18

விலைமகள்

சௌம்யா

விலைமகள் என்பதே
முரணாக இல்லையா!
விலையிட்டு மகளை
நற்சமூகம் விற்குமா?

 

காமம் சலிக்காதிருக்க
காதல் போதும் – காதல்
இல்லாக்காமம் கொள்ள‌
காத்திர மனம் தேவை

 

ஆதித்தொழில் என்கிறார்கள்
தொழிலாய்த் திரியும் முன்
மானுடத்தை உய்வித்திருந்த‌
ஆதிக்காதலும் இதுதானோ!

 

எல்லோர் பாவங்களையும்
சுமக்கப் படைக்கப்பட்டாளோ!
சிலுவையாய் அவதரித்து
சில தேகங்கள் சுமக்கிறாள்

 

துளியும் காதலில்லை
கள்ளக்காதலுமில்லை
ஒளிவென்ற பெயரில்
துரோகங்கள் இல்லை

 

குற்றவுணர்ச்சி என்பது
கொஞ்சமும் கிடையாது
ஒன்றிற்கு மேற்பட்டால்
எல்லாம் பன்மைதான்

 

வெறுப்பவர் முகஞ்சுளிப்பவர்
அனேகர் – உடையவர் தவிர்த்து
எவர் உடலையும் காமுற்று
ரசித்திருந்தால் நீயும் இச்சாதி

 

வறுமையோ விரக்தியோ
விரும்பியோ வருபவளிடம்
காரணம் கேட்காதிருங்கள்
தழும்பாய் மாறி இருக்கும்

 

தாபமொரு பசியெனில்
தன்னையே அமுதாக்கித்
திகட்டப் புகட்டுபவளை
திட்டுக்களால் தீட்டாதீர்

 

 

பத்தினிகளைப் பத்திரமாய்
பத்தினிகளாகவே காத்திட‌
சதை விற்கும் தேவதையை
இழிபிறவியெனத் தூற்றாதீர்

 

கண்ணகிகள் தேசத்தில்
மாதவிகள் விற்பனைக்கு;
மணிமேகலைகள் நிலை
அது அந்தோ பரிதாபம்

 

மரத்திட்ட‌ செல்களை
மலர்வித்த எவனுக்கோ
பிரசவித்த‌ மகளையேனும்
தாலிக்கு அனுமதியுங்கள்!

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book