12

திருச்செங்கோடு : கதாநாயகனின் கட்டியங்கூறல்

நர்சிம்

 

சிறுகதைகளை இன்னது என்று வகைப் பிரித்துப் பகுத்தாய்வது தேவையற்ற ஒன்று. எல்லாக் கதைகளும் ஏதேனும் ஓர் அனுபவத்தைப் புனைந்து நிற்கத்தான் செய்கின்றன‌. நல்ல கதை, நல்ல கதையாக ஆக்கப்பட்டிருக்க வேண்டிய கதை என வேண்டுமானால் புனைவுகளைப் பிரிக்கலாம். இதில் சற்று அதிகம் கவனம் ஈர்க்கவல்லவை ’வட்டார வழக்குக் கதைகள்’ எனலாம். கத்தி மேல் நடக்கும் வித்தையது. முதல் மூன்று வரிகளில் வரும் சொல்லாடல்களை வாசகன் தனக்கு அந்நியமாக உணர்ந்தால், அவ்வளவுதான். அதிகமானால் சலித்துப் போகும் அபாயமும் நுட்பமாக அல்லது துல்லியமாக இல்லாமல் போனால் பிசுபிசுத்துப் போகும் தன்மையும் வட்டாரவழக்குக் கதைகள் எதிர்கொள்ளும் சவால்கள்.

‘நெடுஞ்சாலை’ நாவல் வட்டார வழக்கை மிக அற்புதமாகப் பயன்படுத்தி கதை சொல்லப்பட்டதாகச் சொல்வோம் எனில், அதை எழுதிய கண்மணி குணசேகரன் “பெருமாள்முருகனின் திருச்செங்கோடு தொகுப்பைப் படித்த பின்னரே எழுதத் தொடங்கினேன்” என்று சொன்னதையே திருச்செங்கோடு தொகுப்பின் பெருமையாகவும் சொல்லலாம். முன்னுரையில், இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகளைக் குறித்து பயிற்சிக் கதைகள் என்ற ரீதியில் பார்த்ததாகவே பெருமாள்முருகன் குறிப்பிடுகிறார். ஆனால் பெரும்பாலான கதைகள் புதிதாய் எழுதுபவர்களுக்குப் பயிற்சிக்களமாக அமையக்கூடிய தரத்திலானவை.

இருபது கதைகளைக் கொண்ட, பெருமாள்முருகனின் முதல் தொகுப்பு திருச்செங்கோடு. முதல் வாசிப்பில் புரிபடாத சில கதைகள் மீள் வாசிப்பில் பிடிபடலாம், அல்லாமலும் போகலாம். ஆனால், ‘விட்ட குதிரை விசைப்பின் அன்ன, விசும்பு தோய் பசுங் கழைக் குன்றன்’ என்ற குறுந்தொகை வரிகளில் குறிப்பிடப்படும், குதிரைப் பாய்ச்சலையும், வளைந்த மூங்கில் நிமிரும் வேகத்தையும் கொடுக்கும் வாசிப்பை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் எல்லாக் கதைகளிலும் அனுபவிக்கலாம்.

கொறங்காடு என்ற கதையில் அந்தக் கிராமத்தில் முதன்முதலில் பட்டம் வாங்கிய இளைஞன், எப்போதோ இருபது வருடங்களுக்கு முன்னர் தன் அத்தையை விட்டுப் பிரிந்த புருஷன் இறந்து போனதும் அத்தைக்கு செய்யப்பட வேண்டிய சடங்குகளை / சாங்கியங்களை எதிர்க்கும் புரட்சிக்காரன். சேர்ந்து வாழவே துப்பில்லாத ஒருவன் இருந்தால் என்ன இறந்தால் என்ன என வாதம் வைத்து கிட்டத்தட்ட தன் அப்பனையும் அதை உணரச் செய்து விடுகிறான். கதையை அப்படியே முடித்திருக்கலாம்தான்.

ஆனால் தாம் பின்னாளில் அறியப்படக்கூடிய எழுத்தாளர் ஆகப் போகிறோம் என்ற கையெழுத்தை இக்கதையின் முடிவில் இடுகிறார் பெருமாள்முருகன். ஆம். ஊரில் இருக்கும் குள்ளநரித்தனங்கள் வெளிப்படும் இடங்கள் ஒன்று திருமணம் அல்லது எழவு வீடு. ஊர் நாட்டாமை, தருமகர்த்தாக்கள் இவ்வாறான‌ புரட்சிகளை வளர விட்டால் தங்கள் நிலைமை என்னாவது என்பதை உணர்ந்து, சாமர்த்தியமாய் இளைஞனுடைய அப்பனின் பலவீனத்தில் அடிக்கிறார்கள். அத்தை மூலையில் அமர்ந்து அழுகிறாள். புருஷனின் சாவுக்காக மட்டும் அல்ல என கதை முடிகிறது. அந்த கடைசி வரிகளுக்குள் பொதிக்கப்பட்ட பொருட்களுக்காக, நாம் மீண்டும் கதையைப் படிக்கத் துவங்குகிறோம்.

தடம் மாறும் வண்டிகள் கதை, ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல் மற்ற கதைகளுடன் ஒப்பிடும் போது சற்றுக் குறைவான தரம்தான் என்றாலும், வண்டி மாடுகள் கிணற்றில் விழுந்தவுடன் பரிதாபமும் குடியை விடாத முத்துப்பையனின் மீது ஆத்திரமும் நமக்கு ஏற்படுகிறது. காரணம் கதையின் வட்டார வழக்கு. அவ்வளவு அணுக்கமாய் சொல்லப்படும்பொழுது உணர்வு தொற்றிக்கொள்கிறது.

‘பலன்’ அன்றாட அக்கப்போர்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மலைக்குப் போவதற்கு சாமிக்கு மாலை போட்டுக் கொள்ளும் ஒருவனைப் பற்றிய கதை. ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு, அந்த முதலாளியின் சுடுசொல் பிடிக்காமல் தானே தனியாய் ஒரு டெய்லராய் வலம்வரும் நாயகன், மலைக்குப் போக வேறு வழியின்றி அந்தத் தையல் மிஷினையே விற்றுத் தொலைக்க வேண்டிய நிர்பந்தம். மலைக்குப் போனால் இதுதானா பலன் என போய்வந்த பிறகு வெம்பும் அவன் இலக்கில்லாமல் நடக்கிறான். அவன் இறுதியாக நின்று நிமிரும் இடம் அவன் ஏற்கனவே வேலை செய்துகொண்டிருந்த நிறுவனம். அதன் பெயரை ‘ரெயின்போ’ என்று வைத்திருப்பது நகைமுரண். இக்கதையில் மலைக்குப் போவதனால் ஏற்படும் பலன் எது என்பதை இரண்டாவது முறைப் படித்தால் புரிந்துகொண்டு விடலாம்.

தொகுப்பின் அற்புதமான கதைகளுள் ஒன்றாக ‘உண்ணிகள்’ கதையைக் குறிப்பிடலாம். முதல்நாள் தன்னை வேலைக்குப் போகவேண்டாம் என மகிழ்ச்சியாய் சொன்ன தாய், பொழுது விடிந்ததும் திட்டி எழுப்பி வேலைக்கு அனுப்பும் நிகழ்விலேயே கதையின் சூழல். கொஞ்சம் பணம் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சியாய் தன் குடும்பத்தோடு இருந்துவிடுவாள் அந்த மனுஷி என்ற எண்ணம் நமக்குக் கதை முழுக்கத் தோன்றிக்கொண்டே இருக்கும்படியான அவளின் உணர்வுகள் கடத்தப்படுகின்றன.

வாயில்லாச்சீவனுக்காக ஒரு நாள் பொங்கல் வைத்துக் கொண்டாடலாம் என ஆசையாய் தாயும் மகளும் மகனும் மனப்பால் குடிக்க, பால் ஊற்றப்படும் இடத்தின் செக்கிங் இன்ஸ்பெக்டர் உருவில் விதி அல்லாட வைக்கிறது. அவன் லஞ்சப் பணம் கேட்பானே எனும்போது சுரீர் என நெஞ்சு வலிப்பதாகவும், அது புருஷனை இழந்த அன்று ஏற்பட்ட வலி போன்று இருப்பதாகவும் வரும் வரிகளில் வாசகனுக்கு கடத்த வேண்டிய வலியை அனாயசமாகச் செய்கின்றன. தன் மகன் ஆசையாசையாய் எருமைக்குக் கயிறு வாங்குவது குறித்தும் அதன் கொம்பிற்கு காவிக்கல்லு தடவுவது குறித்தும் கேட்டுக் கொண்டே இருக்க, அந்த எருமையை விற்க வேண்டிய நிர்பந்தம் சொல்லி, அவள் ஓங்கிக்குரலெடுத்துக் கதறுவதில் கதை வேண்டுமானால் முடிவுறலாம். ஆனால் வெகுநேரத்திற்கு இக்கதை கொடுக்கும் பாதிப்பு நீள்கிறது.

’ஒரம்பரை’ என்ற கதை, இத்தொகுப்பின் மிக முக்கியமான கதை. எக்காலத்திற்கும் பொருந்தும் புனைவேயல்லாத புனைவு. அவ்வளவு அன்பாகவும் அணுக்கமாகவும் உறவுக்காரனாக நுழைபவனை வரவேற்று மோர் கொடுத்து, கட்டிலில் அமரவைத்து குளுமையாகப் பேசிக்கொண்டிருக்கும் கதை ஒரே நொடியில் சட்டெனத் தடம் மாற்றி மனதை அதிரச் செய்துவிடுகிறது. இக்கதை கொடுக்கும் உணர்வதிர்வுகள் பல அடுக்குகளில் பயணப்படும் தன்மை பெற்றவை. பணத்திற்காக நிகழ்ந்த அத்தனை நிகழ்வும் கண்முன் வந்து போகச் செய்யும் சொல்லாடல்களே இக்கதையின் வேர். “வா கண்ணு” என்ற வார்த்தையில் கதையைத் துவங்கும் பாத்திரம் கதையை “அடப் போடா நாயே” என முடிக்கிறது.

 

சிதைவு, கொடுப்பினை, திருச்செங்கோடு என தொகுப்பின் எல்லாக் கதைகளிலும் பெருமாள்முருகனின் கதை மாந்தர்கள் நம் முன் நடமாடுகிறார்கள், எதிரே கட்டிலில் அமர்கிறார்கள், தோள் மீது கைப் போட்டு உடன் வருகிறார்கள், மனைவியை அடிக்கும் போது நம்மை துடிக்கச் செய்கிறார்கள். கதைகளைப் படித்து முடித்த பிறகு, அவ்வட்டாரத்தைத் சேர்ந்தவராக நாம் இல்லாது போனாலும், அவ்வார்த்தைகளைப் பேசிப் பார்க்கத் தோன்றுவதும் அம்மனிதர்களின் வெயிலும் புழுதியும் படிந்த வாழ்க்கை சில நாட்கள் கண்முன் நடமாடுவதும் இத்தொகுப்பின் வெற்றி. பெருமாள்முருகன் என்ற அற்புதமான கதைசொல்லியின் வெற்றி.

| திருச்செங்கோடு | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | நற்றிணை பதிப்பகம் | டிசம்பர் 2013 | ரூ.125 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book