11

நீர் விளையாட்டு : நவீனங்களை எதிர்கொள்ளல்

நா.ராஜூ

பெருமாள்முருகன் எனும் பெயர், மலத்தைப் பேசுபொருளாகக் கொண்ட ’பீக்கதைகள்’ என்கிற அவருடைய சிறுகதைத் தொகுப்பு வெளியான போதுதான் எனக்கு அறிமுகமாகியது. அப்போதுதான் பெருமாள்முருகனை வாசிக்கும் ஓர் ஆயத்த முயற்சியாக, அத்தொகுப்பிற்கு முந்தைய அவருடைய சிறுகதைகளின் தொகுப்பான ’நீர் விளையாட்டு’ நூலை வாசிக்க முற்பட்டேன். உண்மையில், பீக்கதைகள் எனும் தலைப்பின் மீது எழுந்த அதிர்ச்சி மதிப்பீட்டைத் தகர்ப்பதுதான் நோக்கமாக இருந்தது.

பொதுவாகவே, ஓர் ஆரம்பநிலை எழுத்தாளன் தன் முதல் கதைத்தொகுப்பில், தான் சந்தித்த மனிதர்கள், கண்ட, கேட்ட நிகழ்வுகள், தன் ஊர் பற்றிய நினைவுகள் முதலியவற்றையே முன்னிறுத்தி கதை புனைய விரும்புவான். அதன் மீதான பிரேமை மங்கிய பின்பு, அதாவது தனக்கான அடையாளத்தை வெளியுலகில் ஓரளவு பெற்ற பின்பு, குறிப்பிட்ட செய்தியொன்றைக் கருக்கொண்டு அதை எடுத்தாள ஒரு நிகழ்வைக் கட்டமைக்கும் வகையிலான கதைகள் அவனுக்கு அமைவதே ஆரோக்கியமான அடுத்த கட்டம்.

அவ்வகையான செயலே அவனின் படைப்பாளுமையை உச்சத்திற்குக் கொண்டு வரும். ’நீர் விளையாட்டு’ சிறுகதைத் தொகுப்பும் கூட அப்படித்தான் தன் படைப்பாளுமையை மிகுவித்ததாக முன்னுரையில் குறிப்பிடுகிறார் ஆசிரியர். அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான திருச்செங்கோட்டிற்கும் [1994] நீர் விளையாட்டிற்கும் [2000] இடையிலான வித்தியாசம் ஆறு ஆண்டுகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

’நீர் விளையாட்டு’ நூலில் அமைந்திருக்கும் 21 சிறுகதைகளுள் பெரும்பாலான கதைகள் தற்கால நாகரிகத் தேவைகளுடனான மனித மனத்தின் தொடர்பைத்தான் பேசுகின்றன. அது பற்பொடி ஆகட்டும், வெஸ்டர்ன் டாய்லட் எனப்படும் பீவாங்கியாகட்டும், செப்டிக் டேங்க் கிளினிங் ஆகட்டும், ஊர்ப்புறங்களில் இரவிக்கை என்றழைக்கப்படும் பெண்களின் ஜாக்கெட் ஆகட்டும், நாற்காலியாகட்டும், ஆணுறையாகட்டும், ஏன் ‘வேட்கை’ கதையில் வரும் சைக்கிளே என்றாலும் கூட அனைத்தும் ஒரு வகையில் மனித வாழ்வின் நவீனங்களே! அந்நவீனங்களின் மீது கொண்டுள்ள ஒவ்வாமை, சகிப்புத்தன்மை, கைகொண்ட மகிழ்ச்சி, கர்வம் என மனித மனம் கொண்டுள்ள பல வடிவங்கள் இக்கதைகளில் காணக் கிடைக்கின்றன.

இதையே, ஒருவகையில் ஆடம்பரங்களை நம்முடைய அத்தியாவசியங்களாக நாமே நீட்டித்து வைத்துக் கொள்ளும் சூழலின் ஆரம்பப்புள்ளியாகவும் வைத்துப் பேசலாம். மேலும், பெருமாள் முருகனின் கதை மாந்தர் அனைவருமே சிறுகாரணங்களுக்கும் கூட அதீத மன உளைச்சலுக்கும், அல்லது அதே அளவு மனவெழுச்சிக்கும் ஆளானவர்களாக இருக்கின்றனர். அது சரி, நாம் சிறுகாரணமென எடுத்துக் கொள்ளும் ஒரு செயல் மற்றவர்களுக்கும் அப்படியேவா தோன்றும்!

காரைப் பற்கள் கொண்டவள் எனும் கிண்டலில் உளைச்சலாகித் தன் வாழ்நாள் முழுவதையும் பல் விளக்கி மட்டுமே தீர்க்கிற நீலாக்காவும் சரி, ஒரு மாதிரியான குரு துரோகத்தை எதிர் கொள்ளும் ‘குரல்கள்’ கதைப்பாத்திரமான வேலுவும் சரி, இன்னும் இசை நாற்காலி, சுவர்களும் கதவுகளும், பீவாங்கியின் ஓலம் உள்ளிட்ட கதைப் பாத்திரங்களும் கூட அப்படியானவர்களாகத்தான் இருக்கிறார்கள். ’வேட்கை’ கதையின் சைக்கிள் ஓட்டி கொள்ளும் உற்சாகத்தையும் கூட மன உளைச்சலுக்கு நிகரான இன்னொரு தளத்தில்தான் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கின்றது.

இம்மாதிரியான சாதாரணமான மனிதர்களின் மனங்களைக் கண்ணாடி போலப் பிரதிபலித்துச் சொல்லிச் செல்லும் கதைகளுக்கு இடையில் வரும் மாய யதார்த்த வகையிலான கதைகள் தரும் அனுபவம் அலாதியாக இருக்கின்றது. ‘கடைவீதியில் ஒருவன்’ எனும் சிறுகதையைச் சொல்லலாம். அக்கதை முழுக்கவே, ஒரு கடையின் ஜாடிக்குள்ளிருந்து யானையை எடுப்பது, அடையா நெடுங்கதவு போன்ற மிகுகற்பனை நிகழ்வுகளே நிரம்பியிருக்கின்றன. ஒரு Fantasy வகைமைத் திரைப்படம் பார்ப்பதற்கு நிகரான அனுபவத்தைத் தருகின்றது. மறுபுறம், ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்கிற மொழியை முன்வைத்து நடத்தும் தத்துவ விசாரமாகவும் அக்கதையைப் பார்க்க முடிகின்றது. இக்கதை மட்டுமன்றி, தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் ’மேஜிக்கல் ரியலிசம்’ என்றழைக்கப்படும் மாய யதார்த்தவாதத்தின் கூறுகள் உள்ளன. ஒரு வீதி முழுக்க எச்சில் வெள்ளம் என்பதில் ஆரம்பித்து, சுடுகாட்டின் செடிகளுக்கு பேயக்ள் நீரிறைத்து ஊற்றுவது [எருக்கஞ்செடிகள்] வரை அவை நீள்கின்றன. தொகுப்பிலுள்ள, இந்த மிகுகற்பனைக் கதைகளுள் உச்சம் பெறும் கதையாக ‘கடைவீதியில் ஒருவனை’ச் சொல்லலாம்.

பெருமாள்முருகன், கிணற்றுக் குளியலை மிகவும் நேசித்து அனுபவித்தவராக இருக்க வேண்டும் என்பது என் யூகம். வேறு எவற்றைப் பற்றி எழுதுவதை விடவும், கிணறுகளைப் பற்றிய அவரின் எழுத்துகளில் அந்த நேசத்தை உணர முடிகின்றது. அந்த நேசம்தான், ‘கிணற்றுச் சுகம்’ என்றும் கிணற்றின் பிரம்மாண்டம் மற்றும் அது கொண்டுள்ள நீரின் அமானுஷ்யம் பற்றியும் எழுதத் தூண்டுகிறது போலும். இந்தத் தொகுப்பிற்கு ’நீர் விளையாட்டு’ எனப் பெயர் வைத்ததும் கூட அதனால்தானோ என்ற எண்ணமும் கூட ஏற்படுகிறது. வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து சலித்து, தோற்றுப் போகும் ஒருவன் ஒரு கிணற்றைத் தன் புகலிடமாகக் கொண்டு உடல் வழியாகவும், மன வழியாகவும் குழந்தையாக மாறுவதைச் சொல்லும் கதையான ’புகலிடம்’, கிட்டத்தட்ட அதே வகையில் அமைந்த ’நீர் விளையாட்டு’ ஆகிய சிறுகதைகளை வாசிக்கையில், அனேகமாக உங்களுக்கும் அந்த எண்ணம் வரக் கூடும். மேலும் இத்தொகுப்பில், மழைக்குருவி, சிறுத்தபூதம், பெரிதினும் பெரிது ஆகிய கதைகள் சிறுவர் / குழந்தை வாழ்வியலை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இவற்றில், குழந்தைகளுக்கேயுரிய விளையாட்டுத்தனங்களும், அடம் பிடித்தலும் எழுத்தின் வழியே அப்படியே அச்சு அசலாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, பெருமாள்முருகனின் பலமாக ‘பேசாப்பொருளைப் பேசுதல்’ என்பதைத் தான் சொல்ல வேண்டும். தற்போதைய நவீனக் கழிப்பிடங்களில் திரும்பிக் கூடப் பார்க்காமல் flush செய்து விட்டு வரக்கூடிய மலம், விந்து போன்ற மனித அழுக்குகளைப் பற்றிப் பேச விழையும் அந்தத் துணிகரம்.

புதியதாக நகரத்திற்கு மணமுடித்து வரும் பெண்ணின் தனிமையை, அவளுடைய ’வெஸ்டர்ன் டாய்லட்’ அனுபவத்தின் ஊடாக, ‘பீ வாங்கியின் ஓலம்’ கதையில் கொண்டு வருகிறார். மீதமான உணவுகளைச் சேகரிக்கும் கிராமங்களின் களநீர்ப் பானையின் வேலையை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிறைந்த நகரங்களில் பீவாங்கிதான் செய்கிறது என்பதே அப்பெண்ணை கடும் உளைச்சல் கொள்ளச் செய்கிறது. யோசித்துப் பார்த்தால், உணவு என்ற ஒன்று இருப்பதால்தான், மனித உடலில் மலம் எனும் குப்பை உருவாகிறது. முன்னதை புனிதமாக உயர்த்தி மரியாதையோடும், பின்னதைத் தாழ்த்தி அழுக்காகவும் பார்ப்பதற்குள்ள முரண்தான், இங்கு விவாதத்திற்குரிய பொருளாக நிற்கிறது. போலவே, ’பீ’ கதையில், மலத்தின் மூலமாக ஒரு கண்ணாடிக் குவளையின் வழியே மனித வர்க்க வேறுபாடுகளைக் காட்சிப்படுத்தும் நுட்பம் அனாயசமாக இவரின் எழுத்துகளில் விரிந்திருக்கிறது.

’கோடித்துணி’ கதையில், மகனைத் தொடர்ந்து சலனப்படுத்தும் அம்மாவின் உடையணியாத முலைகளைப் பற்றி எழுதுகிறார். வீட்டில் நடக்குமொரு சுபநிகழ்வின் முன்னேற்பாடாக, எப்போதும் இரவிக்கை அணியாத தன் அம்மாவிற்கு, அதை எப்படியாவது அணிவித்து விடலாமென மேற்கொள்ளும் மகனின் முயற்சியைப் பேசுகிறது கோடித்துணி. மேலோட்டமாக, இது நவீன ஆடை நாகரிகம் பற்றிப் பேசுவதாக எடுத்துக் கொண்டாலும், ஒருவகையில் இது மகனைச் சலனப்படுத்தும் அம்மாவின் உடல் என்கிற வழியில், ’ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’யும்தான் [Oedipus complex] தொட்டுச் செல்கிறது.

அடுத்ததாக, ‘உள் நுழைந்த மூஞ்சுறு’ கதையில் அவர் புனையும் நிகழ்விற்கு எடுபொருளாக வருபவை மனித விந்துவும், ஆணுறையும். இரவில் புணர்ச்சியில் ஈடுபடும் கணவன், புணர்ச்சி முடிந்த பின் தான் பயன்படுத்திய ஆணுறையை ஓரிடத்தில் வைக்கிறான். காலையில் எழுந்து அதை அப்புறப்படுத்தும் நோக்கில் தேடினால், அது கிடைப்பதேயில்லை. பின்னொரு நாள், அதை அவ்வீட்டிலிருக்கும் மூஞ்சுறு ஒன்று எடுத்துச் செல்கிறது என்பதை அறிகிறான். அதன் பின் நடக்கும் நிகழ்வுகளே கதை. நிச்சயமாக, இச் சிறுகதையின் நிகழ்வுகளை, ஜோடிப்பதற்கே ஓர் எழுத்தாளனுக்கு அசாத்தியமான புனைதிறன் வேண்டும். அது பெருமாள்முருகனுக்கு, இதில் மிகச் சிறப்பாக வாய்த்திருக்கிறது!

நீர் விளையாட்டு சிறுகதைத் தொகுப்பின் பலமாக, எதைச் சொல்கிறோமோ அதுவே சில இடங்களில் பலவீனமாக உள்ளது. அதாவது, ஆரம்பத்தில் ஆச்சரியமூட்டுவதாகவும், ஓர் அனுபவத் திறப்பாகவும் அமையும் நூலாசிரியரின் மிகு கற்பனை, பின் அதுவே அலுப்படைய வைப்பதாகவும் இருக்கிறது.

ஆமாம், தொடக்கத்தில் ஆச்சரியமூட்டும் அக்கற்பனைகள் [மேஜிக்கல் ரியலிசம்] மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த கதைகளில், வெவ்வேறு வடிவங்களில் வருவதால் அலுப்படையவும் வைக்கின்றன. ஆரம்பத்தில் ’ஒரு ஊரின் வீதி முழுக்க எச்சில் வெள்ளம்’ என்கிற மாய யதார்த்தத்தில் லயிக்கும் வாசகன், தொடர்ச்சியாக அது போன்றே வரும் நிகழ்வுகளை, முன்பிருந்த அதே அளவு கனமான ஆச்சரியத்துடன் எதிர்கொள்வானா என்பது ஐயம்தான். இதற்கு முக்கியக் காரணமாக, பெருமாள் முருகனின் எழுத்து நடையைத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. எல்லாக் கதைகளையும், சொல்வதற்கு அவர் தேர்ந்தெடுத்தது ஒரே வகையிலான எழுத்து மொழி. குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், இக்கதைகளின் தலைப்புகள் உட்பட ஒரு கட்டுக் கோப்பான, கறாரான உரைநடையையே தேர்ந்தெடுத்திருக்கிறார்.

தவிர, பெரும்பாலான கதைகள், கதை சொல்லியான எழுத்தாளனின் குரலிலேயே செல்கின்றன. கதாபாத்திரங்களே தங்களின் கதையைச் சொல்லிச் சொல்லும் மொழியானது இந்த 21 கதைகளிலும் மிகச் சில கதைகளில்தான் காணக் கிடைக்கிறது. போலவே, வட்டார வழக்கு. பெருமாள் முருகன், தமிழகத்தின் வட்டார வழக்குக் களஞ்சியத்தில் பெரும்பங்கு வகிக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவராக இருக்கின்ற போதும் கூட, அவரது இந்தத் தொகுப்பின் சிறுகதைகளில் அம்மக்களின் மொழி குறிப்பிட்டுச் சொல்லும் படி அவ்வளவாக இடம்பெறவில்லை. இத்தனைக்கும், பெரும்பாலான கதைகளின் நிகழ்விடங்களும், கதாப்பாத்திரங்களும் சிறுநகரம் மற்றும் கிராமங்களைச் சேர்ந்தவைகளாகத்தான் உள்ளன. தன் சொந்த மண் சார்ந்த சொல்லாடல்களும், இனப் பண்பாடு / முரண்பாடுகளும் ஓர் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு உரியவை என அவர் நினைத்திருக்கக் கூடும். ஏனெனில், ’திருச்செங்கோடு’ கதைத் தொகுப்பில், ’ஓரம்பரை’ ‘மொக்கபட்டம்’ முதலான வட்டார வழக்குகளைத் தலைப்பிலேயே கொண்டிருந்த சிறுகதைகள் உண்டு.

அல்லது ’ஒரு வேளை, ’நீர் விளையாட்டு’ வெளியான காலமான 90களின் இறுதியில் சிறுகதைகளுக்கான பொது உத்தி மேற்சொன்னவற்றின் அடிப்படையில் அமைந்திருக்குமோ’ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இறுதியாக, பெருமாள் முருகனை எப்போதும் பிடிப்பதற்குக் காரணம், அவர் எப்போதும் பேசாப் பொருளைப் பேசும் துணிகரம் மட்டுமல்ல! ’பீக்கதைகள்’ ’மாதொருபாகன்’ ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’ ’சாதியும் நானும்’ என்பன போன்ற தொடர் செயல்பாடுகளால் நம்மை ஓர் பொருள் சார்ந்த விவாதத்தை நோக்கி நகர்த்துவதாலும்தான். மேலும், சமகால தமிழிலக்கிய வரைபடத்தில், கொங்கு மண்டலத்தின் பரவலையும் வீச்சையும் வாசகர்களுக்கு தொடர்ச்சியாக உணர்த்திக் கொண்டிருப்பவரும் அவர்தான்.

அவரைப் போன்ற ஒரு படைப்பாளியை மொத்தமாக முடக்கிப் போடும் நோக்கில் நடக்கும் எந்தவொரு நிகழ்வும் நம் சமூகத்திற்கு எவ்விதத்திலும் நன்மை பயக்காது.

| நீர் விளையாட்டு | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு பதிப்பகம் | டிசம்பர் 2009 | ரூ.125 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book