1

: Editor’s Choice

நிகழத் தவறிய‌ உரையாடல்

சமகாலத் தமிழ் எழுத்தாளர்களுள் முக்கியமானவர் பெருமாள்முருகன். 90களின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கி இன்று வரையிலும் கோலோச்சி வரும் வெள்ளி விழாக்காரர்களையே நான் இங்கு சமகால எழுத்தாளர்கள் எனக் குறிப்பிடுகிறேன். வடமேற்குத் தமிழக‌த்தின் வட்டார வழக்கில் அப்பகுதி மக்களின் பல்வேறு காலகட்ட வாழ்வியலை, கலாசாரத்தை விவரித்தும் தான் வேறுபடும் இடங்களில் விமர்சித்தும் பெருமாள்முருகன் எழுதியுள்ள புதினங்கள் நவீனத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தவிர்க்க இயலாதவை.

தமிழ் மின்னிதழ் பற்றி ஆரம்பச் சிந்தனை எழுந்த 2014 டிசம்பர் மாதத்திலேயே இதழின் முகமாய், பிரதான அடையாளமாய் இருக்கப் போவது சமகால எழுத்தாளர்களின் நேர்காணல்கள் என்பதை முடிவு செய்தேன். அதனோடு இணைந்தே முடிவானது முதல் மூன்று நேர்காணல்கள் எவருடையவை என்பதும். அதன்படியே முதலிரண்டும் நடந்தேறின. மூன்றாவதாய் பெருமாள்முருகன். இடையே மாதொருபாகன் சர்ச்சைகளும் அதையொட்டி எழுத்தாளர் பெருமாள்முருகன் இறந்து விட்டான் என அவரே அறிவித்ததும் நிகழ்ந்தன.

சர்ச்சைகள் தவிர்த்துப் பேசுவோம் என அவரை நேர்காணல் செய்ய முயன்றதும் தோல்வியில் முடிந்தது. இம்முறை வேறு யாரையாவது நேர்காணல் செய்யலாம், அடுத்த முறை மீண்டும் பெருமாள்முருகனை முயலலாம் என்று இதழின் அலோசனைக் குழுவில் எழுப்பப்பட்ட நியாயமான சிபாரிசினை மறுத்தேன். என் மனதில் எழுப்பியிருந்த வரிசையைக் கலைக்க விருப்பமில்லை. ஒன்று அவர் நேர்காணலுடன் இதழ் வரும், அல்லது எவர் நேர்காணலும் இடம்பெறாமலே வெளிவரட்டும் எனப் பிடிவாதமாய் இருந்தேன்.

பிற்பாடு நேர்காணலுக்கு மாற்றுச் சமரசமாய் பெருமாள்முருகன் சிறப்பிதழாய் இதழைக் கொண்டு வரலாம் எனச் சமாதானம் கொண்டேன். நண்பர்கள், முக்கியஸ்தர்கள் எனக் கலந்து கட்டி அவரைப் பற்றி பல்வேறு தரப்பு பார்வைகளும் இதில் பதிவாகி இருப்பதாக உணர்கிறேன். அவ்வகையில் தொகுப்பு நிறைவளிக்கிறது. ஒரு முக்கிய முயற்சியில் என்னோடு தோள் கொடுத்து இதில் பங்களித்தவ‌ர்கள் அனைவருக்கும் நன்றி.

சுதந்திர தினத்தை ஒட்டி வெளிவரும் இதழ் படைப்புச் சுதந்திரம் மறுக்கப்பட்ட ஓர் எழுத்தாளனுக்கு சிறப்பிதழாக அமைவது நகைமுரண் மட்டும் என்பதாகத் தேங்காமல் நிஜ சுதந்திரமாக விரும்புகிறேன்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book