3

பெருமாள்முருகன் கவிதைகள் : அந்தத் தெருநாய்க்கு நான் யாருமில்லை

(நீர் மிதக்கும் கண்கள் & வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் தொகுதிகளை முன்வைத்து)

கவிதா முரளிதரன்

“நாவலாசிரியன் டைப்ரைட்டருடன் போராடிக்கொண்டிருக்கும் போது, கவிஞன் கண்ணாடி ஜன்னலின் மீதுள்ள ஈயை பார்த்துக்கொண்டிருப்பான்” – பில்லி காலின்ஸ், அமெரிக்க கவிஞர்

 

நாவலாசிரியராகவும் கவிஞராகவும் இருக்கும் ஒரு படைப்பாளி என்ன செய்வார்? டைப்ரைட்டருடன் போராடிக்கொண்டிருப்பாரா அல்லது பறத்தலை பார்த்துக் கொண்டிருப்பாரா? பறத்தலின் ஆயுளைப்பற்றி விசனப்பட்டுக் கொண்டிருக்கலாம். அல்லது விசனப்படுபவரை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கலாம்.

நாவலாசிரியராகவும் சிறுகதை எழுத்தாளராகவும் விமர்சகராகவும் அறியப்படும் பெருமாள்முருகனின் இன்னொரு முகம் கவிதை. தனது படைப்புகளின் ஆதி வடிவம் கவிதை என்று சொல்கிறார் அவர்.

”கவிதையின் அடிப்படை வடிவம் மனதுக்குள் உருவாகிவிட்டபின் எழுதுவது எளிது. கையில் இருக்கும் புத்தகப் பக்கம் ஒன்றிலோ கிடைக்கும் துண்டுச்சீட்டிலோ சட்டெனப் பதிவாக்கலாம். கணத்தில் நேரும் நிகழ்வு கவிதை. அதை உருவாக்கப் பெரும் சிம்மாசனமோ யாருமற்ற அனாதிவெளி உலாவலோ எல்லாம் தவிர்த்த பெருநேரமோ அவசியமில்லை. போகிறபோக்கில் வந்துசேரும் அது. மர இலை உதிர்ந்து காற்று வெளியில் பயணித்து நிலம் சேர்வது மாதிரிதான் கவிப்பயணமும். எங்கே எவ்விதம் துளிர் உருவாகும், அது விங்கனமின்றி வளரும் விதம் எப்படி என்பதை அறிவது கடினம். அதேபோலத்தான் பழுத்தபின் மரத்திலிருந்து உதிரும் கணமும். எப்போதும் தயாராக இருக்கும் நிலம் போல் கவிஞன். இவ்விதம் இயல்பாக நிகழ்வதாலேயே கவிதைத்தஞ்சம் எனக்குத் தேவைப்படுகிறது” எனக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

கவிதை எழுதுவதும் புனைவு எழுதுவதும் இரு வேறு விஷயங்கள் என்றே எழுத்தாளர்கள் கருதுகிறார்கள். இரண்டும் முற்றிலும் வெவ்வேறான இசைக் கருவிகள் போல என்கிறார் காலின்ஸ். இரண்டு இசைக் கருவிகளிலும் தேர்ச்சி பெறுவது அசாதாரண விஷயம். அந்த அசாதாரணம் வெகு இலகுவாக பெருமாள் முருகனுக்குக் கைவந்திருக்கிறது. கணத்தில் நேரும் நிகழ்வு என்று கவிதையைச் சொல்லும் பெருமாள் முருகன் அந்தக் கணத்தில் உருவாக்கும் எண்ணற்ற உலகங்களின் மாயம்தான் கவிதை என்னும் ரசவாதம்.

ஒவ்வொரு கவிதையும் அதன் வரையிலும் ஓர் உலகம். ஒரு பறத்தலின் ஆயுளைப் போல. “விடேன் பறத்தலின் ஆயுள் அவ்வளவுதான்” என்று சமாதானம் சொல்கிறது பெருமாள் முருகனின் கவிதை ஒன்று. ஆனால் கவிதைக்கு அந்தச் சமாதானம் தேவையில்லை. சில வரிகளில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அதனளவில் அது முழுமையான, நிறைவான ஓர் உலகம். அது உருவாக்கியவரின் உலகம் மட்டுமல்ல. வாசிப்பவரின் உலகமாவதும்தான் படைப்பின் நோக்கமும். பெருமாள்முருகனின் கவிதைகளும் அப்படியே!

பெருமாள்முருகனின் கவிதைகள் உருவாக்கும் ஒவ்வொரு உலகமும் எளிமையானது, வசீகரமானது, ஆழமானது. அகவுணர்வில் தூசு படிந்து கிடக்கும் ஏதோவொரு தருணத்தின் மீது நாம் முற்றிலும் எதிர்பாராத, புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவது. அதிலிருந்து ஏதோ ஒரு மறக்கப்பட்ட வலியையோ கடந்து வந்த புன்னகையையோ மீட்டெடுத்துக் கொடுப்பது. வலிகளால் அல்லது புன்னகைகளால் ஆன நாம் மறந்தே போன நமது சின்னஞ்சிறு உலகங்களை ஒரு செல்லப் பிராணியைப்போல நமது உள்ளங்கைக் கதகதப்பிற்குள் கொண்டு வந்து வைக்கிறது பெருமாள்முருகனின் கவிதைகள், ஒரு கணப்பொழுதேனும்.

 

சமயங்களில் வலியோ புன்னகையோ இல்லாமல் வெறும் சம்பவிப்புகளாகவே கடந்து வந்திருக்கும் எண்ணற்ற பொழுதுகளில் ஏதோ ஒன்றை அதன் தீவிரத்தோடும் அடர்த்தியோடும் நம் முன்பு நிறுத்தி திடுக்கிட செய்கிறது. தெருக்களில் நாய்களின் அலைவுறுதலோ அல்லது மரணமோ எப்போதும் ஏதாகவும் இருந்ததில்லை. கல்லெறிதலோ உணவிடுதலோ எதையும் செய்யாத நான் நாய்க்கு யாராகவும் இல்லை, இப்போதும் இனி எப்போதும். ஆனால் இந்த கவிதைக்கு பிறகு தெருநாய் எனக்கு தனித்த ஒரு உலகம்.

 

இழவு வீட்டின் சாயல் ஏதுமில்லாமல்
என் வீட்டு முன் ஒரு சாவு நிகழ்ந்தது
அரளிச் செடியடியில் குவிமணலில்
எப்போதும் படுத்துறங்குவது போல்
அந்த நாய் இறந்து போயிருந்தது
விஷப்பூச்சி தீண்டியிருக்கலாம்
ஆகாத உணவை யாரேனும் வைத்திருக்கலாம்
சிலநாள் உடல்நிலை
சரியில்லாமலும் இருந்திருக்கலாம்
ஓரிடம் என்றில்லாமல்
அலைந்து திரியும் தெருநாய்க்கு
எதுவும் எப்போதும் நேரலாம்
இருக்கும் வரை
எங்கே போவதெனத் தீர்மானித்துக் கொள்ளாமலே
போய்க் கொண்டிருந்தது
எங்கே படுத்துறங்குவதென யாரும் அதற்கு
விதித்திருக்கவில்லை
யாருக்கும் பதில் சொல்ல அது
கடமைப்பட்டிருக்கவில்லை
அடுத்த வேளை உணவுக்கென
எந்த ஏற்பாடும் செய்து பதற்றமடைந்ததில்லை
கல்லெறிபவரைக் கண்டால் விலகி ஓடவும்
உணவிடுபவரை ஒரு வாலாட்டலால்
பெருமைப்படுத்தவும்
செய்தது தவிர
உறவேதுமில்லை அதற்கு
உடல்மீது
அரளி உதிர்த்த பூக்கள்.

ஒரு வாசிப்பில் வலியையும் வேறொரு வாசிப்பில் மௌனத்தையும் உருவாக்குவது இந்த கவிதை. கவிதை என்பதே மௌனம். மௌனத்தின் நீட்சி. ஆனால் தெருநாயின் பதற்றமின்மையும் அதன் மரணத்தின் அநாதமையும் இனி ஒரு போதும் அதே போலிருக்கப் போவதில்லை.

வாய்க்கரிசியை க் காக்கைகளுக்கு வீசியதும் உயிர்த்தெழும் எளிய உலகங்கள் அவர் உருவாக்குபவை. அதே நேரம் வலிமையான அரசியல் கூற்றுகளாகவும் அவை சமயங்களில் உருக்கொள்கின்றன.

“கவிதையைப் பிரசுரிக்கக் கொடுக்கும் மனநிலையிலிருந்து எப்போதோ விடுபட்டுவிட்டேன். அதனால் சில கவிதைகள் சூழல் சார்ந்து உடனடியாகப் பெற வேண்டிய கவனத்தை இழந்திருக்கின்றன” என்கிறார் பெருமாள்முருகன். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு வெளியான அவரது நீலப்படக் காட்சிகள் கவிதை இன்றைய அரசியல் சூழலோடு கொண்டிருக்கும் பொருத்தப்பாட்டை யதேச்சையானது என்று கடந்துவிட முடியாது. நீலப்பட வலைத்தளங்களை தடை செய்ததன் பின்னணியில் ஏற்பட்ட விவாதங்களில் மறுக்கவியலாதது, அதன் சுரண்டும் தன்மை பற்றியது. தடை எந்த அளவுக்கு எதிர்க்கப்பட வேண்டியதோ அதே அளவு அதில் உள்ள சுரண்டல் போக்கும் எதிர்க்கப்பட வேண்டியதும் விவாதிக்கப்பட வேண்டியதும்.

நான் பார்த்த நீலப்படங்களில்
நினைவில் இருக்கும் காட்சிகள் சில:
பருத்த முலைகள் கொண்ட
இரு பெண்களைப் புணரும்
(சிறுவனுமல்லாத இளைஞனுமல்லாத)
சிறுபையன்
சட்டை கழற்றுகையில்
கக்கத்தில் கிழிசல்கள் தெரிந்தன
வெள்ளைக்காரன் ஒருவன்
உறை மாட்டிய பின்
தன் குறியைக்
கறுப்புப் பெண்ணொருத்திக்குச்
சுவைக்கக் கொடுத்தான்
வேறொன்றில் ஒருவன்
இடைவிடாமல்
அப்படி இப்படி எனப்
பெண்ணுடலை ஏவிக் கொண்டேயிருந்தான்
உடல் காட்டக் கூசிக்
கவிழ்ந்து கொண்ட பெண்ணை
வலுக்கட்டாயமாகத்
திருப்பிப் புணர்ந்தான் ஒருவன்
பரிதாபமாகத் தோன்றிய
பையனின் குறிக்கு
வாய் கொடுக்க மறுத்துத் தள்ளினாள்
பெரும் பெண்ணொருத்தி
நோயிக்கூறுள்ள மூளையைச்
சுமந்து அலைந்துகொண்டிருக்கிறேன்
நான்.

என்கிற கவிதை எக்காலத்துக்குமானது.

தெருவில் வந்து ரத்தத்தைப் பாருங்கள் என்கிற நெருடாவின் குரல்தான் ஒட்டுமொத்த அரசியல் கவிதையின் குரலும். காலத்தை தாண்டி நிற்கும் ஆற்றல் அதற்கு உண்டு.

கோழிப் பண்ணைகள் புகழ் சேர்க்கும் ஊர் எனது
நீண்ட அடுக்குப் பண்ணை வீடுகளில்
குறுங்கால் வெள்ளைக் கோழிகள்
இரை தின்றபடி நிற்கும்
குழுவாக அவையிடும் இரைச்சல்
கட்டிடம் தாண்டி வெளியேறாது
பக்கத்துக் கோழியின் அலகில்
செல்லமாய்க் கொத்தி அவ்வப்போது
ஒருவார்த்தை பேசிக்கொள்ளும்
புஷ்டியாக வளரவென்று
இடைவிடாத தீனித் திணிப்பு
மருந்து புகட்டலும் ஊசி குத்தலும்
அதற்கு மூளையும் உண்டு
வழுவழுப்பான சுவை மூளை
கோழிப் பண்ணைகள் புகழ் சேர்க்கும் ஊர் எனது
எங்கள் கோழிகளைத் தமிழகம் எங்கும் அனுப்புகிறோம்
இந்தியா முழுவதும் எங்களூர்க் கோழிகள்தாம்
உலகுக்கே கோழி ஏற்றுமதியாளர்கள் நாங்கள்
தோலுரித்துச் செக்கச் செவேலெனச்
சதைப்பிண்டமாகத்
தொங்கும் கோழிகள் எங்கள் ஊர்ப் பெருமை
சாதாரணச் சில்லிக் கடையிலிருந்து
ஐந்து நட்சத்திர உணவகங்கள் வரை
நீங்கள் ருசியாகப் புசிக்கும் கோழிகள்
எங்கள் தயாரிப்புகளேஒரு முறை
கோழிப் பண்ணை ஒன்றைப்
பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது
என் சின்னஞ்சிறு மகன் கேட்டான்
“இது கோழிப் பள்ளிக்கூடமாப்பா?”
சரிதான் என்று ஆமோதிக்க வேண்டியிருந்தது
அதுமுதல் இப்படிச் சொல்லிக்கொள்கிறேன்
கோழிப் பள்ளிக்கூடங்கள் புகழ் சேர்க்கும் ஊர் எனது.

 

என்கிற கவிதையில் வெளிப்படும் சமகால அரசியல் விமர்சனம் எவ்வளவு காத்திரமானதும் நுட்பமானதும்!

“பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றதனாலேயே உங்களுக்கு கல்வி கிடைத்துவிட்டதாக எண்ண முடியாது” என்றார் மால்கம் எக்ஸ். மதிப்பெண் உற்பத்தியை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் இன்றைய கல்விமுறையின் மீதான கூர்மையான விமர்சனமாக விரிகிறது பெருமாள்முருகனின் கவிதை.

கண் விரியப் பார்த்த என்னை
அந்நகரத்துக்குள் அழைத்துச் சென்றான் கூரிய கட்டிடங்கள்
மிதக்கும் சாலைகள்
விளையாட்டுத் திடல்கள்
எல்லாம் சுற்றி முடித்த நான்
‘எங்கே உன் பள்ளிக்கூடம்?’ என்றேன்
வினோதமாக என்னைப் பார்த்த அவன்
முகம் சுருங்கச் சொன்னான்
‘இது பள்ளியில்லா நகரம்.’

என்று இன்னொரு கவிதையில் சொல்கிறார். பள்ளியில்லா நகரத்தைத்தான் குழந்தைகள் எவ்வளவு விரும்புகின்றனர்? அந்தப் பெருவிருப்பம் கல்வி முறையின் மீது அழிக்க இயலாத கறையாக உருப்பெறுகிறது.

எல்லாவற்றையும் மறந்து விடலாம் என்று ஈழத்துயரைக் கவிதையாக வார்த்தெடுத்தார் சேரன். எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும் என்று இந்திய அரசியல் நகைமுரணைக் கவிதையாகத் தருகிறார் பெருமாள்முருகன்.

இந்தியா ஒளிர்கிறது
எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டும்.
மறதி நமக்கு விதிக்கப்பட்டது

என்று பகடி செய்கிறது அவரது கவிதை.

அரசியல் கவிதைகள் போலவே பெருமாள் முருகனின் அகவுணர்வு சார்ந்த கவிதைகளும் தனி மனித வாழ்வின் நம்ப முடியாத பதற்றங்களையும் மிக எளிய சுவாரஸ்யங்களையும் பிரதிபலிக்கின்றன.

பொம்மைகள் அப்படி பேசினால்
அடிப்பேன் உதைப்பேன் என்றேன்.
பொம்மைகளும் திருப்பி
அடிக்கும் உதைக்கும் என்றான்.
அப்போதிருந்துதான்
எல்லா பொம்மைகளின் கண்களும்
என்னையே உற்றுப் பார்க்கத்தொடங்கின

என்று முடியும் கவிதை குழந்தைகளுக்கும் வளர்ந்தவர்களுக்குமான புரிதலின் அடிப்படை பிரச்னைகளை சிக்கலற்ற மொழியில் சொல்கிறது. உற்றுப் பார்க்கும் போது மகனுக்கு அது பொம்மை. ஆனால் அப்பாவுக்கு அது வேறேதோ ஒன்று. ஆனால் அப்பாவின் குழப்பமான இந்தக் குரல் வேறொரு இடத்தில் பெருமிதத்துடனும் கம்பீரத்துடனும் வெளிப்படுகிறது.

பொழுது கிளம்பி மேலேறும்
எந்தக் கணத்திலும்
அவன் என்னைத் தூக்கி வீசிவிடக் கூடும்
அப்போது
மரக்கிளையில் மாட்டிச்
சதை கிழியத் தொங்கமாட்டேன்
பாறையில் மோதித்
தலை உடைந்து கிடக்கமாட்டேன்
என்கிறது அது.
உன் முதல் முத்தம் போல்
போய்க்கொண்டேயிருக்கட்டும்
இந்தச் சாலை.
என்று விருப்பத்தை தெரிவிக்கும் போதும்
அவசர சிகிச்சைப் பிரிவின்முன்
காத்துக் கிடப்பவனின் பதற்றத்தோடு
என் நாட்கள்.
என்று பதறும் போதும்
ஆனால்
என் தவறுகள்
எல்லோருக்கும் தேவைப்படுகின்றன.

என்று அயருறும் போதும் பெருமாள்முருகன் தனது கவிதைகளில் உருவாக்குவதும் திறப்பதும் நம் எல்லோருக்குமான உலகங்களை.

நாவலாசிரியனைப் போல அல்ல கவிஞன். இரண்டும் வெவ்வேறு வடிவங்கள். வெவ்வேறு படைப்பு மனநிலைகளை கோரும் வடிவங்கள். வாசகருக்கும் அப்படியே. ஒரு நாவலாசிரியனுக்கு நமது வாழ்க்கையில் சில நாட்கள் தேவைப்படும். வாசக மனதுடன் அது தினமும் உண்ணவும் உறங்கவும் பேசவும் சிரிக்கவும் அழவும் கூடும். சில நாட்கள் என்பது சில வாரங்களும் ஆகலாம்.

ஆனால் கவிஞனுக்கு வாசகனின் வாழ்க்கையிலிருந்து ஒரு துளி போதும். அது ஒரு கணத்து நிகழ்வு. வாசகருக்கும். ஆனால் அந்தக் கண நிகழ்வின் வித்தையை மிகச் சரியாக கைக்கொள்ளும் கவிஞன் அந்தக் கணத்தின் அடர்த்தியான சாயலை வாசகரின் வாழ்க்கை முழுவதும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நிழலாகப் படர விடுகிறான்.

ஒரு நாவலாசிரியன் எப்புள்ளியில் கவிஞன் ஆகிறான்? அல்லது ஒரு கவிஞன் எந்தக் கணத்தின் நீட்சியை விரும்பி நாவலை தேர்ந்தெடுக்கிறான் என்பது சுவாரஸ்யமான ஆனால் அசாதாரணமான கேள்வி. ஆனால் இரண்டு இசைக் கருவிகளை மாறி மாறி வாசிக்கும் போதும் ஒரு கலைஞன் அதில் ஏதோ ஒன்றின் தனித்துவத்துக்கும் பங்கம் ஏற்படுத்தாது இருப்பது என்பது ஆகப்பெரிய சவால்.

அந்த சவாலை மிக அழகாகக் கையாண்டிருக்கிறார் பெருமாள் முருகன். அவரது படைப்பூக்கத்தின் அடிநாதமாக இருக்கும் சில விஷயங்களை இரண்டு வடிவங்களிலும் பார்க்கலாம். ஆனால் ஒரு கவிஞராகவோ நாவலாசிரியராகவோ சிறுகதையாளராகவோ அவர் ஒவ்வொரு படைப்பு வடிவத்திற்கும் அதனதற்குரிய நேர்மையோடு செயல்பட்டிருக்கிறார். டைப்ரைட்டருடன் போராடிக்கொண்டே பறவையின் ஆயுளைப் பார்த்து விசனப்படும், வெறுங்கையோடு மழை வருவதில்லை என்று நம்பிக்கைக்கொள்ளும் ஒரு படைப்பாளி அவர். அவர் சொல்வது போல மழை எப்போதும் வெறுங்கையோடு வருவதில்லை.

ஆனால் இனி வராமலே போகுமோ?

| நீர் மிதக்கும் கண்கள் | கவிதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு | டிசம்பர் 2011 | ரூ.75 |

| வெள்ளிசனிபுதன் ஞாயிறுவியாழன்செவ்வாய் | கவிதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு | டிசம்பர் 2012 | ரூ.75 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book