13

பீக்கதைகள் : பேசாப்பொருளை பேசத் துணிந்தார்
யுவகிருஷ்ணா

‘கடன் பட்டாற் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்கிற சொற்றொடரை வாசிக்கவோ, கேட்கவோ நேர்ந்தால் ‘காலைக்கடன்’ என்கிற சொல்லும் மூளையில் அனிச்சையாக தோன்றுகிறது.

சிறுவயதில் சொற்பொழிவு ஒன்றில் கேட்ட கதை ஒன்று அதற்குக் காரணமாக இருக்கலாம். இராவணன் இமயத்தில் கடினமாக தவமிருக்கிறான். தவத்தில் மெச்சிய சிவன், “வேண்டும் வரம் கேள்” என்கிறார். சிவன் தன் சக்தி மொத்தத்தையும் திரட்டி உருவாக்கி, தன் கழுத்தில் அணிந்திருக்கும் ஆத்மலிங்கத்தை வரமாக கோருகிறான் இராவணன். கேட்டதைக் கொடுக்கும் வழக்கம் கொண்ட இறைவனும் கொடுத்து விடுகிறார், ஒரே ஒரு நிபந்தனையோடு: “இலங்கைக்குச் சென்று பிரதிஷ்டை செய்யும்வரை லிங்கத்தை தரையில் எங்குமே வைக்கக்கூடாது. வைத்துவிட்டால் அதைத் திரும்பவும் எடுக்க யாராலும் இயலாது”

இராவணனும் லிங்கத்தை ஏந்தியவாறே இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறான். விஷயம் கேள்விப் பட்ட தேவாதி தேவர்கள் கொதித்துப் போனார்கள். ஏனெனில் ஆத்மலிங்கத்தைத் தொடர்ந்து பூசித்து வருபவர்கள், சிவனுக்கு நிகரான சக்தியைப் பெற்றுவிடுவர். அசுரனான இராவணன் அத்தகைய சக்தி பெற்றுவிட்டால், மூவுலகையும் அவனே ஆட்சி செய்வான். அவனை வீழ்த்துவது அசாத்தியமாகி விடும்

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வரம் கொடுத்த சிவனின் மகனான விநாயகனை அணுகுகிறார்கள் தேவர்கள். உடனே விநாயகன் சிறுவன் வேடம் பூண்டு இராவணன் வரும் வழியில் காத்திருக்கிறான்.

அதிகாலையில் அந்த இடத்துக்கு வந்து சேரும் இராவணனுக்கு லேசாக வயிறு கலக்குகிறது. லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டே காலைக்கடனை கழிப்பது சரிவராது. என்ன செய்வது என்று யோசிப்பவனின் கண்ணில் சிறுவன் வேடம் பூண்ட விநாயகன் தென்படுகிறான். “தம்பி, இந்த லிங்கத்தைக் கொஞ்ச நேரம் எனக்காக சுமப்பாயா? பத்து நிமிடம் அப்படி ஓரமாக ஒதுங்கி விட்டு வருகிறேன்” என்று கேட்கிறான்.

இதற்காகவே காத்திருந்த விநாயகன் அதற்குச் சம்மதிக்கிறான். “தரையில் மட்டும் வைக்கக் கூடாது” என்று மீண்டும் மீண்டும் எச்சரித்துவிட்டே ஆற்றங்கரைக்குப் போகிறான் இராவணன். அவன் திரும்பி வந்து பார்க்கும் போது, லிங்கம் தரையில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த சிறுவனைக் காணோம். லிங்கத்தை இராவணனால் எடுக்கவே முடியவில்லை. மூவுலகமும் காக்கப்படுகிறது என்பதாகப் போகிறது கதை.

கர்நாடக மாநிலத்தில் அமைந்திருக்கும் ‘கோகர்ணம்’ என்கிற ஊரின் தல புராணத்துக்கு இதே கதை வேறு வேறு வடிவங்களில் உண்டு. ஆனாலும், அசுரப் பேரரசனாக இருந்தாலும் அவனுக்கும் காலைக்கடன் உண்டு என்கிற யதார்த்தத்தை எடுத்துக் காட்டிய இந்தக் கதை மனதில் அப்படியே தேங்கி விட்டது.

காலை மாலை என்று ஒவ்வொரு நாளும் இரு வேளைக‌ள் நாம் அவசியம் அடைக்க வேண்டிய கடன். ஆனால், பொதுவில் அதைப்பற்றி பேசுவது நாகரிகமற்றதாகவும், அருவருப்பானதாகவும் கருதப்படுகிறது.

எனவேதான் கதைகளிலோ, திரைப்படங்களிலோ காலைக்கடன் கழிக்கும் காட்சியைத் தவிர்க்கிறார்கள். ‘சுரேஷ், காலைக்கடன் கழித்துக் கொண்டிருந்தான்’ என்று எந்த கதையிலாவது படித்த நினைவு உங்களுக்கு இருக்கிறதா? நம் திரைப்படங்களில் எந்தப் பாத்திரமாவது காலைக்கடன் கழித்துக் கொண்டிருப்பதான காட்சி ஏதாவது நினைவுக்கு வருகிறதா? யோசித்துப் பார்த்தால் அரிதாக ஓரிரண்டு நினைவுக்கு வரலாம்.

பெருமாள்முருகன், ‘பீக்கதைகள்’ தொகுப்பில் மலம் கழிப்பதை முதன்மையான கருவாகக் கொண்டு பதினான்கு கதைகள் எழுதியிருக்கிறார். மலம் என்று சொல்லும் போது கூட அதன் பொருள் அல்லது அதன் வீச்சு மட்டுப்படுத்தப்பட்டு நம்மால் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதாலோ என்னவோ, நேரடியாகவே பீயினையே புத்தகத்தின் தலைப்புக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறார் – பீக்கதைகள்!

மலம் கழிக்கப்படும் இடத்தினை நடந்தோ, பேருந்திலோ, ரயிலிலோ கடக்கும்போது அனிச்சையாக மூக்கைப் பிடித்துக் கொள்கிறோமே, அப்படி வாசிக்க வேண்டியதில்லை இந்தப் புத்தகத்தை.

ஓர் எழுத்தாளர் எழுதுவதற்கு வேறு கருப்பொருளே இல்லையா? மலம் கழிப்பது ஒரு தேசியப் பிரச்சினையா என்று கேட்டீர்களேயானால், ஆமாம். சர்வதேசப் பிரச்சினையும் கூட. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருந்த ஓர் ஆய்வுக் குறிப்பில் இந்தியாவில் மட்டுமே சுமார் அறுபத்தைந்து கோடி பேர் இன்னமும் திறந்த வெளியில்தான் மலம் கழிக்கிறார்கள் என்கிற தகவலை வெளிப்பட்டிருந்தது. இந்த நான்கைந்து ஆண்டுகளில் இந்த விஷயத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு, நம் நாடு வல்லரசு ஆகிவிட்டதாகவெல்லாம் தோன்றவில்லை.

புள்ளிவிவரமாக வாசிப்பதால் இந்தச் செய்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இருபது, இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் ஊருக்கு வாழ்க்கைப்பட்டு வந்த அக்கா ஒருவர், முதல் நாளே பிறந்தகத்துக்குச் சென்றுவிட்டார். காரணம் என்னவென்றால், மணமகன் வீட்டில் கழிவறை இல்லை. திறந்தவெளியில் என்னால் கழிக்க முடியவில்லை என்று சொன்னார். கிட்டத்தட்ட இதே கதையை ‘பீக்கதைகள்’ தொகுப்பில் ‘பிசாசுக்கு பிடித்த விஷயம்’ என்கிற கதையாக வாசிக்கும் போது, நாடு முழுக்க அது போல் எத்தனை அக்காக்கள் காலைக்கடனுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என உணரமுடிகிறது.

ஒப்பீட்டளவில் இப்பிரச்சினை பிரதானமாக பெண்களையே அதிகம் பாதிக்கிறது. விடிவதற்கு முன்னால் போய்விட்டு வந்துவிட வேண்டும். அல்லது இருட்டிய பிறகே போயாக வேண்டும். இடையில் வயிறு சரியில்லை என்றாலும் அடக்கிக் கொள்ள‌ வேண்டும். முதல்வர், அமைச்சர் மாதிரி முக்கியஸ்தர்கள் வருகைக்காக பாதுகாப்புப் பணியில் பல மணி நேரம் கால் கடுக்க நின்றுக் கொண்டிருக்கும் பெண் போலிஸாரைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வயிறு ‘கடமுடா’ செய்தால் என்னதான் செய்ய முடியும்?

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ‘கடைசி இருக்கை’ கதையில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது சிறுவன் ஒருவனுக்கு மலம் கழிக்க வேண்டிய உந்துதல் வந்துவிடுகிறது. நடத்துனரோ பாதியில் நிறுத்த முடியாது என்று அடம்பிடிக்கிறார். அவனுக்காகக் காத்திருக்க மற்ற பயணிகளும் அனுமதிக்க மாட்டார்கள். அனைவரின் முகத்தில் அறையும் முடிவினை எடுக்கிறான் சிறுவன். அங்கேயே கழிந்து விடுகிறான். இந்த சிறுவனின் அவஸ்தையைப் பேருந்தில் அடிக்கடி பயணிக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், உடனடியாக தங்கள் அனுபவத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடியும்.

முதுமை காரணமாக படுத்த படுக்கையில் விழும் கிழவி ஒருத்தி, அவள் அறியாமலேயே படுக்கையில் மலம் கழித்து விடுகிறாள். அதுகுறித்து அவளது மகள் முகம் சுழித்துக் கோபமடைய, வைராக்கியக் கிழவி உண்பதால்தானே மலம் வருகிறது என்று உண்ணாநோன்பிருந்து உயிரை விடுவதாக ‘மஞ்சள் படிவு’ கதை.

‘வெங்கடேசனும் ஒரு நிமிடம் பன்றி ஆகிப் போனான்’ என்கிற அதிர்ச்சி முடிவோடு முடியும் ‘வராக அவதாரம்’ தொகுப்பின் குறிப்பிடத்தக்க கதைகளுள் ஒன்று. நகரத்தில் முதன்முறையாக காலெடுத்து வைக்கும் ஒருவன், இங்கிருக்கும் காலைக்கடன் நடைமுறைகளை கண்டு அதிர்ச்சி அடைகிறான். ஒரு கட்டத்தில் அவனும் அவர்களுடன் இந்த ஜோதியில் ஐக்கியமாக வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

மலம் தொடர்பான கதைகள் என்பதால் கதைகள் அனைத்துமே மாற்று சினிமா வண்ணத்தில் டல்லாகவே இருக்க வேண்டும் என்கிற அவசியத்தை உடைத்து, வாய்விட்டு சிரிக்க வைக்கும் அரசியல் பகடிக் கதை ஒன்றினையும் இத்தொகுப்பில் இணைத்திருக்கிறார் பெருமாள்முருகன். கிராமத்துக்குப் பயிற்சி தொடர்பாக வரும் கம்யூனிஸ்ட் தோழர் ஒருவருக்கு தேநீர் அருந்தாமல், காலைக்கடன் கழிக்க இயலாது. தோழர் பி.எம்.முக்கு இது பூர்ஷ்வா மனநிலையாகப் படுகிறது. அவ‌ர் கண்ணில் தேநீரைக் காட்டாமலேயே ஒரு முழுநாளை ஓட்ட முயற்சிக்கிறார் தோழர் பி.எம். இறுதியில் அதில் ஓரளவு வெற்றியும் கிடைக்கிறது.

தொகுப்பின் முதற்கதையாக‌ இடம்பெற்றிருக்கும் ‘பீவாங்கியின் ஓலம்’ சிறுகதை, நகருக்கு வாழ்க்கைப் படும் கிராமத்துப் பெண்ணின் மனதுக்குள் ஆழமாக ஊடுருவி அவளது அச்சங்களையும் எண்ணங்களையும் அசாதாரணமாக வெளிப்படுத்துகிறது. ‘கருதாம்பாளை’ கதையில் வீட்டுக்குள்ளேயே கழிவறை என்கிற நவீன மாற்றத்தை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ள இயலாத கிராமத்துக் கிழவி, பிற்பாடு அதன் சாதக பாதகங்களை உணர்ந்து பிற்பாடு தன்னுடைய கிராமத்து இல்லத்திலும் அப்படியொரு கட்டமைப்பை ஏற்படுத்துகிறாள் என்பதாகப் போகிறது. இம்மாதிரி கதைகளில் திறந்தவெளி (எதிர்) நான்குபுறமும் மூடிய கழிவறை என்றெல்லாம் நிலைப்பாடு எடுக்காமல், அதை அதைப் பயன்படுத்துபவர்களின் மனப்போக்கினை பதிவு செய்வதிலேயே தன்னுடைய முழுமையான‌ முனைப்பினை எழுத்தாளர் செலுத்தியிருக்கிறார்.

தொகுப்பினிலேயே உலுக்கக்கூடிய கதையாக ‘சந்தன சோப்பு’ அமைந்திருக்கிறது. வறுமை காரணமாக ஒரு சிறுவன், உணவகம் ஒன்றின் கழிப்பறையில் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யும் வேலையை செய்கிறான். உள்ளே நெடுநேரம் கழித்துக் கொண்டிருப்பவர்களை கதவைத் தட்டி அவசரப்படுத்துவதும் அவனுடைய கூடுதல் வேலை. மலவாடை காரணமாக எப்படியாவது ஊருக்கு திரும்பப்போய்விட வேண்டும் என்று விரும்புகிறான். ஊர்க்காரர் ஒருவர் அவனுக்கு தற்காலிக நிவாரணமாக ‘சந்தன சோப்பு’ வாங்கித் தருகிறார். சில காலத்தில் அவனே அவ்வேலைக்கு பொருந்திப் போகிறான் என்பதாகப் போகிறது.

‘புகை உருவங்கள்’ என்கிற கதை ஏன் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை.

மலத்தைக் கருப்பொருளாக்கி தமிழில் ஓர் எழுத்தாளர், ஒரு முழு சிறுகதைத் தொகுப்பே எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மற்றவர் பேசத் துணியாத விஷயத்தை பேசுவதே ஒரு படைப்பாளியின் நோக்கமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கணத்தோடு கச்சிதமாகப் பொருந்துகிறார் பெருமாள்முருகன்.

ஏன் குறிப்பாக இதைப் பேசத் துணிய வேண்டும்? உலக அழகியாக இருந்தாலும், அவளும் தினமும் ஒரு முறையாவது கக்கூஸுக்கு போய்த்தான் ஆகவேண்டும் இல்லையா? அந்த‌ விஷயத்தை எப்படி பேசாமல் இருக்க முடியும்? – இப்படி எடுத்துக் கொள்ளலாம். அல்லது, தலித் என்றால் வாயில் பீயைத் திணித்து இழிவுபடுத்துகிறார்களே, எப்படி இதைப் பேசாமல் இருக்கமுடியும்? – இப்படியும் எடுத்துக் கொள்ளலாம்.

மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை நாடுபவர்களுக்கு ‘பீக்கதைகள்’ முற்றிலும் புதிய தரிசனங்கள் தருகிறது.

| பீக்கதைகள் | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | அடையாளம் | டிசம்பர் 2004 | ரூ.60 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book