16

வான்குருவியின் கூடு : அனுபவ ரசனைக்கான பாடல்கள்

நாக சுப்ரமணியன்

தமிழர் என்ற முறையில் நாம் பெருமை கொள்ளக்கூடிய காவியங்கள் பல உண்டு. சங்க இலக்கியத்தை சிலர் வியப்பார்கள், சிலர் சிலப்பதிகாரத்தை மெச்சுவார்கள், சிலர் தொல்காப்பியத்தின் முழுமையைப் பாராட்டுவார்கள், சிலருக்கு ஆழ்வார்கள், தேவாரம், திருவாசகம், பலருக்குக் கம்பன், அதன் பிறகு பாரதி, பெரும்பாலானோரின் பழந்தமிழ் இலக்கிய வியப்பு இத்துடன் நிறைவடைந்துவிடுகிறது. மீதமுள்ள சிறு காப்பியங்கள், புதுக்கவிதைகள், திரைப்படப் பாடல்கள் சகலமும் ‘இன்னபிற’ என்று நிறுத்தப்படுகின்றன.

இந்த வரிசையில் விடுபட்டுள்ள ஒரு வியப்புக்குரிய அம்சம், தனிப் பாடல்கள்.

இவற்றைத் ‘தனிப் பாடல்கள்’ என்று வகை பிரிப்பதே பெருங்காவியங்களோடு ஒப்பிட்டுதான். அப்படிப் பார்த்தால் சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் தனிப் பாடல்கள்தான், திருக்குறளில்கூட ஒவ்வொன்றும் தனிப்பாடல்தான், நாலடியாரில் ஒவ்வொன்றும் தனிப்பாடல்கள்தான், அவை முன்பே தொகுக்கப்பட்டன, நாம் ‘தனிப் பாடல்கள்’ என்று வகைபிரிப்பவை பின்னர் தொகுக்கப்பட்டன, அவ்வளவுதான் வித்தியாசம்.

‘தனிப்பாடற்றிரட்டு’ என்றும் ஒரு குறிப்பிட்ட புலவர் பெயர் சொல்லி அவருடைய தனிப் பாடல்கள் என்றும் பிரசுரிக்கப்படும் இந்தப் பாடல்களுக்குள் ஒரு தனித்துவமான ரசம் இருக்கிறது. அதற்குக் காரணம், அந்தப் பாடல்களுக்குப் பின்னால் உள்ள கதைகளும், அவற்றை எழுதிய புலவர்கள் மொழியைத் தங்கள் இஷ்டம் போல் வளைத்திருக்கும் தன்மையும், அதைக் கொண்டு சொல்லத் தேர்ந்திருக்கும் விஷயங்களும்தான்.

ஆனால், இந்தத் தனிப்பாடல்கள் ஆங்காங்கே சில கட்டுரைகளில், சொற்பொழிவுகளில் வியக்கப் பட்டிருக்கின்றனவே தவிர, அவற்றுக்குத் தமிழ் வாசிப்புப் பரப்பில் பெரிய முக்கியத்துவம் கிடையாது. ‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற மிகப் புகழ் பெற்ற வரிகள்கூட தனிப்பாடலில் இருந்து வருபவைதான் என்பதே இங்கே பலருக்குத் தெரியாது.

பெருமாள் முருகனின் ‘வான்குருவியின் கூடு’ நூல் தனிப்பாடல்களைக் கொண்டாடுகிறது. வெறும் சொற்களால் அல்ல, அந்தப் பாடல்கள் அவருடைய வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஏற்படுத்திய தாக்கங்களை மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். தனிப்பாடல்களை எழுதியவர்கள் நம்மைப் போன்றவர்கள்தாம். நாம் சந்தித்த அதே மாதிரியான பிரச்னைகளை அவர்களும் சந்தித்து இருக்கிறார்கள், ஆகவே, அவர்கள் எழுதியவற்றை நம் வாழ்வுடன் பொருத்திப்பார்ப்பது மிக இயல்பானது.

உதாரணமாக, ‘எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது’ என்கிற ஔவை வரிகள் தரும் தன்னம்பிக்கையைப் பெருமாள் முருகன் சிலாகித்துச் சொல்கிறார், “சுயமுன்னேற்ற நூல்கள் தரும் புஸ்வாணத் தன்னம்பிக்கை அல்ல இது. எதையும் சாதித்துவிட முடியும் எனப் பொய்யுற்சாகம் தருபவை அந்நூல்கள். உனக்குள் ஒரு திறமை இருக்கிறது. அது உனக்கு எளிதாகக் கைவருவது என்று சொல்லி, இருப்பதைக் கண்டுணர்த்தும் பாடல் ஔவையாருடையது.” இப்படி வாசிக்க எளிதான தனிப்பாடல் நூல்களுக்குள் ஒருவர் நுழைவது எளிது, அதன்பிறகு அந்த உலகத்தைப் புரிந்துகொண்டு மேலும் வாசிப்பதும், காவியங்களுக்குள் செல்வதும் சாத்தியம். அதற்கு ஓர் எளிய நுழைவாயிலை இந்தப் பாடல்கள் திறந்துவைக்கின்றன.

கொஞ்சம் மரபுப் பயிற்சி உள்ள எவரும் இந்தப் பாடல்களை எளிதில் எழுதிவிடலாம். உண்மையில் தனிப் பாடல்களின் சிறப்பே இதுதான். எவ்விதத்திலும் வாசிப்பவருக்கு அந்நியப்படாமல் அவர்களோடு உரையாடுவதால், மற்ற எந்த இலக்கியத்தைவிட இவற்றில் வாசிப்பைத் தொடங்குவது எளிது என்கிறார் பெருமாள்முருகன். அங்கிருந்து பிற இலக்கியங்களுக்குச் செல்லவேண்டிய தேவையை அவர் மறுக்கவில்லை, இவை மேலும் கொண்டாடப்படவேண்டும் என்கிறார்.

அதேசமயம், மற்ற பல பாடல் சிலாகிப்பு நூல்களைப்போல் இக்கட்டுரைகள் பாடலின் பொருளை மட்டும் விரித்துரைப்பவையாக இல்லாமல், அதை மையமாக வைத்துக்கொண்டு பல திசைகளில் சென்றுவிடாமல், ஒவ்வொரு கட்டுரையும் ஒரு விஷயத்தை மிக நேர்த்தியாகச் சொல்லி, அதன் பின்னணியில் பாடலை விளக்குவதாக அமைந்திருப்பது தனிச்சிறப்பு. உதாரணமாக, ஒரு கட்டுரை சென்னை நகர்வாழ்க்கையை நுணுக்கமாக விவரிக்கிறது, இன்னொரு கட்டுரை குயில்கள் பற்றிய நேர்த்தியான சித்திரத்தைத் தருகிறது,

ஒவ்வொரு கட்டுரையையும் தனித்தனியே வாசிக்கலாம், தனிப் பாடல்களை இணைத்தும் வாசிக்கலாம்.

என்னுடைய தனிப்பட்ட கருத்து, தனிப்பாடல் திரட்டுகள் சற்றே அலட்சியத்துடன்தான் பதிப்பிக்கப் படுகின்றன. இந்த அளவு இல்லாவிட்டாலும், ஓரளவேனும் அதற்கு உண்மையாக உரை எழுதி, அதன்மீது ஆர்வம் உண்டாக்குபவர்கள் குறைவு. கதைகளில் கவனம் இருக்கவேண்டும், அதேசமயம் அதனை மையமாக வைத்து இவற்றை வாசிக்கத் தூண்டும் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

ஆனால், இத்தனையையும் செய்தபிறகும், தனிப்பாடல்கள் பலருக்குச் ‘சாதாரண’மாகவே தோன்றும். அதில் தவறில்லை. அவற்றைப் புறக்கணிக்காது வாசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மிகச் சாதாரணமான தனிப்பாடலும் வாழ்வின் ஒரு தருணத்தில் நமக்கு மிக நெருக்கமாகி ஈர்ப்பை உண்டாக்கும் என்பதே இந்நூலின் மையக்கருத்து. அது அனுபவத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

| வான்குருவியின் கூடு | கட்டுரை | பெருமாள்முருகன் | நற்றிணை பதிப்பகம் | ஜூலை 2012 | ரூ.80 |

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book