24

‘போல’ கவிதைகள்

தமிழ்

1

அலை தழுவிய
பாதம் போல
குளிர்கிறது

நெடுநாள் கழித்து
வீடு திரும்பிய
என் மனம்.
2

உறக்கமில்லாத
இரவுகளில் செவியை
நிறைக்கும் இசை போலவே
நினைவு அடுக்குகளில் இருந்து
மீட்டெடுத்த உன் நினைவுகளும்
மனதை நிறைக்கின்றன.

3

மூடிய சன்னலின்
ஏதோ ஒரு இடைவெளி வழியே
நுழைந்து குளிரேற்றும்
சில்காற்றைப் போல
பேசாது கழித்த
நாட்களுக்கெல்லாம்
சேர்த்து வைத்து
நியாயம் செய்கிறது
அந்த அலைபேசிக் குரல்.

4

விரல் பட்டதும் எழும்பும்
இசை போல
உன் குரல்
என்னை அழைக்கையில்
அனிச்சையாக
எழுந்து நடக்கின்றன
என் கால்கள்.

5

மழைத் தூறலின் நடுவே
நின்று பருகிய தேநீர் போல
துளித்துளியாக உற்சாகம்
சேர்க்கின்றன‌ உன் வார்த்தைகள்.
6

எங்கேயோ கேட்டு
மறக்க முடியாத
சந்தப்பாடலைப் போல
உதடுகள்
நினைத்த போதெல்லாம்
முணுமுணுக்கிறது
உன் பெயரை.

7

முருங்கை இலை சேர்த்து
உருக்கிய நெய் வாசம் போல
நினைக்கையில் எல்லாம்
நெஞ்சோடு கலந்துவிடுகிறது
நெடுநாள் கழித்து சந்தித்த
நண்பனின் நினைவுகள்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book