிருந்த பெரிய, பாழடைந்த தோற்றங்கொண்ட குடியிருப்புக்கு வந்தான். அவர்களை அக்குடியிருப்பின் உள்ளே அனுமதித்த வேலைக்காரப் பெண் சோக ஜீவியான வுல்ஃப்காங் ஒரு பெண்ணுடன் வந்திருப்பதை ஆச்சரியத்துடன் நோக்கினாள்.

தனது அறைக்குள் நுழையும் போது அதன் போதாமையையும், சுத்தமின்மையையும் எண்ணி அவன் முதல் முறையாக வெட்கப்பட்டான். அவனுக்கு பழைய பாணியில் அமைந்திருந்த ஒரே அறை தான் இருந்தது. முற்காலத்தில் அக்குடியிருப்பு மேற்குடியினருக்குச் சொந்தமாக இருந்த அவ்வறை இப்போது புத்தகங்களாலும், தாள்களாலும் மாணவனுக்குத் தேவையான பிற விஷயங்களாலும் நிறைந்திருந்தது. அவனது கட்டில் அறையின் மூலையில் கிடந்தது.

விளக்கொளி வந்த போது அவளைத் தெளிவாக நோக்குவதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அவளுடைய அழகெனும் மதுவில் அவன் மயங்கினான். அவளது முகம் வெளிறியிருந்தது. ஆனாலும் ஒளிமிக்க வெண்மை அவளிலிருந்து வீசி, அவளுடைய கருங்கூந்தலிலிருந்து முரண்பட்டு அழகாகக் காட்சியளித்தது. கண் பெரிதாகவும், பிரகாசமாகவும் உணர்ச்சி கொண்டதாகவும் இருந்தது.

கறுப்புடை காண அனுமதித்த வரையில் அவளுடல் கட்டுக்கோப்பானதாக இருந்தது. சாதாரண உடையே அவள் உடுத்தியிருந்தாலும் அவ்வுடை பேரழகாய்த் தெரிந்தது. அவள் அணிந்திருந்த ஒரே அணி அவளது கழுத்தைச் சுற்றியிருந்த கறுப்புப் பட்டை தான். அவ்வணி வைரங்களால் கழுத்தில் நிலைபெற்றிருந்தது.

அவனுக்குக் குழப்பம் ஏற்பட்டது. என்ன செய்வதென்று தெரியவில்லை. தன்னுடைய அறையை அவளிடம் ஒப்படைத்துவிட்டு வேறெங்காவது புகலிடம் தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தாலும் அவளுடைய அழகால் மயக்கப்பட்டிருந்ததால் அவளை விட்டு நீங்க மனதற்றவனாய் நின்றான். அவளது நிலையும் புதுமையானதாக இருந்தது. அவள் இப்போது கில்லட்டினைப் பற்றிப் பேசவில்லை. அம்மாணவனின் நடத்தை முதலில் அவள் நம்பிக்கையையும், பின்பு அவளுடைய இதயத்தையும் வென்றிருக்க வேண்டும்.

ஆசையும் ஈர்ப்பும் மிகுந்த அக்கணத்தில் வுல்ஃப்காங் அவளிடம் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான். தனக்கு வந்த மாயக்கனவைப் பற்றியும், தான் அவளை நேரில் காணுமுன்னே அவள் தன் இதயத்தைக் கொள்ளை கொண்டதைப் பற்றியும் அவன் கூறினான். அவள் அவனுடைய சொற்களால் பாதிக்கப்பட்டு, அவன் மீது தானும் காரணமற்று விருப்பம் கொண்டதாகச் சொன்னாள். பழைய நம்பிக்கைகள் தகர்ந்து போன இடத்தில் “அறிவின் தேவதை” வந்து அமர்ந்திருந்த காலம். திருமணச் சடங்குகள் ஆடம்பரமாகக் கருதப்பட்டன. சமூக ஒப்பந்தங்கள் பிரபலமாயின. வுல்ஃப்காங்கும் இப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தான்.

“நாம் ஏன் தனியாக இருக்க வேண்டும்? நமது இதயம் ஒன்றாக இருக்கிறது. அறிவின் அடிப்படையிலும், மாண்பின் அடிப்படையிலும் நாம் ஒன்றாகவே இருக்கிறோம். இதைக் காட்டிலும் நமது உயரிய ஆன்மாக்களைப் பிணைப்பதற்கு வேறு சடங்குகள் எதற்கு?” என்றான்.

அவள் உணர்ச்சியுடன் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவன் ஞானம்பெற்ற அதே பள்ளியில் தான் அவளும் பயின்றிருக்க வேண்டும்.

“உனக்கு வீடுமில்லை, குடும்பமுமில்லை”, எனத் தொடர்ந்தான், “உனக்கு நான் எல்லாமாக இருக்கிறேன். வேண்டாம், நாமிருவருமே நமக்கு எல்லாமாக இருப்போம். சடங்கு தேவையென்றால் அதையும் செய்கிறேன். இதோ என் கரம். என்றைக்குமே உனக்காக, உன்னுடன் இருப்பதாக வாக்களிக்கிறேன்”

“என்றைக்குமா?” அவள் அமைதியாகக் கேட்டாள். “என்றைக்கும்” மறுபடியும் சொன்னான் அவன்.

அவள் அவனது நீட்டிய கரத்தினைப் பற்றிக் கொண்டாள். “இனி நான் என்றும் உன்னுடையவள்” என்று சொல்லி அவன் மார்பில் முகம்புதைத்தாள்.

அடுத்த நாள் காலையில் அவள் உறங்கிக் கொண்டிருக்கும் போது புதுச்சூழலுக்கு ஏற்ப புது வீடொன்றைக் கண்டுபிடிக்க அவன் வெளியேறினான். அவன் மீண்டு வரும்போது அந்தப் பெண்ணின் தலை கட்டிலுக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. அதன் மேல் அவளுடைய கையும் இருந்தது. அவன் அவளைக் கூப்பிட்டான். பதிலேதும் இல்லை. அவளை எழுப்ப அவளது கரத்தைத் தொட்டான். அது சில்லிட்டிருந்தது. அவளது முகம் வெளிறிப் போய் கொடூரமாக இருந்தது. ஒரே வார்த்தையில் – பிணம்.

பயந்து போனவனாய் அந்தக் குடியிருப்பில் இருந்தவர்களை அழைத்தான். குழப்பம் நிலவியது. காவலர்கள் அழைக்கப்பட்டனர். ஒரு காவலர் உள்ளே வந்து பிணத்தைப் பார்த்துப் பதறினார், “கடவுளே, இந்தப் பெண் எப்படி இங்கே வந்தாள்?”

“இவளைப் பற்றி உங்களுக்கு ஏதேனும் தெரியுமா?” என்று அந்தக் காவலரிடம் கேட்டான் வுல்ஃப்காங்.

“தெரியுமாவா? இவள் நேற்றைக்குக் கில்லட்டினால் சிரச்சேதம் செய்யப்பட்டவள்”. காவலர் முன்னகர்ந்து கழுத்தைச் சுற்றியிருந்த கறுப்புப் பட்டையைக் கழற்றினார். தலை தனியே கழன்று தரையில் உருண்டது.

அம்மாணவன் பயத்தில் அலறினான். “பிசாசு என்னைப் பீடித்துக் கொண்டது. நான் என்னையே இழந்தேன்”.

அவர்கள் அவனை அமைதிப்படுத்த முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. அப்பிணத்தை உபயோகப் படுத்தி ஒரு தீயசக்தி தன்னை ஆக்கிரமித்துக் கொண்டதாக நம்பினான். மனநலம் பிறழ்ந்த நிலையில் ஒரு பைத்தியக்கார விடுதியில் மரணமடைந்தான். இங்கே அந்தக் கிழவர் கதையை முடித்தார்.

“இது உண்மையிலேயே நடந்ததா?” என்று கிழவரிடம் கேட்டார் அம்மனிதர்.

“எந்த சந்தேகமுமில்லை. அந்த மாணவனே என்னிடம் சொன்னவை இவை. நான் அவனை பாரிஸில் ஒரு பைத்தியக்கார விடுதியில் சந்தித்தேன்”.

குறிப்புகள்:

கில்லட்டின் பிரெஞ்சுப்புரட்சியின் போது பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவி.

ஸ்வீடென்போர்க் இறைவன் தன்னிடம் கிறிஸ்தவத்தைச் சீர்திருத்தச் சொன்னதாக நம்பிய தத்துவஞானி

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book