33

பா.சரவணன் கவிதைகள்

முரண் தொகை

நீ ஒரு போலி இலக்கியவாதி என்கிறாள் செல்லம்மா
நீ யாரடி அவரைச் சொல்ல என்கிறாள் கண்ணம்மா
என் வேட்டியை இறுகப் பற்றிக்கொள்கிறேன் நான்

 

காற்சிலம்பைக் கொடுத்தவள் கண்ணகி
கானல் வரியில் கரைந்தவள் மாதவி
கோவலன் எப்படிக் குற்றமற்றவன்

 

பெற்றவள் சரஸ்வதி
ஒருதலைக்காதல் லட்சுமியின் மேல்
வீதியில் அலையும் கவியைக்
காப்பவளோ பராசக்தி.

*

பசலையுற்றவன்

தலை கலைந்திருந்தது
ஆடைகள் கசங்கி
உள்ளங்கைகள் அழுக்கேறி கண்ணிப்போயிருந்தன
போதையிலேயே பழகிய கண்கள்
சொருகியிருந்தன
பல்லின் கறைகளுக்குப் பல மூலங்கள்
நெஞ்சுக்குள் கபம்
வயிறும் ஒடுங்கிக் கிடந்தது
குறிபற்றி சொல்ல
குறிப்பாய் ஒன்றும் இல்லை
கரிகாலன் இல்லை எனினும்
கறுத்திருந்தன கால்கள்
பாதங்களை மட்டும் சுத்தமாய் வைத்திருந்தான் என
கட்டைவிரல்களைக் கட்டும்போதுதான் தெரிந்தது.

*

வெக்கை

பட்டாம்பூச்சிகளுக்கும் பூக்களுக்கும்
பிரச்சனை ஒன்றுமில்லை
இந்த வெயில்தான்
அறம் அறமென்று வாட்டுகிறது

*

மோகமுள்ளின் முனை

இதற்குத்தானா எல்லாம்
என்றாள்
அவனை அழுத்திக்கொண்டிருந்த பாரம்
விலகி
இலகுவானான்
கோவில் கோபுரத்திலிருந்த புறாக்கள்
சடசடத்துப் பறந்தன.

*

அற்பாயுளின் தாகம்

மொட்டைமாடியில்
நீர்த்தொட்டியின் கீழுள்ள விரிசலில்
வளரும் சிறு செடி
தகிக்கும் வானம் பார்த்துத்
தளிர்க்கரம் நீட்டி தவம் செய்கிறது
மழை வேண்டி.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book