14

வேப்பெண்ணைக் கலயம் : க்ஷணப் பொழுதின் கதைகள்
சாந்தி

வேப்பெண்ணைக் கலயம் பெருமாள்முருகனின் நான்காவது சிறுகதை தொகுப்பு. பல்வேறு இதழ்களில் வெளியான 23 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன. தனிப்பட்ட முறையில் எனக்கு சிறுகதை வாசிப்பு வார / மாத இதழ்கள் தாண்டி அதிகம் இல்லாததால் தொடக்கத்தில் கதையோட்டம் அத்தனை சுவாரஸ்யமாக இருக்கவில்லை. ஆனால் ஒரு கதை படித்து முடிந்ததும் அந்த எண்ணம் காணாமலே போனது. மிக நிதானமான நுண்ணிய விவரிப்புகள், நான் கண்டிராத கிராமத்தை, பொறுமையாக என் கற்பனையில் கொண்டு வர உதவுவதாகவே இருந்தன, உரையாடல்கள் வழி மெல்லிய உணர்வுகளும் புலப்படுவது சுவாரஸ்யம். விவரிப்புகளின் வழி கதையில் வரும் மனிதர்கள், அவர்கள் சூழ்நிலைகள், உணர்ச்சிகள் என எல்லாமே கற்பனையில் காட்சிகளாய் விரியும் வகையில் சுவாரசியமான அழகிய எழுத்து நடை.

வர்ணனைகள், அவற்றிற்கான ஆசிரியர் உணர்த்தும் (அல்லது உணர்த்துவதாக சொல்லப்படும்) குறியீடுகள் போன்ற குழப்பங்களின்றி நிதானமான தெளிவான உரைநடை. பெருமாள்முருகனின் கிராமியக் கதைக்களம் புதிதாகவே இருந்தாலும் விவரிப்புகளின் எளிமையில் சிக்கலின்றி நாம் கதைக்குள் பயணிக்க முடிகிறது. கதை இயல்பாய் தொடங்குவதிலிருந்து கனமான / உணர்ச்சிகரமான முடிவுவரை நாமும் கதைக்குள் இருப்பது போன்ற உணர்வே சுவாரஸ்யமாகிவிடுகிறது. ஒரு கணத்தில் நிகழும் எதிர்வினையால் அதற்கு முந்தைய கணம் வரை இருந்த இயல்புநிலை மீட்டெடுக்க முடியா நிலைக்குப் போவது தெளிவாக இந்த கதைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது, அதன் தாக்கமும் நம் மனதில் பதிகிறது.

பெருமாள்முருகனின் கதைகள் பெரும்பாலும் கிராம வாழ்க்கையையே தம் கதைப்பொருளாகக் கொண்டது. கிராமப்புற எளிமை பற்றி அதிகம் அறியாதவர்கள் வெகு சாதாரணமாக “யாருக்குத்தான் துன்பங்கள் இல்லை?” என்று கடந்து செல்வதுண்டு, ஆனால் இக்கதைகளில் எளியவர்களின் அன்றாட போராட்டங்கள், அவர்கள் கடந்த காலங்கள், அவர்களின் எதிர்காலச் சவால்கள் என ஒட்டுமொத்தமாய் அந்த மனிதர்களின் வாழ்வின் உள்நோக்கை அப்படியே நமக்கு காட்டி அவர்களின் நிலைமீது பெரும் புரிதல் தருகிறது.

இத்தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் கணநேர உணர்ச்சி வெளிப்பாட்டினை மையமாகக் கொண்டதாகவே இருக்கின்றன. சிறுசிறு வார்த்தைகள், செயல்கள் எப்படிப் படிப்படியாக ஒரு பெரும் விளைவினை உண்டாக்குகின்றன என்பதை விவரிக்கும் கதைகள். கண நேரத்தில் பெரும் கோபம், சோகம், விரக்தி போன்றவற்றை ஒரேயொரு நிகழ்வு கொடுத்து விடுவதில்லை. நம் மனநிலை, படிப்படியாக உருவாகும் உணர்ச்சிகள், அதன் போக்கைத் தீர்மானிக்கும் மற்றவரது செயல்கள் என நம் கட்டுப்பாடுகளை தாண்டி நம் செயல்கள், எதிர்வினைகள் வெளிப்படும் தருணங்களை இக்கதைகள் பதிவு செய்கின்றன‌. வன்மம், காமம், பொறாமை போன்ற ஆழ்மனதில் இருந்து ஆட்கொள்ளும் எதிர்மறை உணர்வுகளையும் பேசுகின்றன‌.
திடீர் எதிர்வினையாய் மிகவும் உணர்ச்சிவயப்பட்டு ஆத்திரம், ஆற்றாமை, போன்ற உணர்சிகளைக் காட்டுபவர்களை, அவர்கள் பக்கத்து நியாங்களுடனும் புரிதலுடனும் காட்டுகின்றன இந்தக் கதைகள். புரிந்துகொள்ளும் தன்மை உடைய மக்களும் கூட இத்தகைய எளியவர்களின் உணர்ச்சிச் சலனங்களின் போது அதற்குக் காரணமாய் அவர்களின் அறியாமை, நிதானனமின்மை போன்றவற்றையே சுட்டிக் காட்டுகிறார்கள். பெருமாள் முருகனின் கதைகளில் பயணித்து அவர்களின் வாழ்வை காணும்போது எளிய மனிதர்களின் போலிப் பசப்பற்ற உணர்வுகளை புரிந்துகொள்ளலாம். தங்களது செய்கையில் சரி, தவறு, பாதிப்பு, இழப்பு, நன்மை என எதுவரினும் அந்தந்தச் சூழ்நிலைகளை நேர்மையாய் எதிர்கொள்கிறார்கள். அச்சூழலில் கதைமாந்தர்களுடன் நம்மை ஒப்பிட்டு அவர்களின் மீது வாஞ்சை கொள்ளச் செய்கிறது.

‘இருள்திசை’ எனும் கதை அவ்வப்போது வேலை பளு காரணமாகக் குடித்துவிட்டு வரும் கணவன், அவன் வீட்டிற்கு வராதபோது இருளில் சென்று அவனைத் தேடும் ஒரு பெண் மற்றும் அவளது இரு பிள்ளைகள் பற்றியது. இதில் அந்தப் பெண்ணும் அவள் மூத்த மகனும் சின்ன மகனை வீட்டில் விட்டு கணவனைத் தேடிச் செல்கிறார்கள். இது வாடிக்கையான ஒன்று, பெரிய மகனும் இதற்குப் பழக்கப் பட்டவனாகவே இருக்கிறான். அவர்கள் தேடிச் செல்லச் செல்ல விவரிப்புகளில் அவள் கணவனின் நிலை குறித்தும் இருளில் தேடும் அவர்களின் நிலை குறித்தும், அவர்கள் எதையும் எதிர்பார்த்துச் செல்வதையும் பதைபதைப்புடன் கதை பதிவு செய்கிறது. அவர்கள் ஒருவாறு, கீழே விழுந்து கிடக்கும் கணவனை தேடிக் கண்டுபிடித்து வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். ஆசுவாசமான அந்தக் கணத்தில் வீட்டிலிருந்த சிறிய மகன் இருளில் தாயைத் தேடி அழுது அழுது மயங்கியிருப்பதாய், எதிர்பாரா ஒரு துன்ப அதிர்வோடு கதை முடிகிறது. இக்கதையில் தொடக்கம் முதலே இருக்கும் பதைபதைப்பு ஒரு கட்டத்தில் முடிந்ததாய் ஆசுவாசம் அடையும்போது, அடுத்த சோகம் காத்திருக்கிருந்து, அந்தப் பெண்ணுக்காக இரங்க வைக்கிறது.

‘கோம்பைச் சுவர்’ கதை முத்துப்பாட்டார் எனும் கவலையில்லா வயது முதிர்ந்த ஒருவரை ஆட்கொள்ளும் பொறாமைத் தீ பற்றியது. எந்தக் கவலையுமின்றி படுத்ததும் உறங்கும் வரம் பெற்றவர் அவர். அதைப் பற்றி கேட்கும் அனைவரிடத்தும் கவலையில்லாமல் இருப்பதும் கடும் உழைப்புமே தனக்கு இவ்வரத்தைத் தருவதாக பெருமையாக கூறிக்கொள்வார். அந்த ஊரில் அவருக்குச் சிநேகமான ஓர் இளைஞன் வயல் வேலைகளையும் பார்த்துக்கொண்டு, நூல் மில் வேலைக்கும் சென்று ஊருக்கு ஒதுக்குப்புறமாக அவரது ஓலை கொட்டாயின் அருகே ஒரு வீடு கட்டுகிறான். அவரிடமும் அடிக்கடி யோசனை கேட்பான், முத்துப்பாட்டாரும் அவனுக்கு யோசனைகள் சொல்கிறார். தன் காலத்தில் இதுபோல வீடு கட்டமுடியாது என்று நினைத்தவாறே தன் மகன்களிடம் வீடு கட்டச் சொல்கிறார், அவர்கள் வசதி இல்லை என்று சொல்லி மறுத்து விடுகின்றனர். முத்துப்பாட்டார் அந்த இளைஞனுடன் சகஜமாக பேசினாலும், கண் முன்னே வளரும் அந்த வீட்டின் கட்டுமானப் பணி அவருக்குள் படிப்படியாகப் பொறாமையை உண்டாக்குகிறது. சமீபமாய் நோய் போல் வந்திருக்கும் தூக்கமின்மையும் அவரைப் படுத்துகிறது. ஓர் இரவு அந்த வீட்டிற்குச் சென்று உயர்ந்து வந்து கொண்டிருக்கும் சுவற்றை இடித்துவிட்டு வந்த பின்னர் அவர் தூங்குவதாகக் கதை முடிகிறது. மேற்பரப்பில் எல்லாம் சரியாக இருந்தாலும் அடி ஆழத்தில் படரும் பொறாமைத்தீ, அதனால் ஒருவரின் குணமே மாறிப்போகும் வெளிப்பாடு ஆகியவை தெரிகிறது.

‘நல்ல கெதி’ எனும் கதை ஒரு தாய் மற்றும் இரண்டு மகன்கள் பற்றியது. தினக்கூலியான தாய் வேலையில்லாத ஒரு நாளில் காலை எழுந்தது முதல் மகன்களை அக்கறையாய்க் கவனிக்கிறாள். அவர்களும் எப்போதோ கிடைக்கும் இது போன்ற சந்தர்ப்பங்களை இன்பமாய் அனுபவிக்கிறார்கள். கம்பு மாவு இடிப்பது, பழையதை தாய் கையால் கரைத்துச் சாப்பிடுவதென அன்றைய நாள் நகர்கிறது. பக்கத்து வீட்டுப் பாட்டி, ‘உனக்கு சிங்கக்குட்டிகளாய் மகன்கள்,’ எனும்போது பூரித்துப் போகிறாள். ஒரு துக்க நிகழ்விற்கு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கிளம்பும்போது அடுப்பில் வெந்து கொண்டிருக்கும் சோற்றைப் பார்த்துக் கொண்டு, எங்கேயும் போகாமல் வீட்டிலேயே விளையாடுமாறு மகன்களிடம் கூறி விட்டுச் செல்கிறாள். அவள் சென்றதும் சோற்றைக் காவல் காத்துக் கொண்டிருந்த மகன்கள் மெல்ல விளையாட்டால் ஈர்க்கப்பட்டு ஒவ்வொருவராய்ச் சென்றுச் விடுகிறார்கள். அவள் திரும்பும் போது சோற்றைப் பானையுடன் நாய்கள் எடுத்துச் சென்று தின்று விட்டதைப் பார்த்ததும் ஆவேசம் கொள்கிறாள். இரண்டு நாட்களுக்கான சோறு, பழகிய பானை என எதிர்பாரா இழப்புகளினால் ஆவேசம் கொண்டு மகன்களை அடிக்கிறாள். ஆத்திரம் தீர அடித்துவிட்டு, ஒரு பெண் குழந்தை இருந்தால் வீட்டு வேலையில் உதவியிருக்கும், எனக்கு நல்ல கெதி கிடைத்திருக்கும் என அழுவதாய்க் கதை முடிகிறது. அந்தத் தாயின் கோபம் நியாயமானதாய் இருந்தாலும் கோபத்தால் அவளுக்குக் கூடுதல் வருத்தமே மிஞ்சுகிறது.

பெரும்பாபாலும் நாம் பின்விளைவுகளை எண்ணிப் பல்வேறு சூழ்நிலைகளுக்கும் மனதைத் தயாராகவே வைத்திருக்கிறோம். பிறரின் எதிர்வினையை யூகிப்பது, திட்டமிடுவது, ஏன் உணர்சிகளைக் கூட ஒத்திகை பார்த்து வைத்துக் கொள்வது வரை செய்கிறோம். அதனால் பாசாங்கற்ற எதிர்வினை சில நேரம் முதிர்ச்சியற்றதாய்த் தெரிகிறது. ஆவேசம், சோகம், சரி செய்ய முடியாத இழப்பு போன்ற சம்பவங்கள் நிகழும் இவ்வாறான கதைகளில் மேலோட்டமாகப் பார்த்து அவர்களின் அறியாமை / நிதானமின்மையை சுட்டிக் காட்டி மாற்று வழிகளை, கருத்துகளைக் கூறிவிட முடியும். ஆனால் இந்தக் கதைமாந்தர்களை ஆரம்பப் புள்ளியிலிருந்து அதற்கான மடை திறப்பு வரை உள்ள விவரிப்புகளைப் படித்து, அவர்களது நிலை உணர்ந்து அந்தச் சம்பவங்களைக் காணும் போது அதற்கான நியாங்கள் புரிகின்றன.‌ எதிர்பார்ப்புகளுக்கோ, திட்டமிடுதலுக்கோ அவகாசம் இன்றி தினசரி வாழ்வை அதன் போக்கிலேயே சென்று கையாள்கிறார்கள்.

‘வேப்பெண்ணெய்க் கலயம்’ கதை ஒரு பாட்டிக்கும் கொள்ளுப் பேரனுக்கும் இடையிலான பாசத்தைப் பற்றியது. வேலைச் சூழ்நிலை காரணமாக வெளியூர் செல்லும் பேத்தி தனியே வசிக்கும் பாட்டியிடம் தன் ஆறு வயது மகனை வேறு வழியின்றி விடுமுறைக்கு விட்டுச் செல்கிறாள். பாட்டியும் இந்த வயதில் தன்னால் இப்படியொரு உபயோகமென மகிழ்ந்து ஒப்புக் கொள்கிறாள். பேரனுக்கு சுதந்திரமான கிராமம், பாட்டியின் பக்குவமான சமையல், விளையாட்டு எல்லாம் பிடித்துப் போகிறது. எல்லாம் சரியாய் இருந்தும் பாட்டியால் பேரன் விளையாடும் போது பார்த்துக் கொள்ள முடியாமல் போகிறது. மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து மரம் ஏறுதல் போன்ற அபாயகரமான விளையாட்டுகளின் போது கவலை கொள்கிறாள். எல்லாப் பிள்ளைகளும் கிணற்றில் விளையாட ஆரம்பித்ததும் பாட்டியால் பேரனைத் தடுக்கவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை. தன்னால் அவனைக் கவனித்துக் கொள்ள முடியாது என்று நினைத்து பக்கத்து ஊரிலிருக்கும் மற்றொரு பேத்தி வீட்டில் சிறுவனை விட்டுவிட கூட்டிச் செல்கிறாள். உற்சாகமாய் வந்த அவன் உண்மை தெரிந்ததும் கோப‌ப்பட்டு மறுக்கிறான். வேறு வழி ஓடி பாட்டியைப் பிடிக்கச் சொல்லிச் சிரிக்கிறான். பாட்டியும் அவனைப் பின்னே துரத்திச் செல்வதாகக் கதை முடிகிறது. வேப்பெண்ணெய்க் கலயம் எப்போதாவது உதவுவது போல் மிகவும் வயது முதிர்ந்த பாட்டி உபயோகப்படுவதும் அதனால் பாட்டிக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எளிய மனிதர்களின் இன்பங்கள் நெகிழச் செய்பவை. எதிர்மறைச் சூழ்நிலைகளை எப்படி அவர்கள் திட்டமிடாமல் கையாள்கிறார்களோ அதேபோல் அவர்களுக்கு முற்றிலும் தகுதியான இன்பங்களைக்கூட அவர்கள் திட்டமிடுவதோ, எதிர்பார்ப்பதோ இல்லை. அதனால் அவை மேலும் மதிப்புடையவையாகி நெகிழச் செய்கின்றன‌
கோபம், சோகம், காமம், குற்ற உணர்வு, பொறாமை, மகிழ்ச்சி என உணர்வுகளை அதன் கன‌ம் குறையாமல் பதிவு செய்கின்றன பெருமாள்முருகனின் கதைகள். கதையோடே பயணிப்பதால் முடிவிற்குப் பின் அதன் தாக்கம் நமக்குள் எதிரொலிக்கிறது. அந்த ஒரு கணத்தின் மாறுதல்களை, பாதிப்பைப் பற்றி யோசிக்க வைக்கின்றன. நம் குணத்திலிருந்து நல்லபடியாகவோ கெட்டபடியாகவோ மாறுபட வைக்கும் அந்தக் கணம் எப்போதும் வரலாம். இந்தக் கதைகளை படிக்கையில் நம் மெல்லிய உணர்வுகளின் சிறுசிறு மாற்றங்களை கவனித்துச் சுதாரித்துக் கொள்ள மனதைப் பழக்கப்படுத்திக் கொள்ளத் தோன்றுகிறது.

| வேப்பெண்ணெய்க் கலயம் | சிறுகதைகள் | பெருமாள்முருகன் | காலச்சுவடு | ஜூலை 2012 | ரூ.190 |

***

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book