19

ரஸ்கின் பாண்ட் ஒரு சந்திப்பு

என். சொக்கன்

கை குலுக்கியபோது கவனித்தேன், எத்துணை மென்மையான கை!

குரலும் மிக மென்மையானதுதான். தன்னுடைய எழுத்தைப்போலவே எளிய அலங்காரங்கள் நிறைந்த பேச்சு, ஆனால் துளி அலட்டல் இல்லை. விநாடிக்கு நான்கு கதைகளை நினைவுக்குக் கொண்டுவருவதும் அதில் அவர் கொள்ளும் பெருமகிழ்ச்சியும். அவர் சொல்வதில் எவையெல்லாம் உண்மை எவையெல்லாம் கற்பனை என்று நமக்குச் சிந்திக்கக்கூட நேரம் தராமல் அடுத்த கதைக்குச் சென்று விடுகிறார்.

எண்பதைக் கடந்த எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் இந்தியாவின் மிக முக்கியமான கதைசொல்லிகளில் ஒருவர். சிறுவர்களுக்குதான் அதிகம் எழுதியிருக்கிறார் என்றாலும், எல்லாராலும் வாசிக்கப்படுகிறவர். குறிப்பாக மலைசார்ந்த பிரதேசங்கள், அங்கு வாழும் மனிதர்களை அடிப்படையாக வைத்து அவர் எழுதியுள்ள கதைகள் பல ஆண்டுகளாகியும் ஆயிரக்கணக்கானோரால் தினமும் வாங்கப்படுகின்றன, ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாசகர்கள் அவருக்குள்ளார்கள்.

அவரது அலமாரியில் பிரதானமாக நிற்கும் ‘சாகித்ய அகாதெமி’ விருது தொடங்கி, சுவர்முழுக்க நிறைந்திருக்கும் குழந்தைகளின் வாழ்த்து மடல்கள்வரை அதற்குச் சாட்சி. ‘நான் எழுதிய முதல் கதையே என்னைச் சிக்கலில் மாட்டிவைத்துவிட்டது’ என்றுதான் பேச்சைத் தொடங்கினார் ரஸ்கின் பாண்ட்.

‘எனக்குக் கணக்கு வராது, நூற்றுக்கு இருபத்தைந்து எடுத்தால் அதிக மார்க். ஆகவே, கணக்கு வாத்தியாரை ரொம்ப வெறுத்தேன். அவரை வைத்து ஒரு கதை எழுதினேன். அது அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், எனக்கு அவர்கள் பள்ளியிலிருந்து நன்னடத்தைச் சான்றிதழ் அனுப்ப மறுத்துவிட்டார்கள். இன்றுவரை அது எனக்குக் கிடைக்கவில்லை. இனிமேல் ஞாபகப்படுத்தினால் அனுப்பிவைப்பார்களோ என்னவோ!’

கணக்குதான் இப்படி. ரஸ்கின் பாண்டுக்கு நல்ல ஆங்கில ஆசிரியர் கிடைத்திருக்கிறார். பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் நிறைய வாசிக்கச் சொல்லித்தந்திருக்கிறார். அதனால், நாமெல்லாம் வகுப்பைக் கட் அடித்துவிட்டு சினிமா செல்வதுபோல, ரஸ்கின் பாண்ட் வகுப்பிலிருந்து நழுவிப் பள்ளி நூலகத்துக்கு ஓடியிருக்கிறார். அவர் எந்நேரமும் அங்கேயே கிடப்பதைத் தடுக்க இயலாமல் கடுப்பாகி, ‘நீயே இந்த நூலகத்தைப் பார்த்துக்கொள்’ என்று அவரை நூலகப் பொறுப்பாளியாக்கிவிட்டார்களாம்.

டீனேஜிலேயே நிறைய படித்து எழுத்தின்மீது ஆர்வம் பிறந்திருக்கிறது. ஆனால் அவருடைய தாய் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம், ‘ஒழுங்காகப் படிக்காதவர்களுக்கு ராணுவம்தானே கதி? நீ அங்கே போய்ச் சேர்ந்துகொள், எழுத்தாளனாவதெல்லாம் சரிப்படாது’ என்று சொல்லியிருக்கிறார்.

‘நல்லவேளை, நான் ராணுவத்தில் சேரவில்லை, சேர்ந்திருந்தால் பீட்டில் பெய்லிபோல (ஒரு கார்ட்டூன் கதாபாத்திரம்) காமெடி ஆர்மிமேனாக இருந்திருப்பேன்’ என்று குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறார் ரஸ்கின் பாண்ட், ‘ஆனால் நான் சின்ன வயதில் ஹாக்கி விளையாடியிருக்கிறேன், ட்ரெக்கிங் போயிருக்கிறேன், இப்போதைய என் தொப்பையைப் பாத்துச் சந்தேகப்படாமல் நீங்கள் இதை நம்பவேண்டும்!’

‘யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுத மட்டுமே விரும்பினேன். அதையே வாழ்க்கையாக அமைத்துக்கொண்டேன்.’

‘எழுத்துக்கு அடுத்து, எனக்குப் பிடித்த விஷயம், ஊர் சுற்றுதல். பெருநகரங்களில் தொடங்கி இந்த மலைப் பிரதேசங்கள் வரை எங்கும் நடந்தே சுற்றியிருக்கிறேன். அதுதான் பல விஷயங்களைக் கற்றுத் தந்தது.’

‘உங்களை எழுதத் தூண்டிய எழுத்தாளர் யார்?’ வந்திருந்த ஒரு சிறுவன் கேட்டான்.

‘ஆயிரக்கணக்கான புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இப்போதும் தினம் ஒரு புத்தகம் படிக்கிறேன். அவற்றில் ஒருவரைமட்டும் ஃபேவரிட் என்று எப்படிச் சொல்வது?’ என்றார் ரஸ்கின் பாண்ட். ‘பல எழுத்தாளர்களைப் பிடிக்கும். ஆனால், அவர்களுடைய எல்லா எழுத்தும் பிடிக்காது.’

’அதற்கு என்ன காரணம்?’

‘எனக்கு மனிதர்களைப்பற்றிப் பேசும் புத்தகங்கள் பிடிக்கும். ஆனால், சில எழுத்தாளர்கள் செய்தித்தாள் படித்த கையோடு அதைப்பற்றி ஒரு கருத்து சொல்லவேண்டும் என்று எழுத உட்கார்ந்துவிடுகிறார்கள். அவை இப்போது வாசிக்க மகிழ்ச்சியாக இருக்கும், ஐம்பது வருடம் கழித்து அவற்றுக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது. ரொம்ப அந்நியமாக இருக்கும்.’

‘அதற்காக எழுத்தாளர்கள் சமூகப் பிரச்னைகளை எழுதக்கூடாது என்பதல்ல. சார்லஸ் டிக்கென்ஸின் கதைகளைப் பாருங்கள், அவற்றை வாசிக்கும்போது நமக்குச் சம்பந்தமே இல்லாத அன்றைய நாளின் பிரச்னைகளைத் தெளிவாக உணர இயலும். அதனால், என்னுடைய கட்சி, மனிதர்களை எழுதுங்கள் என்பதுதான். அவைதான் என்றைக்கும் வாசிக்கக்கூடியவையாக இருக்கும் என்று நம்புகிறேன்.’

அவர் சொல்லும்போதே சுற்றிப் பார்க்கிறேன். அவரது அலமாரியில் இருக்கும் புத்தகங்கள் பெரும்பாலும் நாவல்கள், கதைகள்தான். ஆங்காங்கே சுயசரிதைகள், வாழ்க்கை வரலாறுகள், காமிக்ஸ்.

சிறிது நேரம் கழித்து அவரே நான் கணித்ததை உறுதி செய்கிறார், ‘நான் நிறைய துப்பறியும் கதைகள் படிப்பேன், அப்புறம் பழைய க்ளாசிக்ஸ், அவ்வப்போது புதிய புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள். எதையாவது படித்துக்கொண்டே இருப்பேன், இப்போதும் தினம் ஒரு புத்தகம் படிக்கிறேன். அது தரும் மகிழ்ச்சிக்கு இணையே கிடையாது!’

‘குழந்தைகள் யாரை வாசிக்கவேண்டும்?’

‘ஆலிஸ் இன் தி வொண்டர்லாண்டுக்கு இணையான சிறுவர் கதை கிடையாது. அதை வாசிக்கச் சிரமமாக இருந்தால், வேறு யாரையாவது வாசிக்கச் சொல்லலாம்.’

‘அப்புறம், டாம் சாயர். அதைச் சொன்னதும், ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருகிறது சில நாள் முன்பு ஒரு பெண் என்னைச் சந்திக்க வந்தார், தன் மகன் பள்ளியில் என்னுடைய கதையைப் படிப்பதாகச் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் எந்தக் கதை என்று கேட்டேன், அவன் டாம் சாயர் என்றான். நான் திகைத்தேன். அவர்களிடம் அந்தக் கதையை எழுதியவர் மார்க் ட்வைன் என்று உண்மையைச் சொல்ல மனம் இல்லை. ஆகவே, ஆட்டோகிராஃபில் மார்க் ட்வைன் என்று எழுதிக் கொடுத்துவிட்டேன்.’

’இதுபோல் பல நிகழ்ச்சிகள். அடுத்த மோக்லி கதையை எப்போது எழுதுவீர்கள் என்று கேட்கிறவர்கள் உண்டு. அதை நான் பொருட்படுத்துவதில்லை. யார் எழுதினால் என்ன? கதை படித்தால் எனக்கு மகிழ்ச்சி!’

‘சிறுவர் கதைகள், பெரியவர் கதைகள். குழந்தைகள் விடாமல் வாசித்துக்கொண்டே இருக்கவேண்டும், அப்போதுதான் எழுத வரும்.’

‘உங்களுக்கு எழுத்துத் தடை ஏற்பட்டதுண்டா?’

‘உண்டு. ஆனால் அது அதிக நாள் இராது. எழுத உட்கார்ந்தபின் எழுத்துகள் விழுந்தால் போதும், விஷயம் ஏற்கெனவே மனத்துக்குள் ஓடியிருக்கும். ஒரு திரைப்படம்போல அது எனக்குத் தெளிவாக இருக்கும். எழுதினால் போதும்.’

‘கையெழுத்து ரொம்ப முக்கியம். இப்போதெல்லாம் சிறுவர்கள் நேரடியாக லாப்டாப்புக்குச் சென்றுவிடுகிறார்கள். நான் இப்போதும் கைப்படதான் எழுதுகிறேன். அதுதான் சரி என்பதல்ல, அதுதான் பிடித்திருக்கிறது.’

‘எழுத்து மேஜை அருகே ஒரு குப்பைத்தொட்டி இருக்கவேண்டும். பிடிக்காதவற்றை அதில் கிழித்து எறிவதை வெறுப்பாக அல்ல, விளையாட்டாகவே செய்யவேண்டும். நிறைய படித்து, நிறைய எழுதினால், நல்ல எழுத்து தானாக வரும்!’

அவருடைய இல்லம் சிறியது. பக்கத்தில் அவரது எழுத்து அறையைக் காட்டுகிறார். இதைவிடச் சிறியது. ஓரத்தில் ஒரு படுக்கை, நல்ல வெளிச்சம் வரும் ஜன்னல், எழுத்து மேஜைமீது எண்ணற்ற காகிதங்கள்.

ஜன்னலைக் காட்டி, ‘இந்த வழியே குரங்குகள் அடிக்கடி வரும், என் சாப்பாட்டை, உடைகளையெல்லாம் எடுத்துச் சென்றுவிடும்’ என்கிறார், ‘இதற்குமுன் வசித்த வீட்டில் இங்கே ஒரு மரம் இருந்து எனக்கு வெளிச்சம் வராமல் தடுத்துக்கொண்டிருந்தது. அதன் ஒரு கிளையை வெட்டித் தருமாறு ஒரு நண்பரைக் கேட்டேன். அவர் கோடரி தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. சரி என்று ஒரு போர் வாளை எடுத்து மரக்கிளையோடு சண்டை போட்டிருக்கிறார், வாள் உடைந்துவிட்டது!’

மீண்டும் முன் அறைக்கு வருகிறோம். அலமாரிகளில் எங்கும் பிதுங்கி வழியும் பல அளவுப் புத்தகங்கள். வீட்டில் எங்கே கை நீட்டினாலும் காது குடையும் குச்சி அகப்படுவதுதான் சுகம் என்பதுபோல் ஒரு கி.ரா. கதையில் வரும், அதுபோல முசௌரியின் மிகச் செங்குத்தானதொரு மலைப்பாதையில் வசிக்கும் ரஸ்கின் பாண்டின் சின்னஞ்சிறிய வீட்டில் எங்கே கை நீட்டினாலும் ஒரு புத்தகம் அகப்படுகிறது!

‘தினமும் எழுதுவீர்களா?’

‘அப்படிதான் ஆசை. ஆனால் நான் பெரிய சோம்பேறி, எழுதத் தொடங்குவதற்கே சில நாளாகும். எழுத ஆரம்பித்தபின் கடகடவென்று எழுதிவிடுவேன்’ என்கிறார், ‘உங்கள் குழந்தைகள் அடிக்கடி எழுதவில்லை என்றால் கட்டாயப்படுத்தாதீர்கள், என்னைப்போல் அவர்கள் எழுத்தை ரசிக்கும் நாள் வந்தால் போதும், அதன்பிறகு தாங்களே நிறைய எழுதுவார்கள்.’

ஒரு சிறுவன் பூனாவில் செய்த தின்பண்டம் ஒன்றை அவருக்குப் பரிசளிக்கிறான். ‘இதைச் சாப்பிட்டால் நான் ஃபிட் ஆகிவிடுவேனா?’ என்கிறார். இன்னொரு சிறுவன் அவர் சொன்ன சிறந்த பொன்மொழிகளை எழுதி புக்மார்க்ஸ் தயாரித்து எடுத்துவந்திருக்கிறான். ‘நான் இவ்வளவு புத்திசாலித்தனமாக எழுதிய நினைவில்லையே!’ என்கிறார். என் மகள் அவரை ஓவியமாக வரைந்து தருகிறாள், ‘என் கண்ணாடிமேல் இதை மாட்டிவிடப்போகிறேன், இது அதைவிட நன்றாக இருக்கிறது’ என்கிறார்.

ரஸ்கின் பாண்டிடம் சொற்கள் கொட்டுகின்றன. சும்மா பேசுவது கிடையாது. அவர் எதைச் சொன்னாலும் ரசமாகதான் இருக்கிறது. வரிக்கு ஒரு கதை இருக்கிறது. அதைக் கேட்பதில் நாமடைந்த சிறுபிள்ளை மகிழ்ச்சியை மீட்டுத்தரும் மந்திரவாதி அவர்.

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book