8

நிழல்முற்றம் & நிழல்முற்றத்து நினைவுகள் : திரைக்கு முன்னால்

லேகா இராமசுப்ரமணியன்

இரண்டு தமிழர்கள் கூடிப் பேசினால் பெரும்பாலும் அந்த உரையாடல் சினிமாவைத் தொட்டுச் செல்லாமல் முடிவுறாது என்பதே நிதர்சனம். நம் வாழ்வோடு ஒன்றாகி விட்ட சினிமா குறித்து தமிழில் வெளியான அனுபவக் கட்டுரைகள் வெகு குறைவு. அதிலும் பரவலான கவனம் பெற்றவை சொற்பமே. கலாப்ரியாவின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ அவ்வரிசையில் அற்புதமானதொரு தொகுப்பு. திரைப்படம் என்பது இன்றைய நாட்களைப் போல நினைத்த நேரத்தில் வீட்டிலோ, கைப்பேசியிலோ பார்த்துவிடக் கூடிய காரியமில்லை சென்ற தலைமுறையினருக்கு. படம் வெளியாகும் நாளுக்காய்க் காத்திருந்து, தொலைதூரம் பயணப்பட்டு திருவிழாக் கொண்டாட்டம் போல சினிமா கண்டு கழித்தவர்களின் ஞாபகக் குறிப்புகள், பொக்கிஷங்கள்.

அப்படியான தன் திரையரங்கத்து நினைவுகளை மீட்டெடுத்து, சுவாரஸ்யம் குறையாமல் பதிவு செய்துள்ள பெருமாள் முருகனின் படைப்புகள் ‘நிழல் முற்றம்’ (1993) மற்றும் ‘நிழல்முற்றத்து நினைவுகள்’ (2012).

இவ்விரு புத்தகங்களும் 70-80களின் சிறுநகரத் திரையரங்க மனிதர்கள், குறிப்பாக சிறுவர்கள் மற்றும் அவர்கள் சார்த்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளன. முதலில் நிழல்முற்றம் நாவலாகவும், பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு நிழல்முற்றத்து நினைவுகள் கட்டுரைத் தொகுப்பாகவும் வெளிவந்திருப்பினும் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஒரு புத்தகத்தின் மனிதர்களை மற்றொரு புத்தகத்தில் அடையாளம் கண்டு கொண்டு தொடர்வது வாசகனுக்குப் புதுமையான‌ அனுபவம்.

நிழல்முற்றம் 70களின் மத்தியில் சேலத்து சிறுநகரம் ஒன்றின் திரையரங்குப் பணியாளர்களை மையப் படுத்திய நாவல். சக்திவேல், நடேசன், பெரிய சாமி, விசுவன், பூதன் என வாலிப வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் தான் கதையின் பிரதானப் பாத்திரங்கள். தட்டம் கடை (தட்டுகளில் பலகாரங்கள் ஏந்திச் சென்று விற்பனை செய்வது), சைக்கிள் ஸ்டாண்டு, சோடாக் கடை என சினிமா கொட்டகையின் ஒவ்வொரு அசைவிலும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். குடும்பம் என சொல்லிக்கொள்ளும்படி ஏதுமற்ற இவர்களின் பொழுதுகள் துல்லியமாக நமக்கு விவரிக்கப்படுகின்றன.

பீடி, கஞ்சா, கெட்ட வார்த்தை என வயதுக்கு மீறிய விஷயங்களனைத்தும் அவர்களின் அடையாளங்கள். நிகழ்காலம் குறித்த கவலைகளோ, எதிர்காலம் குறித்த கனவுகளோ சுமந்து அலையாத சுதந்திரப் பட்சிகள்.

தட்டம் விற்பது, சைக்கிள் கடையில் இரவு காவல், டிக்கெட் கொடுப்பது, சோடாக் கடையில் பாட்டில் கழுவி சோடா நிரப்புவது என ஓயாத வேலைகளுக்கிடையே திருட்டும் அடிதடியும் உண்டு. சிறுவர்களின் அன்றாடங்களுக்கிடையே சினிமா கொட்டகையின் காரியங்கள் மெல்லத் திரை விலகி அறிமுகமாகின்றன.

தரையில் மணல் குவித்தும், சேர்களில் ஒழுங்கற்றும், சோபா சீட்களில் பெருமிதத்தோடும் அமர்ந்திருக்கும் மக்கள், அவர்களுக்கிடையே நடமாடி வியாபாரம் செய்யும் தட்டம் விற்கும் பையன்கள், ஆபரேட்டர் அறையில் இருந்து வரும் ஒளிக் கீற்று எனக் காட்சிகள் நம் கண்முன் விரியும்படி யதார்த்த விவரிப்புகள்.
தட்டம் விற்கும் பையன்களில் சக்திவேல் குறித்து அதிகம் பகிரப்படுகின்றது. பெருவியாதிக்காரனான தன் தகப்பனை சக்திவேல் துரத்தி அடிக்கும் காட்சி, அச்சிறுவனின் மனப்போராட்டங்களைத் தெளிவாக முன்வைப்பது. தந்தையின் மீது அவனுக்குப் பிரியங்கள் இல்லாமலில்லை. ஆனால் தானிருக்கும் இடத்தில் தகப்பனால் கேலி கிண்டல்களைக் கேட்க நேரிடும் என்கிற பய உணர்வே அச்சிறுவனின் கோபத்திற்குக் காரணம். போலவே பாசத்தோடு தன்னைக் காண வரும் பாட்டியிடம் கொடும் வார்த்தைகளை உமிழும் நடேசனும். ஏழ்மை அவர்களுக்கு கற்றுக் கொடுத்தது வெறுப்பு மட்டுமே.

அங்குள்ள சிறுவர்கள் எல்லோருக்கும் சக்தியைப் போலவே மோசமானதொரு பின்னணி இருக்கலாம் என்பதை இவனொருவனின் கதை கொண்டு அதை நமக்கு உணர்த்தியிருகிறார் ஆசிரியர். விளிம்புநிலை வாழ்வைப் பாசாங்கின்றி எடுத்துரைக்கும் பெருமாள்முருகனின் நேர்த்தி நிழல்முற்றதிலும் பிரதிபலிக்கிறது.

தியேட்டரில் கடை வைத்திருக்கும் சிறுவியாபாரிகளின் வியாபார நுணுக்கங்கள் நம்மை ஆச்சர்யப் படுத்துபவை. தட்டம் விற்கும் பையன்களோடும் தியேட்டர் மேலாளருடனும் முட்டி மோதிக் கொண்டு அவர்களின் உதவி கொண்டே தொழில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அவர்களின் கதைகள், சுவாரஸ்யங்கள்.

ஆயிரம் வேற்றுமைகள் இருப்பினும் பணக்கஷ்டத்திலும், சிக்கலான சூழ்நிலைகளிலும் அவர்கள் யாவரும் ஒருவருக்கொருவர் தோள் கொடுப்பவர்களாக உள்ளனர். முக்கியமாக தட்டம் விற்கும் பையன்களுக்கு மத்தியில் நிலவும் ஒற்றுமை. திரையரங்கத்தின் பின்னணியில் நிகழும் கதையாகினும் நிழல்முற்றம் பெரிய திரைக்கு மத்தியில் உலவும் மனிதர்களின் கதையையே உணர்வுபூர்வமாகப் பேசுகிறது.

*

‘நிழல்முற்றது நினைவுகள்’ – தந்தையின் தொழில் காரணமாக திரையரங்கமொன்றில் தான் கழித்த நாட்கள், வருடங்கள் பல கடந்தும் விடாமல் துரத்தும் அதன் நினைவுகள் என பெருமாள் முருகன் தன் கடந்த காலத்தின் ஒரு பகுதியை அதே உயிர்ப்போடு நமக்குக் கட்டுரைகளாகப் பகிர்ந்தளித்துள்ளார்.

தந்தை சிறு முதலீட்டில் திருச்செங்கோட்டில் ஒரு திரையரங்கில் துவங்கும் சோடாக் கடையினால் தனக்கு சாத்தியமான அனுபவங்கள், அதன் பொருட்டு அறிமுகமான மனிதர்களென அவர் விவரிக்க விவரிக்க ஆண்டுகள் பின்னோக்கி, 70களில் நாமும் பயணிப்பதான தோற்றம்.

திரையரங்கின் காரியங்களை பேசுவதற்கு முன், பெருமாள்முருகன் தன் தந்தையைச் சுற்றி கட்டமைத்திருக்கும் இத்தொகுப்பு முகம் அறியாத அப்பெரியவரின் மீது நம் பிரியத்தைக் கூட்டுகிறது. குடும்பத்தின் நலனுக்காக ஓயாது உழைக்கும் எத்தனையோ தகப்பன்களின் பிரதி. “அப்பன்” என முருகன் நாவல் முழுக்க அவரை வாஞ்சையோடு குறிப்பிடுவது நெகிழ்வூட்டுவது.

கடை வாடகை, சோடாத் தயாரிப்பு பொருட்கள், கடை சாமான்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டுத் துவங்கும் அச்சிறுவியாபாரியின் நெருக்கடிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல பெரும் முதலாளியான சாமியப்பன் அத்திரையரங்கை நிறுவப் படும் கஷ்டங்கள். போட்டியாளர்களைச் சமாளித்து, மக்களை வசீகரிக்க உள்கட்டமைப்பு, ஒலித் தரம், இருக்கைகள், கழிப்பறைகள் என யாவற்றிலும் நவீன வசதிகளைப் பொருத்திப் புது பொலிவுடன் அத்திரையரங்கம் முதல் நாள் காட்சியளித்ததை நம்மால் எளிதாகக் கற்பனை செய்ய முடிகிறது. துவங்கிய நாள் முதற்கொண்டு அதன் இயக்கத்தை நெருங்கிப் பார்ப்பதான உணர்வைத் தரும் இத்தொகுப்பில் பெருமாள் முருகன் நமக்கு அறிமுகம் செய்யும் மனிதர்கள், சிறிது காலம் நம் நினைவை விட்டு அகலாமல் இருப்பவர்கள்.

காண்போரை எல்லாம் கெட்ட வார்த்தைகளில் திட்டியபடியே இருக்கும் தியேட்டர் முதலாளி சாமியப்பன், ஒரு திரைப்படத்தையும் பார்த்தவரில்லை என்பது ஆச்சர்யம் எனில் அவரைக் குறித்து உலவும் வதந்திகள் சுவாரஸ்யம். தியேட்டர் ஆபரேட்டர் ராஜேந்திரன், குள்ள உருவத்தினால் மிகுந்த தாழ்வுமனப்பான்மையில் இருக்கும் இவர் தட்டம் விற்கும் பையன்களுக்குக் கேலி பேச ஏதுவான ஆள். உண்மையில் வாசிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்ட ராஜேந்திரனை வாசிக்க‌த் தனக்கு வழிகாட்டிய ஆசான் என்கிறார் முருகன்.

தன் தந்தையின் கடையில் தட்டம் விற்கும் பையனாக இருந்த பர்மாகாரன் முருகனின் விவரிப்புகள், ஒரு நேர்த்திமிகு சிறுகதையின் அழகைக் கொண்டது. சினிமா மீது தீராமோகம் கொண்டு பார்த்த படங்களையே மீண்டும் மீண்டும் பார்த்து சினிமா செய்திகளை விரல் நுனியில் வைத்திருக்கும் அவன் போன்றவர்கள் அபூர்வமாய் காணக் கிடைப்பவர்கள். தியேட்டர் பையன்களோடு சேர்ந்து ஊர் ஊராக போஸ்டர் ஓட்டச் சென்ற நாளொன்றில், ஒரு கிராமத்து மந்தையில் மாட்டிக் கொண்ட ஆசிரியரின் அனுபவம், கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள் எம்ஜிஆர் என்னும் ஆளுமை மீது கொண்டிருந்த பிரியத்தையும் சொல்லுவது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் என கதாநாயகர்களுக்கு ஏற்றவாறு வரும் மக்கள் கூட்டமும், சந்தை நாளை கணக்கில் கொண்டு மாறுபடும் காட்சி நேரங்கள், பகலில் வீட்டு / வயல் வேலைகளை முடித்துக் கொண்டு இரவுக் காட்சிக்கு கும்பலாய் வரும் பெண்கள் என யாவும் 70களில் சினிமா மட்டுமே உழைக்கும் மக்களுக்கு பொழுதுபோக்காக இருந்ததை நிருபிப்பது.

குடும்பங்களாக மக்கள் வந்து கொண்டிருந்த திரையரங்கம் காலப்போக்கில் தன் கம்பீரத்தைத் தொலைத்து மூன்றாம் தரத் திரைப்படங்களை வெளியிடும் அவல நிலைக்குச் சென்றது வாழ்ந்தொழிந்த மனிதனின் கதையொன்றை வாசித்து முடித்த உணர்வு. இன்றைய மல்டிப்ளெக்ஸ் சினிமா தியேட்டர்களில் பழைய சினிமா கொட்டகைகளில் காணப்பட்ட அந்யோனியம் இல்லை என பெருமாள்முருகன் வருந்துவதில் மாற்றுக் கருத்துகள் ஏதுமில்லை. கார்பரேட் கைகளுக்கு மாறிய திரையரங்குகள் பணம் ஒன்றை மட்டுமே குறிகோளாகக் கொண்டு இயங்குகின்றன. எளிவர்கள் நினைத்துப் பார்க்க முடியா விலையில் டிக்கெட், தின்பண்டங்கள் என யாவும் குறிப்பிட்ட ஒரு தட்டு மக்களுக்காக மட்டுமே என்பதே நிதர்சனம்.

தட்டம் விற்கும் பையன்களின் சப்தங்களுக்கு மத்தியில், ஆப்பரேட்டர் அறையில் அமர்ந்து ராஜேந்திரன் இயக்க, இருளும் வெளிச்சமுமாய் ஒளிக்கீற்றுகள் திரையில் பாய்ந்து உழைத்துக் களைத்த மக்களை மகிழ்வித்த அந்நாட்களின் இனிமை இனி ஒரு நாளும் திரும்பி கிடைக்காது என்னும் துயரம் பெருமாள் முருகனின் வார்த்தைகளில் தொனிப்பது இயல்பே. அவர் கூட்டிச் செல்லும் உலகம் இன்றைய தலை முறைக்கு முற்றிலும் புதிதான ஒன்று. ஞாபகப் பெட்டகத்தில் இருந்து எடுத்துரைக்க பல‌ விஷயங்களை சேகரித்து வைத்திருக்கும் தலைமுறை மீது பொறாமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

திரையரங்கைக் களமாகக் கொண்டு தமிழில் வேறு நாவல் / அனுபவக் கட்டுரைகள் வெளிவந்துள்ளதா எனத் தெரியவில்லை. பெருமாள் முருகனின் நிழல்முற்றம் நூல்கள் அவ்விதம் தனித்த சிறப்புடையவை.

திரையரங்கம் களமாக இருப்பினும் அதன் காரியங்கள் தாண்டி வாசகனுக்கு இப்புத்தகங்கள் கடத்திடும் விஷயங்கள் ஏராளம். வாழ்நாள் முழுக்க உழைத்துத் தீர்த்தாலும் வறுமைக் கோட்டை தாண்டி வர இயலாத விளிம்பு நிலை வாழ்க்கை குறித்த புரிதல் அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று. “வாழ்வில் பெரும் எதிர்பார்ப்பும் திட்டமும் இல்லாமல் அதன் போக்கில் நகர்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்” என்ற வரிகள் நமக்கு தட்டம் விற்கும் பையன்களின் சிரித்த முகங்களை நினைவூட்டுவது தாக்கத்தின் ஒரு துளி.

| நிழல் முற்றம் | நாவல் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | ஜூலை 2005 | ரூ.70 |

| நிழல் முற்றத்து நினைவுகள் | கட்டுரைகள் | பெருமாள்முருகன் | கயல்கவின் | டிச‌ம்பர் 2012 | ரூ.130 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book