ஆகஸ்ட் முதல் வாரத்தில் மும்பை புறநகர் பகுதிகளில் உள்ள சில இரு நட்சத்திர ஹோட்டல் மற்றும் லாட்ஜ்களில் மால்வன் மாவட்டக் காவல்துறை ரெய்ட் நடத்தி பொதுமக்களுக்குத் தொந்தரவு எனக்கூறி அங்கு தங்கி இருந்த மணமாகாத ஜோடிகளைக் கைது செய்து அழைத்துப் போய் அவர்கள் பெற்றோருக்குத் தகவல் சொல்லி இருக்கிறார்கள். இது தனி நபர் உரிமைகளுக்கு எதிரான அராஜக நடவடிக்கை என ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு வலுக்க, விசாரணை ஒன்று முடுக்கி விடப்பட்டு முதல் கட்டமாய் போலீஸ் செய்தது பிழை தான் என விசாரணை அதிகாரி ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்தியா என்ற சுதந்திர தேசத்தில் பரஸ்பரம் சம்மதம் கொண்ட எவரும் எவருடனும் உறவு கொள்ளலாம் என்று தான் அரசியல் சாசனம் கூறுகிறது. இடம், பொருள், ஏவல் முக்கியம் என்றாலும் இச்சம்பவத்தில் பூங்கா, கடற்கரை, திரையரங்கு போன்ற பொதுமக்கள் (குறிப்பாய் வயது வராதோர்) புழங்கும் இடங்களில் அவர்க‌ள் இதை நிகழ்த்தவில்லை. அதனால் இதற்கு public nuisance / indecent behaviour என்று பட்டமளிக்க எந்த‌ முகாந்திரமும் இல்லை. தமிழ் இதழ் இந்தத் தனி நபர் அத்துமீறலுக்கு எதிரான தன் கண்டனங்களை இங்கு அழுத்தமாய்ப் பதிவு செய்கிறது. ஆனால் இதில் அதிக கவனம் பெறாத மற்றுமொரு கோணமுண்டு.

பிடிபட்ட ஜோடிகளில் ஒன்று தாங்கள் நிச்சயதார்த்தம் முடிந்தவர்கள் என்கிறது; தான் விலைமகள் அல்ல, ஏன் இந்த இழிவுக்கு ஆளாக வேண்டும் எனக் கேட்கிறாள் ஒரு பெண். இன்னொரு பையன் தன் தந்தைக்கு இதைச் சொன்னதால் அவர் முகத்திலேயே விழிக்க முடியவில்லை என்கிறான். இவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் விஷயம் ஒன்று தான்: நான் கலவி கொள்ள விரும்புகிறேன். ஆனால் அது யாருக்கும் தெரிய வரக்கூடாது, ஏனென்றால் இது சமூக விதிகளின்படி அத்துமீறல். எனக்கு இந்தச் சமூகத்தின் நல்ல பையன் / ஒழுக்கமான பெண் முத்திரையும் வேண்டும், உடல் தேவையையும் தீர்த்துக் கொள்ள வேண்டும்.

கலாசாரக் காவலர்கள் என்று போலீசாரை எதிர்க்கும் நேரத்தில் அதே கலாசாரத்தைக் கெட்டியாகப் பிடித்த படி தானே இருக்கிறோம்! அந்த ஜோடிகளில் ஒருவர் கூட “ஆம், நாங்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டோம். அதில் மறைக்க ஏதுமில்லை. எங்கள் அந்தரங்கத்தில் தலையிட்டு இதைப் பொதுவெளியில் சொல்ல வைத்தவர்கள் தான் இதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.” என்று ஏன் சொல்லவில்லை?

காரணம் நாம் ஒரு விஷயத்தின் இரு எதிர்முனைகளையும் கட்டி இழுத்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு கலாசாரத்துக்குக் கட்டுப்பட்டவன் என்ற நற்சான்றும் வேண்டும், ரகசியமாய் அக்கலாசாரத்தை உடைத்து எறியவும் வேண்டும். உதாரணமாய் கைது செய்யப்பட்டவர்களில் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு கலவி செய்தர்கள் அல்லது கள்ளக்காதலர்களே பெரும்பான்மை என்பது என் அனுமானம். அவர்கள் நாளை இதை எல்லாம் மறைத்தபடி இன்னொருவரைப் புன்னகையுடன் மணம் செய்வர். இன்று இந்தக் கூடலும் வேண்டும், நாளை ஒழுக்கமான ஆள் என்ற சான்றிதழுடன் மண வாழ்க்கைக்கும் பாதுகாப்பும் வேண்டும்.

நம் எதிர்பார்ப்பு முரண்பட்டு இருக்கும் போது அடிப்படைவாதிகள் அத்துமீறத் தான் செய்வார்கள். அவர்கள் மட்டுமல்ல, நம் ரகசியம் அறிந்த சாதுவானவர்களும் சந்தர்ப்பம் வாய்த்தால் அயோக்கியத்தனம் செய்வர்.

வேண்டியது கலாசாரமா, வெளிப்படைத்தன்மையுடன்‌ விடுதலையா என நாம் முடிவு செய்ய வேண்டும்.

License

Icon for the Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License

தமிழ் : சுதந்திரம் - 2015 இதழ் Copyright © 2015 by சி. சரவணகார்த்திகேயன் is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License, except where otherwise noted.

Share This Book